கடைசி நிமிடம் வரை போராடிய கலையரசன்! வென்றது சாதியா? பணமா?
17வது தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே கூட்டணிகளை இறுதி செய்வதில் கட்சிகளும், போட்டியிட வாய்ப்புப் பெறுவதில் கட்சியினரும் மும்முரம் காட்டிவந்தனர். ஒருவழியாகக் கூட்டணியையும் இறுதி செய்து வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளன ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும்.
இதற்கிடையே இம்முறை எப்படியும் நம்மவரில் யாராவது ஒருவர் வேட்பாளராகிவிடுவார் என்று எதிர்பார்த்துக்காத்திருந்த இராஜகம்பளத்தார் சமுதாயத்திற்கு வழக்கம்போல் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றுவிட கடுமையாக முயற்சி செய்த கலையரசன், இறுதி நொடிகளில் வாய்ப்பை இழந்த சோகம் கரூர் உள்ளிட்ட மேற்கு மாவட்ட இராஜகம்பள சமுதாய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் விவரம் வருமாறு,

2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் இராஜகம்பளத்தார் சமுதாயத்திலிருந்து முதல் வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பில் சூலுர் தொகுதியில் எஸ்.இராஜசேகரன் என்பவர் களமிறக்கப்பட்டு தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாமக்கல் மாவட்டம் ஆவல்நாயக்கன்பட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட இராஜசேகரன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட விரும்பி விடுமுறை எடுத்துக்கொண்டு தமிழகம் திரும்பியவர் வாய்ப்பையும் பெற்றுவிட்டார்.
எனினும் திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளில் தான் கம்பளத்தார்கள் அதிக அளவில் உள்ளாட்சி பொறுப்புகளிலும், ஒன்றியச் செயலாளர் போன்ற குறிப்பிடும்படியான பொறுப்புகளிலும் உள்ளனர். சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சியில் இளைஞர்கள் அதிகம் சேர்ந்த நிலையில் ஓரிருவர் தவிர குறிப்பிடும்படியான பொறுப்புகளில் யாரும் நியமிக்கப்படவில்லை. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஆளும்கட்சியான திமுகவில் ஓரிருவர் மட்டுமே விருப்பமனு கொடுத்திருந்தனர். அந்தவகையில் திமுக பிரமுகர்கள் ஆட்ட களத்திற்குள்ளே செல்லாமல் "அவுட்" ஆகிவிட்டனர். எனினும் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாண்டி விருப்பமனு அளித்த அந்த "ஓரிருவர்" துணிச்சலையும் பாராட்டத்தான் வேண்டும். அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்.

அதிமுகவைப் பொறுத்தவரை இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்திருந்தனர். இதில் மூத்த தலைவர்களான திரு.கலாநிதி, திரு.வரதராஜன், திரு. தனஞ்செயன் முதல் இளம் தலைவர்களான கலையரசன், காசிராஜன் வரை பலர் அடக்கம். இதில் பலரும் ஏதோ பெயரளவில் விருப்பமனு கொடுக்காமல், உண்மையிலேயே "சீட்" வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் முயற்சி எடுத்ததைப் பார்க்க முடிந்தது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதியாக விருதுநகர், அரவக்குறிச்சி தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. விருதுநகர் தொகுதிக்கு இராஜகம்பளத்தார் சமுதாயத்திலிருந்து பலர் விருப்பமனு அளித்திருந்த நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் அக்கட்சியின் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியச் செயலாளர் கோ.கலையரசன் மட்டுமே விருப்பமனு அளித்திருந்தார்.
இடைவிடாத களப்பணிக்காக அனைத்துக் கட்சியினராலும் எப்போதும் பாராட்டப்படுபவராக கலையரசன் இருந்துவருவதை அரசியலைத் தெரிந்தவர்கள் நன்கறிவர். ஆட்சியை இழந்த அதிமுகவில் நிலவிவந்த உட்கட்சிப் பூசலால் கட்சியை வைத்து கோடி கோடியாக சம்பாதித்த முன்னாள் அமைச்சர்கள் முதல் ஒன்றியச் செயலாளர்கள் வரை "சைலண்ட் மோடு"க்கு போய்விட்ட நிலையிலும், தனது ஒன்றியத்தில் மட்டும் அதிமுகவை "உயிர்ப்புடன்" வைத்திருந்த ஒரே ஒன்றியச் செயலாளர் கலையரசன் என்பதை எந்த மனசாட்சி உள்ள எந்த அதிமுககாரரும் ஏற்றுக் கொள்வார். இத்தனைக்கும் கலையரசன் அதிமுகவில் இணைந்து சில ஆண்டுகள் தான் ஆகியிருந்தது.

ஓய்வறிய களப்பணியால் கட்சிக்கும், தலைமைக்கும் தீவிர விசுவாசத்தைக் காட்டிவந்த கலையரசன், சென்றமுறை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிட்டு தோற்ற அரவக்குறிச்சி தொகுதியில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட்டு அதிமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டுமென்ற முனைப்பில் கடந்த ஒருவருட காலமாக தன் சக்திக்கு மீறி தீவிரமாகப் பணியாற்றிவந்தார். 30000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தான் சார்ந்த தொட்டிய நாயக்கர் சமூக வாக்குகளும், பாஜக கூட்டணியில் இருந்தாலும் கலையரசனுக்காக வாக்களிக்கும் பள்ளபட்டி பகுதி முஸ்லீம் வாக்குகளும், இதர சிறுபான்மை சாதி, மொழி சிறுபான்மை வாக்குகளும் கலையரசனுக்கு பலமாக இருந்தது. இதனை கருத்துக்கணிப்புகளும் உறுதி செய்துவந்தன.
எனினும் சாதியும், பணமும் கலையரசனுக்கு தடையா? என்ற விவாதம் எழாமல் இல்லை. அந்த இடத்தில் அரசியல் கணக்கொன்று பேசப்பட்டது. அதாவது, எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் அதிமுக சென்றுவிட்ட பிறகு, அதிமுக முழுக்க முழுக்க குறிப்பிட்ட சாதிக்கான கட்சியாக முத்திரை குத்தப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல் கொங்குமண்டலத்தில் காலங்காலமாக அதிமுகவின் வாக்கு வங்கியாக இருந்து வந்த அருந்ததியர் வாக்குகள் கூட இப்போது வேறுகட்சிகளுக்கு மாறிவிட்டது என்பதை அரசியல் விமர்சகர்கள் புள்ளி விவரங்களோடு சொல்வதுண்டு.

