🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வி.பிரபு நோட்டரி பப்ளிக் ஆக நியமனம்!

தலைநகர் புதுடெல்லியில் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திரு,V.பிரபு மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய சட்ட அமைச்சகம் சார்பில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட பட்டியலின்படி தமிழகத்தைச் சேர்ந்த 3617 வழக்கறிஞர்களை நோட்டரி பப்ளிக் ஆக அறிவித்துள்ளது. மேலதிக விவரம் வருமாறு, 

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வி.பிரபு சில காலம் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரிடம்  ஜூனியராகப் பணியாற்றி வந்தார். இவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக சென்னையில் இருந்தபோது வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சட்ட ஆலோசகர்களில் ஒருவராக இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு டெல்லி சென்ற பிரபு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு புதுச்சேரி மாநில அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார்.  இவருக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற இராஜகம்பள சமுதாய நலச்சங்க குடும்பவிழாவில் முன்னத்தி ஏர் வழிகாட்டும் தலைமுறை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது உச்சநீதிமன்றத்திலும், டெல்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் நடத்திவரும் வழக்கறிஞர் பிரபு , 2021- இல் நோட்டரி பப்ளிக் நியமனத்திற்கு விண்ணப்பித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் மத்திய சட்ட அமைச்சகம் 2018 முதல் 2023 வரையிலான 5 ஆண்டு காலத்தில் விண்ணப்பித்தவர்களில் வழக்கறிஞர் வி.பிரபு உட்பட 3617 பேர்களை மத்திய அரசு நோட்டரி பப்ளிக் ஆக அங்கீகரம் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் ஆக ஆங்கீகரம் பெற்றுள்ள வழக்கறிஞர் பிரபு அவர்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க தலைவர் செ.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நோட்டரி பப்ளிக் குறித்து சிறு விளக்கம்:

நோட்டரி பப்ளிக் சட்டம் - The Notaries Act, 1952, 53/1952  பிரிவு 3 ன்படி மத்திய அரசு இந்தியா முழுமைக்குமோ, அல்லது இந்தியாவின் ஒரு பகுதிக்கோ, அதேபோல் மாநில அரசுகள் மாநிலம் முழுமைக்குமோ அல்லது மாநிலத்தின் ஒரு பகுதிக்கோ வழக்கறிஞராக பணியாற்றுபவரையோ அல்லது அரசு நிர்ணயிக்கும் தகுதி உடையவரையோ நோட்டரி பப்ளிக்காக நியமிக்கலாம்.

நோட்டரி பப்ளிக் என்றால் என்ன?

பல்வேறு சந்தர்ப்பங்களில், நம்மிடம் இருக்கும் அசல்ஆவணங்களின் பிரதிகளை (Xerox) அரசாங்கம், கோர்ட், இதர நிறுவனங்கள் என்று பலருக்கும் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.அப்போது அசல் (Original) ஆவணங்களை கொடுப்பது சாத்தியமில்லை. எனவே அவற்றின் பிரதிகளை (அந்தக் காலத்தில் டைப் செய்யப்பட்ட நகல்கள்) ஜெராக்ஸ் பிரதிகளாக சமர்ப்பிக்கலாம்.

ஆனால், நாம் கொடுக்கும் பிரதிகள் உண்மை நகல்கள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்?.

இது உண்மையான நகல் என்று நமக்கு நாமே உறுதி அளித்துக் கொள்ள முடியாது. அங்கீகரிக்கப்பட்ட, பொறுப்பான வேறு ஒருவர்தான் அதைச் செய்ய முடியும். அவர் தான் 'நோட்டரி பப்ளிக்', ஆவணங்கள் உண்மை நகல் என்று இவர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்தால் அது சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் தகுதியைப் பெற்றுவிடுகிறது.

