🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விளாத்திக்குளத்தில் இராஜகம்பளத்தார் விசில் பறக்கட்டும்!

17-வது தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் போட்டியிடும் பிரதானக் கட்சிகள் அனைத்தும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. பெரிய கட்சிகளான திமுக, அதிமுக இராஜகம்பள சமுதாய மக்களை எப்போதும்போல் இப்போதும் புறக்கணித்துள்ள நிலையில், முதல் தேர்தல் களத்தைச் சந்திக்கவுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், இராஜகம்பள சமுதாயத்தை அங்கீகரிக்கும் வகையில் விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த இராஜகம்பள சமுதாய மக்களின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் தவெக தலைவர் விஜய். இது பற்றிய விவரம் வருமாறு,

பரபரப்பாகியுள்ள சட்டமன்றத் தேர்தல் களத்தில் வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட எப்போதும் இல்லாத அளவில் இம்முறை அதிக அளவில் திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளில் இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்தோர் விருப்பமனு அளித்திருந்தனர். பாஜக சார்பில் நேரடியாக விருப்பமனு விநியோகிக்கப்படவில்லை என்றாலும், ஒருசிலர் "சீட்" பெறுவதற்கான "லாபி"யில் தீவிரமாக இறங்கியது இராஜகம்பளத்தார்கள் அரசியலில் அடுத்த அடியை எடுத்துவைத்துள்ளது தெளிவாகத் தெரிந்தது. 

திமுக-வினர் விருப்பமனு அளித்து கட்சியில் "கம்பளத்தாரின் இருப்பை" தலைமையிடம் வெளிப்படுத்தியுள்ளனர். அதிமுக-வைப் பெறுத்தவரை விருப்பமனு அளித்தவர்களில் ஒருசிலர் 'சீட்" பெறுவதில் தீவிர முயற்சிகளில் இறங்கியது சமுதாய மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. எனினும் இரண்டு "பெரிய அண்ணன்"களும் வழக்கம்போல் பெருஞ்சாதி, பெரும் பணக்காரர்களுக்கு "சீட்" வழங்கி வேட்பாளர்கள் தேர்வு "சடங்கை" முடித்து, மற்றவர்களுக்கு வழக்கம்போல் "சங்கூதி" விட்டனர்.


எனினும், இந்தத் தேர்தலில் "பெரிய அண்ணன்கள்" அஞ்சி நடுங்கும் "விஜய் அண்ணா"வின் தவெக-வில் இதுவரை அரசியல் வாய்ப்பற்ற பலதரப்பட்ட சாதி மற்றும் மொழி சிறுபான்மை சாதியினருக்கு நிச்சயம் வாய்ப்புக் கிட்டும் என்று அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் நேற்று காலை சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள நட்சத்திர விடுதியில் தவெக வேட்பாளர் பட்டியலை விஜய் வெளியிட்டார். இப்பட்டியலில் மாற்றுக்கட்சியில் இருந்துவந்த மூத்த தலைவர்கள் முதல் விஜய் ரசிகர் மன்றத்திலிருந்துவந்த சாமானியன் பெயர் வரை இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் சிறப்பம்சமாக திமுக, அதிமுக போல் "பெரும்பான்மை சாதி"களின் வேட்பாளர் பட்டியலாக இல்லாமல் உண்மையான சமூகநீதி வேட்பாளர் பட்டியலாக இருந்தது தமிழக அரசியலுக்கு பல புதுமுகங்களை அறிமுகம் செய்துவைத்துள்ளது.

விஜய் தனது 'விக்கிரவண்டி' முதல் மாநாட்டு மேடையில் தமிழகத்தின் பல்வேறு ஆளுமைகளின் புகைப்படங்கள் இடம்பெற்றது. அதில் "வீரபாண்டிய கட்டபொம்மன்" புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. அப்போதே தமிழகத்தில் வாழும் 40 லட்சம் இராஜகம்பள சமுதாய மக்களின் கவனத்தை விஜய் ஈர்த்திருந்தார். மாநாட்டில் புகைப்படங்களைப் பார்த்த "முற்போக்குவாதிகள்" பலர் சாதிக்கொரு தலைவர்களை வைத்து விஜய் அரசியல் செய்யவதாக  விமர்சித்தாலும், சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்தும் "பெரிய அண்ணன்"களை இந்த "முற்போக்கு வியாதிகள்" கேள்வி கேட்பதே இல்லை என்பதை மறந்துவிடக்கூடாது.

மேலும், விஜய் கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே அவரது கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்டபொம்மனாரின் நினைவு நாளில் வீரவணக்கம் செலுத்தியிருந்தார். அப்போதே விஜய் தன் அரசியல் திட்டமிடலில் இராஜகம்பளத்தார்களும் அடக்கம் என்பதை உணர்த்தியது. கம்பளத்தார்கள் விழுந்து விழுந்து ஆதரிக்கும் விஜயகாந்த் ஒருமுறை கூட கட்டபொம்மனுக்கு மரியாதை செய்தவரல்ல என்பதையும் இந்த இடத்தில் சமுதாயம் நினைவில் கொள்ளவேண்டியது அவசியம். 

இவ்வாறான நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் விருப்பமனு அளித்திருந்தனர். அதில் கட்சியின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவிலான வேட்பாளர்கள் இருவர் மட்டுமே மிஞ்சினர். அந்த இருவரும் விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு விருப்பமனு அளித்திருந்த காரணத்தால் இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. இல்லையெனில் இரண்டு தொகுதிகள் இராஜகம்பளத்தார்க்கு கிடைத்திருக்கும். இதில் நல்ல விசயம் என்னவெனில் இறுதிப்போட்டியில் கம்பளத்தார் இருவரும் தங்களுக்குள் யாருக்குக் கிடைத்தாலும் சரி என்ற ஒற்றுமையை வெளிப்படுத்தி வாய்ப்பைப்பெற்றுள்ளது பாராட்டுக்குறியது.

விளாத்திக்குளம் தொகுதியில் தவெக சார்பில் "விசில்" சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு பெற்றுள்ள திரு.பொன்.காசிராம், புதூர் அருகேயுள்ள கட்டத்தளாம்பட்டி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது புதூரில் வசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. திரு.பொன்னுச்சாமி - திருமதி.சுப்பம்மாள் தம்பதியினரின் மகனான 45 வயது நிறம்பிய காசிராம் ஐடிஐ படித்துள்ளார். விவசாயம் மற்றும் கட்டுமான ஒப்பந்தப் பணிகளில் ஈடுபட்டுவரும் பொன்.காசிராமுக்கு திருமதி.தீபா (எ) பாப்பாத்தி என்ற மனைவியும், அனுஸ்ரீ, அஜய் சரண் ஆகிய இரு குழந்தைச் செல்வங்களும் உள்ளனர். விஜய் ரசிகர் மன்றத்திலிருந்து அரசியலுக்கு வந்தவரான பொன்.காசிராம், தவெக-வின் புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளராகவும் தற்போது தூத்துக்குடி வடக்கு கிழக்கு மாவட்ட இணைச்செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த பலர் பல தலைமுறைகள் தாண்டி திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்து வரும் நிலையில் 40 லட்சம் மக்கள்தொகை கொண்ட சமூகத்திற்கு உரிய அரசியல் அங்கீகாரம் வழங்க அக்கட்சிகள் தவறிவிட்டன. எனினும் அரசியலுக்குப் புதிதென்றாலும் கம்பளத்தார்களை அரசியல் உலகிற்கு அடையாளப்படுத்த தவெக தலைவர் விஜய் வழங்கியுள்ள வாய்ப்பு இராஜகம்பள சமுதாய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கான நன்றிக்கடனை நிச்சயம் கம்பளத்தார் சமுதாயம் வரும் தேர்தலில் செலுத்தும் என்பதில் இருவேறு கருத்தில்லை.

விளத்திக்குளம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வாய்ப்புப்பெற்றுள்ள பொன்.காசிராம் அவர்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், அருப்புக்கோட்டை இராஜகம்பள சமுதாய நலச்சங்க செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

அதேபோல் இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த எளிய தொண்டர் ஒருவருக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கிய தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் இராஜகம்பள சமுதாய மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved