திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற இராஜகம்பளத்தார் கோரிக்கை!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து திமுக, அதிமுக ஆகிய கட்சிகளிடம் இராஜகம்பளத்தார் சமுதாய அமைப்புகள் கோரிக்கைகள் வைத்திருந்தன. வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் திமுக தேர்தல் தயாரிப்புக்குழுவிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு,
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் வெளியிடுவது வாடிக்கை. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன என்ன விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போகிறோம், எதையெல்லாம் நிறைவேற்றப்போகிறோம் என்பதை தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியல் கட்சிகள் மக்களிடம் எடுத்துச்சொல்லி வாக்குகள் சேகரிக்கும். இந்திய அளவில் தமிழக அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் அதிகம் கவனம் பெறுவதோடு, இதில் இடம்பெற்றுள்ள பல்வேறு சிறப்பம்சங்களை பிற மாநிலத் தேர்தல்களின்போது 'காப்பி' அடித்து பிற கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. முன்பு திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட "இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி" அறிவிப்பு அப்போதைய தேர்தலின் 'கதாநாயகன்' என்று பாராட்டப்பட்டது. அதேபோல் ஜெ.தலைமையிலான அதிமுகவுக்கு மிக்ஸி, கிரைண்டர், டேபிள் பேன் வாக்குறுதி அக்கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இதன் தொடர்ச்சியாக 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெளியிட்ட "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை" வாக்குறுதி அதற்கு அடுத்து நடைபெற்ற அனைத்து மாநிலத் தேர்தல்களிலும் எதிரொலித்தது.

இவ்வாறான கவர்ச்சிகரமான 'கை மேல் பலன்' வாக்குறுதிகள் ஒருபுறம் என்றால், நீண்ட கால அடிப்படையில் மக்களின் சமூக,பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படைக் கட்டமைப்புகள் குறித்து அரசியல் கட்சிகள் எம்மாதிரியான திட்டங்களை வைத்துள்ளது என்பதில் தான் ஒரு நாட்டின் அல்லது ஒரு மாநிலத்தின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுகிறது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு சமுதாயத்தின் பங்களிப்பும் அனைத்து துறைகளிலும் இருக்க வேண்டும். அதற்கு கட்சிகளிடம் தேவையான தொலைநோக்குத் திட்டங்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு சமூகமும் வெவ்வேறு படிநிலைகளில் இருப்பதை கவனத்தில் கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் திட்டங்களை கட்சிகள் முன்னெடுக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் தேர்தல் அறிக்கை சமூகத்தின் சூழலையும், தேவையையும் வெளிப்படுத்தும் ஒரு சாசனமாக அமையும். இவ்வாறு விஞ்ஞான அடிப்படையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் முன்னிலை வகிக்கிறது. அக்கட்சியால் நியமிக்கப்படும் பல்துறை அறிஞர்களைக் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல தரப்பினரிடமும் கோரிக்கைகளைக் கேட்டுப்பெற்று, அதன் முக்கிய சாரம்சங்களைத் தொகுத்து தேர்தல் அறிக்கையாக வெளியிடுகிறது. இதில் வெளிநாடுகளில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் திட்டங்களையும் உள்வாங்கிக்கிகொள்வது அக்கட்சியின் சிறப்பம்சங்களில் ஒன்று.

அந்தவகையில் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற மக்களவைக்குழுத் தலைவர் திருமதி.கனிமொழி கருணாநிதி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவினர் சமுதாய அமைப்புகளின் தலைவர்களை அழைத்து அவர்களின் கோரிக்கை குறித்துக் கேட்டறிந்தனர். அப்போது வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் 10 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
அதில் முக்கியமாக, தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபு வகுப்பு மாணவ, மாணவியரில் தகுதியுடையோர் வெளிநாடு சென்று உயர்கல்வி பயில்வதற்கு வழிவகை செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து திமுக தனது தேர்தல் அறிக்கையில் 18-வது தலைப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கான வாக்குறுதி வரிசை எண் 2 இல், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபு வகுப்பினர் உயர்கல்வியை வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பெறுவதை ஊக்குவிக்க ஒரு சிறப்புத்திட்டம் துவங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியரின் பயணச்செலவு, கல்லூரிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் சீர்மரபினர் பட்டியலில் இடம்பெறாத ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட கம்பளத்தார்களுக்கும் இத்திட்டத்தின் பயன் சென்றடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், டிஎன்டி சமுதாய மக்களின் மேம்பாட்டிற்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்குவதுபோல் மாநில அரசும் மத்திய அரசுக்கு இணையாக சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதன் சாராம்சத்தை உள்வாங்கி திமுக தனது தேர்தல் அறிக்கை 18 (3)-இல் ஜவுளி, தோல், ஆடை, கைவினை, கணினி, தொழிற்பயிற்சி போன்ற துறைகளில் மேற்படி பிரிவினருக்கு பயிற்சி வழங்கப்பட்டு சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் உறுதிபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் 10-அம்ச கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கையின் சாரம்சங்களை தனது தேர்தல் அறிக்கையில் இடம்பெறச்செய்த திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவினருக்கும், திமுக தலைவருக்கும் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