இன்னும் சில விஷயங்களில் சட்டப்படி, முத்திரைத்தாளில் பிரமாணமாக எழுதி, கையெழுத்திட்டு சமர்ப்பிப்பார்கள். சாட்சிகள் முன்னிலையில் அப்படிக் கையெழுத்திட்டு, சமர்ப்பித்தாலும் கூட, ஒரு நோட்டரி பப்ளிக், என் முன்னிலையில் இன்னார், இன்ன தகவல்கள் இடம் பெறும்படியான பிரமாணத்தில் கையெழுத்திட்டார் என்று சான்றொப்பம் இடவேண்டும். அப்போதுதான் அந்த பிரமாணத்துக்கு சட்ட பூர்வமான அங்கீகாரம் கிடைக்கிறது.

"நோட்டரி பப்ளிக்' ஆவது எப்படி?

வழக்கறிஞர்களாக குறைந்த பட்சம் ஏழு வருடங்கள் பயிற்சி செய்தவர்கள் மட்டுமே நோட்டரி ஆவதற்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பத்தை மூத்த நோட்டரிகள் இரண்டு பேர் சிபாரிசு செய்து கையெழுத்திட வேண்டும்.

பிறகு அதற்குரிய கட்டணம் செலுத்தி மாவட்ட நீதிபதியிடம் சமர்பிக்க வேண்டும். அவர் அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியானவற்றை சிபாரிசு செய்து அரசாங்கத்துக்கு அனுப்பி வைப்பார்.

வழக்கறிஞர்கள் நோட்டரி ஆவதற்கு விண்ணப்பித்திருக்கும் போது, இவர்கள் நோட்டரி ஆவதில் யாருக்கேனும் ஆட்சேபணை இருக்குமானால், அரசாங்கத்துக்குத் தெரிவிக்கலாம்' என்று கெசட்டில் அறிவிப்பு வெளியாகும். ஆட்சேபணை ஏதுமில்லாமல், மற்ற அம்சங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த வழக்கறிஞர்கள் நோட்டரியாக நியமிக்கப்படுவார்கள்.

இப்படி நியமிக்கப்படுபவர்கள் நோட்டரியாக செயல்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட நகரம், மாவட்டம் அல்லது மாநிலம் என்று வரையறை செய்யப்படும். அவரவர்கள் தமக்கு குறிப்பிடப்பட்ட எல்லைக்குட்பட்ட பகுதிக்கான விஷயங்களில் மட்டுமே நோட்டரியாக செயல்பட முடியும். மாநில அரசிடம் மட்டும் அனுமதி பெற்ற செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த நோட்டரி ஒருவர், புதுக்கோட்டை டாக்குமெண்டை அட்டஸ்ட் செய்ய முடியாது.

ஆனால், ஒரு வழக்கறிஞர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் அலுவலகங்கள் வைத்துச் செயல்பட விரும்பினால் அவர் ஆல் இந்தியா நோட்டரியாக செயல்பட மத்திய, அரசிடம் அனுமதி பெறவேண்டும். முன்பெல்லாம் நோட்டரியாக செயல்பட ஒருவருக்கு மூன்றாண்டுகள் அனுமதி அளிக்கப்படும்.  மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அந்த அனுமதியைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இப்போது விண்ணப்பிக்கும்போதே ஐந்து வருடங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன் பிறகு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொண்டால் போதுமானது, இதற்கும் கட்டணம் உண்டு. 

நோட்டரி பப்ளிக் ஆவதினால் பயன் என்ன?

'அஃபிடவிட்' என்று சொல்லப்படும் பலவிதமான பிரமாணப் பத்திரங்களை நோட்டரி, அட்டஸ்ட் செய்யலாம்.  ஒருவருடைய உயிலின் பிரதிகளை, சொத்து டாக்குமென்ட்களை `உண்மை நகல்' என்று அட்டஸ்ட் செய்யலாம்.

ஒருவர் பெயரில் இருக்கும் டெலிஃபோனை அவரது வாரிசுதாரருக்கோ அல்லது அவரது விருப்பத்தின் பேரில் வேறு ஒருவருக்கோ மாற்றும் போது, அந்த ஒப்பந்தத்தை அட்டஸ்ட் செய்யலாம்.

வங்கிகளுக்கோ, இதர நிறுவனங்களுக்கோ அளிக்கும் இன்டம்னிடி பாண்டுகளை அட்டஸ்ட் செய்யலாம்.

அமெரிக்கா போன்ற அயல் நாடுகள் செல்லும் போது நீங்கள் அமெரிக்காவுக்குப் போய் அங்கேயே தங்கிவிட மாட்டீர்கள்; இந்தியாவுக்கு திரும்பி வந்துவிடுவீர்கள்; அதற்கான அவசியம் உங்களுக்கு இருக்கிறது என்று எடுத்துச் சொல்வதுபோல் சில அஃபிடவிட்கள் கொடுக்க வேண்டும். அவற்றுக்கு நோட்டரியின் அட்டஸ்டேஷன் அவசியம். மேலும் ஆண்டுக்கு ஒரு முறை, ஒவ்வொரு நோட்டரியும், தாங்கள் அட்டஸ்ட் செய்த டாகுமென்ட்களின் விவரங்களை, அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஒரு விதிமுறையும் இருக்கிறது.

துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள், வந்து சேர வேண்டிய குறிப்பிட்ட தினத்தில் வராமல் தாமதமாக வந்து சேர்ந்தால், அந்தக் கப்பலின் கேப்டன் காலதாமதத்துக்கான காரணங்களை குறிப்பிட்டு, ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

அந்நிய நாட்டிலிருந்து வரும் கப்பலின் கேப்டனுக்கு இங்கே இருக்கும் நோட்டரியை எப்படித் தெரிந்திருக்கும்...?

அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தக் கப்பலுக்குரிய லோக்கல் ஏஜென்ட் மூலமாக அடையாளம் கண்டு நோட்டரி பிரமாணப் பத்திரத்தை அட்டஸ்ட் செய்வார்.

மேலும் சில முக்கியமான பணிகள்:

1. எழுதப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து, அதாவது அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் சரிதானா என்பதை பார்த்து, அதை எழுதிய நபர்தான் கையொப்பம் இட்டுள்ளாரா என்பதை எல்லாம் சரிபார்த்து சான்று செய்தல்.

2. எந்தவொரு நபருக்கும் சத்திய பிரமாணம் என்ற உறுதிமொழி செய்வித்தல் (Administer Oath) அல்லது அவர்களிடமிருந்து உறுதிமொழிப் பத்திரம் வாங்குதல் (Affidavit).

3. ஒரு ஆவணத்தை ஒரு மொழியிலிருந்து வேறு ஒரு மொழிக்கு மொழி பெயர்த்தல். அவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட ஆவணங்கள் சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்தல்.

4. நீதிமன்றமோ அல்லது அதைப்போல அதிகார மையமோ கட்டளையிட்டால், உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் ஆணையராக இருந்து சாட்சியங்களை பதிவு செய்தல்.

5. தேவைப்படும் போது பஞ்சாயத்தாரராகவோ அல்லது மத்தியஸ்தம் செய்பவராகவோ செயல்படுதல்.

நோட்டரி பப்ளிக் ஆவதற்கு தேவையான தகுதிகள் என்ன?

1. வழக்கறிஞராக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது

2. தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது மலை ஜாதியினர் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவராக இருந்தால், வழக்கறிஞராக குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது

3. பெண் வழக்கறிஞர்கள் என்றால் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது

4. மத்திய அரசின் சட்டத்துறை பணிகளில் பணியாற்றுபவராக இருக்க வேண்டும் அல்லது

5. வழக்கறிஞராக பதிவு செய்த பிறகு, மத்திய அரசிலோ அல்லது மாநில அரசிலோ சட்ட அறிவு தேவைப்படும் பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது

6. நீதித்துறை பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது

7. நீதிபதி அல்லது தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அல்லது இராணுவ இலாகாவின் சட்டத்துறை இவற்றுள் ஏதேனும் ஒன்றில் அலுவலராக பணியாற்றி இருக்க வேண்டும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved