ஈரான் போரில் கணிதம் செய்யும் மாயாஜாலம்!
மேற்காசியாவில் நடைபெற்று வரும் உக்கிரமான தாக்குதலுக்கு "ட்ரூ ப்ராமிஸ் 4" என்று ஈரானும், "ஆபரேஷன் எபிக் ப்யூரி" என்று அமெரிக்காவும் என்றும் பெயரிட்டு கடந்த ஒருவாரமாக கடுமையாக மோதிவருகின்றன. இப்போரில் ஈரான் நாட்டு இராணுவம் தங்கள் நாட்டின்மீது ஏவப்பட்ட 645 ட்ரோன்களையும், 165 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையும் வானிலேயே இடைமறித்து அழித்துவிட்டதாக ஐக்கிய அமீரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டிடம் இருப்பதுபோல் ஏவுகணைகளைத் தடுப்பதற்கான அயர்ன் டோம் (Iron Dome) பாதுகாப்பு வளையம் இல்லாதபோது அமீரகம் எப்படி ஈரானிய ஏவுகணைகளைத் தாக்கி அழித்தது என்ற கேள்விக்கு 'கணிதம்' தான் முக்கியப்பங்காற்றியுள்ளதாக அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
என்னதான் மதமும், கடவுள் நம்பிக்கையும் அதிகமிருந்தாலும், போர் என்று வந்தபின்பு தங்கள் நாட்டு மக்களைக் காப்பாற்ற கடவுளின் துணையை விட அறிவியல் மற்றும் கணிதத்தின் துணையையே அதிகம் நம்புகின்றது. தற்போது இருப்பது ஈரான்-அமெரிக்க நாடுகளிடையே நடந்துவரும் போரில் இது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இப்போரில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் "தாட்". உலகின் ஐந்து நாடுகளிடம் மட்டுமே உள்ள அதிநவீன ஏவுகணயின் பெயர்தான் "தாட்" (THAAD - Terminal High Altitude Area Defense). தாட் எனும் ஏவுகணைப் பாதுகாப்புப் பொறிமுறை தான் அமீரகத்தைப் பெரும் நாசத்திலிருந்து காப்பாற்றியுள்ளது. அனைத்து விதமான தொழில்நுட்பங்களுக்கும் அடிப்படையாக இருப்பது கணிதம் தான். இன்றைய தேதியில் பாதுகாப்புத்துறை சம்மந்தமான ஆயுத உற்பத்தியில் கணிதம் எப்படி முக்கியப்பங்காற்றுகிறது என்பதை மாணவர்கள் உணர்ந்து கணிதப் பாடத்தைப் அணுகுவது கணிதத்தின் மீதான ஆர்வத்தை வளர்க்கும்.
கணிதத்தின் கண்கட்டு வித்தையையும், அறிவியலின் அவசியத்தையும் ஈரான் - அமெரிக்கப் போர் உணர்த்துகிறது. எந்த கணிதத்தைக் அடிப்படையாகக் கொண்டு, மனிதகுலத்தை நாசம் செய்யும் ஏவுகணைகள் உருவாக்கப்படுகின்றனவோ, அதே கணிதப்பயன்பாடுதான் அதனிலிருந்து காப்பாற்றவும் வழி சொல்கிறது. எப்படி என்பதைப் பார்ப்போம்.
ஐக்கிய அமீரகம், பல்லடுக்கு ஏவுகணைப் பாதுகாப்புப் பொறிமுறையைப் (Multi-layer Missile Defence System) பயன்படுத்தி வருகிறது. அது என்ன பல்லடுக்கு ஏவுகணைப் பாதுகாப்புப் பொறிமுறை? ஒரேயொரு பாதுகாப்புச் சுவரை வைத்திருக்காமல், பல அடுக்குகளாகப் பல சுவர்களைக் அமைத்து வைத்திருக்கும் யுக்தி. இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமா? கிரிக்கெட் விளையாட்டில் ஒரு விக்கெட் கீப்பர் இருப்பது போதாதென்று . 1,2,3 ஸ்லிப் பீல்டர்கள் வைப்பார்களல்லவா? ஒருவர் தவறவிட்ட பந்தை அடுத்தவர் பிடிப்பார். அவர் விட்டால் அடுத்தவர். அதுபோல.
எதிரிகளின் ஏவுகணைகளைத் தடுப்பதற்கு, மூன்று முக்கிய அடுக்குகளாகத் தடுப்புச் சுவர்களை ஐக்கிய அமீரகம் அமைத்திருக்கிறது.
முதலாவது THAAD (Terminal High Altitude Area Defense) என்னும் அதியுயர் பாதுகாப்புச் சுவர்.
இரண்டாவது ‘பாட்ரியோட்’ ஏவுகணைகள் (Patriot PAC-3).
மூன்றாவது ட்ரோன்களுக்கான மின்னணுச் சமிக்ஞையில் இயங்கும் பாதுகாப்புச் சுவர்.
உயரமான முதல் அடுக்கில் ஏவுகணைகள் தகர்க்கப்படாமல் தப்பிவிட்டால், உயரம் குறைந்த இடத்தில் பாட்ரியோட் ஏவுகணைகள், அவற்றைச் சந்தித்துத் தகர்க்கும். பாட்ரியோட் ஏவுகணைகள் பல உயரங்களில், பல அடுக்குகளில் எதிரிகளின் ஏவுகணைகளைச் சந்திக்கத் தயாராக இருக்கும். ‘தாட்’ (THAAD) இடம் தப்பும் எதிரிகளின் ஏவுகணைகள் பாட்ரியோட்டின் தாக்குதல்களில் தப்ப முடியாது.
இங்கு நாம் பார்க்க வேண்டியது அமீரகத்தின் மிகமுக்கியத் தடுப்பான ‘தாட்’ (THAAD) பற்றித்தான்.
ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள், வான எல்லையின் உயரமான பாதையில் நகர்ந்து வரும்போதே, ‘தாட்’ (THAAD), தன் வழிமறிக்கும் எதிர் ஏவுகணைகளை சதிப்பதற்கு அனுப்பும். எந்த உச்சத்தைப் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தொடுகின்றனவோ, அதே உச்சத்தில் அவற்றை சந்தித்துக் கைகுலுக்கி அழிக்கும். இது எப்படிச் சாத்தியம் என்பதைப் புரிந்து கொண்டாலே அறிவியலின் கணிதப் பேராற்றலையும் புரிந்து கொள்ளலாம்.
ஈரானிலிருந்து ஏவப்படும் பாலிஸ்டிக்குகள் இரண்டு, மூன்று நிமிடங்களிலேயே அதன் உச்ச உயரத்தை அடைந்துவிடும். 'தாட்' அவற்றை அழிக்க முயற்சிக்கும் இடமும் அந்த உச்ச இடம்தான். அப்படியென்றால், பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்ட அதே கணத்தில் 'தாட்'டின் எதிர் ஏவுகணைகளும் ஏவப்பட்டால் மட்டுமே அந்த உச்சத்தில் இரண்டும் சந்திக்க முடியும். அதாவது, ஈரான் எப்போது தன் ஏவுகணையை ஏவுகிறதோ, அதே சமயத்திலேயே அதைத் தாக்கும் எதிர் ஏவுகணைகளும் ஏவப்பட வேண்டும். அப்படியானால்தான் இரண்டும் உச்சப் புள்ளியில் சந்திக்க முடியும்.
இது எப்படிச் சாத்தியம்?
ஈரான் ஏவுகணையை ஏவுகிறது என்று துபாயிலிருக்கும் ‘தாட்’ (THAAD) எப்படித் தெரிந்து கொள்கிறது? இங்குதான் அறிவியலும் கணிதமும் உள்நுழைகின்றன.
ஒரு ஏவுகணையோ, விண்கலமோ (Rocket) பூமியிலிருந்து ஏவப்படும்போது, அவற்றிலிருந்து எழும் நெருப்பு மண்டலத்தையும், வெப்பத்தையும் இதற்கெனப் பிரத்தியேகமாக வானில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சாட்லைட்கள் இனம் கண்டு கொள்கின்றன. அந்த ஏவுகணைகள் புறப்படும் வேகம், திசை, அசைவு போன்றவற்றைத் துல்லியமாக அவை கணித்துக் கொள்கின்றன. அடுத்த நொடியில், துபாயில் இருக்கும் ‘தாட்’ (THAAD) பொறிமுறைக்கு இந்தத் தகவல்கள் அனுப்பப்படுகிறது. அதைவைத்துத் தான் முறியடிக்கும் ஏவுகணையை எந்தத் திசையில், என்ன வேகத்தில், எப்படி அனுப்ப வேண்டும் என மீண்டும் கணக்கிடுகிறது தாட். அனைத்தும் ஓரிரு நொடிகளில் நடந்து முடிக்கப்படும் கணிதங்கள்.
உதாரணமாக, தென் ஈரானிலிருந்து துபாய் வரை உள்ள தூரம் சுமார் 200 கிலோமீட்டர் மட்டுமே. ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை 3 முதல் 5 நிமிடங்களில் இலக்கை அடையலாம். அந்தக் குறுகிய நேரத்தில் அவற்றைக் கண்டறிந்து, கணக்கீடு செய்து, வழிமறித்துத் (interception) தாக்க வேண்டும். தேவை, துல்லியம் கொண்ட வேகமான கணிதம்.
எதிரியின் ஏவுகணை தாக்கப் புறப்பட்டுவிட்டதை அறிந்து, அவற்றை வானிலேயே அடித்து நாசமாக்கும் (Hit to Kill) தொழில் நுட்பத்தில் பறக்க ஆரம்பிக்கும் எதிர் ஏவுகணைகள். வானிலேயே எதிரியின் ஏவுகணைகளை வெடித்துச் சிதற வைக்கும். அதனால், கீழே விழுவதெல்லாம் அவற்றின் துண்டுகளாக மட்டுமே இருக்கும். வெடிபொருட்களாக எதுவும் கீழே விழாது. Hit to Kill என்பது மேலேயே ஏவுகணைகளை வெடிக்கச் செய்யும் முறை.
ட்ரோன்களின் கதையே வேறு. மெதுவாகவும், குறைந்த உயரத்திலும் பறக்கும் ட்ரோன்கள் ராடார்களில் சிக்காது. அவற்றைத் தடுக்க, விமான எதிர்ப்பு அமைப்புகளான மின்னணுத் தடுப்பு (jamming) முறை பயன்படுத்தப்படுகின்றன.
துபாய் இன்னும் அழியாமல் இருப்பதற்குக் காரணம் அதிர்ஷ்டம் அல்ல. அது கொண்டிருக்கும் தொழில்நுட்பம். அத்தொழில் நுட்பத்தின் கணிதம். அது முன்கூட்டியே கொடுக்கும் எச்சரிக்கை. மொத்தத்தில் அறிவியல்.
ஈரான்-அமெரிக்க இடையிலான போரில் ஆக்கலும், அழித்தலும் செய்வது இறைவனல்ல அறிவியலே என்பது தெளிவாகிறது.