இவ்வாறான நிலையில், காலங்காலமாக கொங்கு சமுதாய மக்களோடு மிக இணக்கமாக வாழும் தொட்டிய நாயக்கர் சமுதாயம் மட்டும் எடப்பாடியாரை சாதியக்கண்ணோட்டத்தோடு அணுகியதில்லை என்பதை கட்சியிலிருந்து விலகிச்சென்றவர்கள் பட்டியலைப் பார்த்தால் தெரியும். தொட்டிய நாயக்கர் சமுதாயம் கொங்கு மண்டலத்தில் மட்டுமல்லாது, அதிமுக பலவீனமாக உள்ள முக்குலத்தோர் அதிகம் வாழும் தென் மாவட்டங்கள் பலவற்றிலும் பரவலாக வாழும் சமுதாயம். எனவே தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த கலையரசன் ஒருவரை வேட்பாளராக அறிவிப்பதன் மூலம், தன் மீதான சாதிக்கறையை அகற்றுவதற்கும், தொட்டிய நாயக்கர் சமூகவாக்குகள் ஒருங்கிணைந்து அதிமுக-வுக்கு பலம் சேர்க்கும். குறிப்பாக கொங்கு வெள்ளாளக் கவுண்டர் தொகுதியாக அறியப்படும் அரவக்குறிச்சி தொகுதியில் கவுண்டர் சமூகமும் ஆதரித்து சாதி-மொழி சிறுபான்மை வேட்பாளர் ஒருவர் வெற்றிபெருவாரேயானால், இதைக்காட்டியே தானும், தான் சார்ந்த "கவுண்டர்" சமூகமும் ஆதிக்க சாதியல்ல, அனைவரையும் அரைவணைக்கும் சாதி என்பதை நிரூபிக்க முடியும் என்ற கருத்துகள் பறிமாறப்பட்டது.
மேற்படி கருத்துகளும் அக்கட்சியின் முக்கியத்தலைவர்களால் அலசி ஆராயப்பட்டு, "பண பலம்" தவிர்த்து வேட்பாளர் ரேஸில் கலையரசன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவந்தார். தொகுதிக்கு ஐநூறு, ஆயிரம் வாக்கு வாங்கும் கட்சிகளையெல்லாம் கூட்டணியில் சேர்த்து, "நோட்டு"களையும், "சீட்"டுகளையும் வாரி வழங்கும் கட்சிகளுக்கு, தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு "சீட்" கொடுத்து, கட்சியே தேர்தல் செலவு செய்வதொன்றும் பெரியவிசயமில்லையே. ஆகையால் நேற்று வேட்பாளர் பட்டியல் வெளிவரும் கடைசி நிமிடம் வரை அரவக்குறிச்சி வேட்பாளர் "கலையரசன்" என்று கரூர் மாவட்ட அதிமுகவினரால் உறுதி செய்யப்பட்டது.

ஆனால், வேட்பாளர் பட்டியல் வெளிவந்தபோதுதான் "பண பலம்" காரணம் காட்டி, தகுதி பின்னுக்குத் தள்ளப்பட்டு, "சாதி" முன்னிடம் பெற்றது தெரியவந்தது. வெளிப்படையாக "சாதி"யைக் காரணம் காட்டமுடியாது என்பதால் எந்தப்புள்ளியில் "கலையரசன்" வீக்காக உள்ளாரோ அதையே காரணமாகச் சொல்லி வேட்பாளர் ரேஸில் முன்னனியில் இருப்பவரைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதை சமூகம் உணந்துகொண்டது. இதனால் கடும் "அப்செட்"க்கு உள்ளானது கலையரசனைக் காட்டிலும் இராஜகம்பளத்தார் சமூகம் தான். ஏற்கனவே சிறுபான்மையினர் வாக்குகளை இழந்த அதிமுக மைனசில் தனது கணக்கைத் தொடங்குவதாகச் சொல்வதுண்டு, இப்போது கூடுதலாக கரூர், அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர்களுக்கு தொட்டிய நாயக்கர் சமூக வாக்குகளையும் பறிகொடுத்து தனது மைனஸ் வாக்குகளை அதிகப்படுத்தியுள்ளது அதிமுக தலைமை.
இது அம்மையார் காலத்து அதிமுக அல்ல, "சாதி கட்சி" தான் என கம்பளத்தாரும் உணரத்தொடங்கிவிட்டனர் என்றே "கரூர்" கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அதிமுக தலைமையும், வேட்பாளர்களும் என்ன சொல்லி சமாதானப்படுத்தப்போகிறார்கள் என்று தெரியவில்லை. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
எப்படி ஆகினும் தனது பலவீனத்தை அறிந்தும் கட்சிக்கு இறுதிவரை விசுவாசமாக இருந்து, இறுதிவரை ரேஸில் இடம்பிடித்த கலையரசனின் போராட்ட குணத்தை பாராட்டுவோம்.

