🔴 LIVE | முப்பெரும் விழா 2023


டிஜிடல் சிறையில் மனிதகுலம்; உலகை அச்சுறுத்தும் பூதம்.

தொழில்நுட்ப உலகில் பல நிறுவனங்கள் லாபத்திற்காக இயங்குகின்றன. ஆனால், ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே உலகையே மாற்றும் வல்லமை (மற்றும் ஆபத்து) கொண்டவை. 

அந்த வரிசையில் இன்று உலகெங்கும் விவாதிக்கப்படும் ஒரு பெயர்: Palantir Technologies.

சமீபத்தில் நெதர்லாந்தின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதியமான ABP, இந்த நிறுவனத்தில் வைத்திருந்த €825 Million மதிப்பிலான பங்குகளை மொத்தமாக விற்று ஐரோப்பாவை விட்டு வெளியேறியுள்ளது. சுவிட்சர்லாந்து இந்த நிறுவனத்தை பெரும் ஆபத்தாக கருதி தன்நாட்டுக்குள் வரவிடாமலே விரட்டியடித்துள்ளது. 

ஒரு லாபகரமான நிறுவனத்தை சில நாடுகள் ஏன் இப்படிப் புறக்கணிக்கிறது? அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான உண்மைகள் என்ன? 

Palantir என்பது வெறும் மென்பொருள் நிறுவனம் அல்ல; இது ஒரு 'தரவு வேட்டைக்காரன்' (Data Miner). JRR Tolken-இன்  Lord of the Rings கதையில் வரும் 'Palantir' (எல்லாவற்றையும் பார்க்கும் மாயக் கல்) என்ற பெயரையே இதற்கு வைத்துள்ளனர். 

பெயருக்கேற்றார் போல, உலகெங்கும் சிதறிக் கிடக்கும் தரவுகளை ஒன்று சேர்த்து, யாராலும் கண்டுபிடிக்க முடியாத ரகசியங்களைத் துல்லியமாகக் கண்டறிவதுதான் இதன் வேலை.

இவர்கள் நம்மை எப்படி கவனிக்கிறார்கள் என்பது தெரிந்தால் அதிர்ந்து போய் விடுவீர்கள். 

நாம் இணையத்தில் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு தடயத்தை விட்டுச் செல்கிறது. Palantir-ன் Gotham மற்றும் Foundry போன்ற மென்பொருட்கள் பின்வரும் தரவுகளை ஒன்று சேர்க்கின்றன:

        - உங்கள் வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள்.

        - சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் தொடர்புகள்.

        - டிஎன்ஏ (DNA) தகவல்கள் மற்றும் மருத்துவக் குறிப்புகள். 

        - சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் பயண விவரங்கள். 

இந்தத் தரவுகளைப் பயன்படுத்தி, ஒரு நபர் எங்கே இருக்கிறார், அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை ஒரு டிஜிட்டல் வரைபடமாக இவர்களால் உருவாக்க முடியும். இதுதான் இவர்களை 'உலகின் மிகவும் பயங்கரமான AI நிறுவனம்' என அழைக்க வைக்கிறது.

Palantir நிறுவனத்தை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர் Peter Thiel, இவர் உலகப்புகழ் பெற்ற 'PayPal' நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் Facebook-ன் ஆரம்பகால முதலீட்டாளர் ஆவார்.

2003-ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் பின்னணியில் ஐந்து முக்கிய நபர்கள் உள்ளனர்:

1. Peter Thiel: முதலீட்டாளர் மற்றும் மூளையாகச் செயல்பட்டவர்.

2. Alex Karp: தற்போதைய CEO (தலைமை நிர்வாக அதிகாரி).

3. Stephen Cohen

4. Joe Lonsdale

5. Nathan Gettings

இந்த Palantir technology உருவாக மிக முக்கிய காரணமாக இருந்தது 9/11 தாக்குதல். 2001-செப்டம்பர்'11 அமெரிக்காவில் “False Flag“ தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்தைத் தடுக்க ஒரு சக்திவாய்ந்த தொழில்நுட்பம் தேவை என்று Peter thiel  கருதினார்.

அரசிடம் நிறையத் தரவுகள் (Data) இருந்தன. ஆனால் அவை வெவ்வேறு துறைகளில் சிதறிக் கிடந்தன. CIA வைத்திருந்த தகவலுக்கும், FBI வைத்திருந்த தகவலுக்கும் தொடர்பு இல்லாமல் இருந்தது.

PayPal-ல் பணப் பரிமாற்ற மோசடிகளைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்திய அதே நுட்பத்தைப் பயன்படுத்தி, சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் ஒரு மென்பொருளை உருவாக்கினர்.

அமெரிக்காவின் உளவு அமைப்பான CIA-ன் முதலீட்டு நிறுவனமான 'In-Q-Tel' தான் இந்த நிறுவனத்திற்கு ஆரம்பகால நிதியை வழங்கியது. இதிலிருந்தே இந்த நிறுவனம் எவ்வளவு ரகசியமானது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

Palantir-ன் மிகவும் பிரபலமான மற்றும் "ஆபத்தான" மென்பொருள் Gotham ஆகும். இது பெரும்பாலும் அரசு மற்றும் உளவு அமைப்புகளுக்காக வடிவமைக்கப்பட்டது. ஒரு நாட்டில் ஒரு பயங்கரவாதச் சதி நடக்கப் போவதாக வைத்துக்கொள்வோம். Gotham மென்பொருள் பின்வருவனவற்றைச் செய்யும்.

முதலில் அந்த நாட்டில் உள்ள லட்சக்கணக்கான சிசிடிவி காட்சிகள், விமானப் பயணப் பதிவுகள், வங்கிப் பரிமாற்றங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை அது ஆராயும்.

உதாரணத்திற்கு, ஒரு நபர் சந்தேகத்திற்குரிய ஒருவரிடம் போனில் பேசுகிறார்.அதே நபர் ஒரு குறிப்பிட்ட கடையில் ஒரு இரசாயனப் பொருளை வாங்குகிறார்.அடுத்த நாள் அவர் ஒரு எல்லையைக் கடக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். 

இந்தத் தனித்தனித் தகவல்களை இணைத்து, "இந்த நபர் இன்ன இடத்தில், இன்ன நேரத்தில் தாக்குதல் நடத்த 80% வாய்ப்புள்ளது" என்று அதிகாரிகளுக்கு வரைபடம் (Map) மற்றும் வரைபடத் தொடர்புகளுடன் (Network Graph) Gotham காட்டும்.

நாம் படங்களில் பார்ப்பது போல, ஒரு கணினித் திரையில் ஒரு நபரின் முழு ஜாதகத்தையும், அவர் யாருடன் தொடர்பு கொள்கிறார் என்பதையும் சில நொடிகளில் Gotham கொண்டு வந்துவிடும்.

Gotham மென்பொருளின் அதீத சக்தியே அதற்கு எதிராகவும் திரும்பியது.

இந்த மென்பொருள் ஒரு குறிப்பிட்ட இனத்தையோ அல்லது சமூகத்தையோ சேர்ந்தவர்களை மட்டும் அதிகமாகக் கண்காணிக்கும் வகையில் (Algorithmic Bias) செயல்பட வாய்ப்புள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

நீங்கள் எந்தக் குற்றமும் செய்யாவிட்டாலும், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவும் ஏதோ ஒரு கணினியில் 'தரவாக' சேமிக்கப்பட்டு, ஆராயப்படுகிறது.

உக்ரைன் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் ராணுவங்கள் எதிரிகளின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கண்டறிய Gotham-ஐப் பயன்படுத்துகின்றன.

நெதர்லாந்தின் ABP நிறுவனம் Palantir-ஐப் புறக்கணிக்க இரண்டு முக்கிய காரணங்களைக் குறிப்பிட்டுள்ளது:

இஸ்ரேல் ராணுவம் காசாவில் மேற்கொள்ளும் தாக்குதல்களில் Palantir-ன் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றன. இலக்குகளைத் தீர்மானிக்கவும், போர் வியூகங்களை வகுக்கவும் இந்த மென்பொருள் உதவுவது மனித உரிமைக்கு எதிரானது என்பதற்காகவும், அமெரிக்காவில் தஞ்சம் புகும் அகதிகளைக் கண்டறிந்து, அவர்களைத் துரத்துவதற்கும், குடும்பங்களைப் பிரிப்பதற்கும் Palantir-ன் தரவுப் பகுப்பாய்வு பயன்படுத்தப்படுகிறது என்பதற்காகவும் நெதர்லாந்தில் இருந்து Palantir நிறுவனம் துரத்தியடிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்கள் Palantir-ஐ ஒரு வெற்றிகரமான முதலீடாகப் பார்க்கின்றன. ஆனால், ஐரோப்பா Palantir-ஐ விரட்டியடிப்பதில் குறியாக நிற்கின்றது. 

"எங்கள் மக்களின் ஓய்வூதியப் பணம், மனித உரிமைகளை நசுக்கும் ஒரு கருவிக்கு எரிபொருளாக இருக்கக் கூடாது" என்ற முடிவை நெதர்லாந்து எடுத்துள்ளது. 

இது வெறும் பங்கு வியாபாரம் அல்ல இது ஆபத்தான தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விடப்பட்ட ஒரு நேரடி எச்சரிக்கை.

இன்று ABP வெளியேறியுள்ளது. நாளை ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளின் நிதியங்களும் இதே முடிவை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொழில்நுட்பம் என்பது மக்களின் வாழ்க்கையை எளிதாக்க வேண்டுமே தவிர, அவர்களைக் கூண்டுக்குள் அடைக்கும் கண்காணிப்புக் கருவியாக மாறக்கூடாது என்பதே நெதர்லாந்து Palantir ஐ வெளியேற்றுவதன் நோக்கம். 

உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் பின்னால் ஒரு தரவு இருக்கிறது என்றால், ஒரு நாட்டின் எல்லையில் நடக்கும் போருக்குப் பின்னாலும் இன்று அதே 'தரவு' (Data) தான் இருக்கிறது. 

நீங்கள் ஒரு குற்றவாளியாக இல்லாவிட்டாலும், உங்களின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது. நீங்கள் யாருக்குப் பணம் அனுப்புகிறீர்கள், யாரைச் சந்திக்கிறீர்கள், எங்குப் பயணம் செய்கிறீர்கள் என்பது போன்ற தகவல்கள் "பகுப்பாய்வு" (Analysis) என்ற பெயரில் சேமிக்கப்படுகின்றன. இது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான 'Privacy’ முற்றிலுமாக சிதைக்கிறது.

மென்பொருட்கள் மனிதர்களால் உருவாக்கப்படுபவை. ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களை 'சந்தேகத்திற்குரியவர்கள்' என மென்பொருள் தவறாக அடையாளம் காட்டினால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அப்பாவிகள் அதிகப்படியான போலீஸ் கண்காணிப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாவார்கள். இது சமூகத்தில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தும்.

ஒரு ராணுவத் தாக்குதலில் அல்லது ஒரு நபரைக் கைது செய்யும் நடவடிக்கையில், இந்த மென்பொருள் தவறான தகவலைக் கொடுத்தால் அதற்கு யார் பொறுப்பு? மென்பொருளை உருவாக்கிய நிறுவனமா அல்லது அதைப் பயன்படுத்திய அரசாங்கமா? இந்தத் தெளிவற்ற நிலை "டிஜிட்டல் சர்வாதிகாரத்திற்கு" (Digital Authoritarianism) வழிவகுக்கும்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது Palantir போன்ற நிறுவனங்களுக்கு நாடுகள் போரில் ஈடுபடுவதும், உள்நாட்டுக் கலவரங்கள் நடப்பதும் வணிக ரீதியாக லாபத்தைத் தரும். எனவே, ஒரு நாட்டில் அமைதி நிலவுவதை விடவும், கண்காணிப்புத் தேவையை அதிகரிப்பதே இவர்களின் மறைமுக நோக்கமாக இருக்கக்கூடும், இதற்காக இவர்கள் வேண்டுமென்றே போர்கள், பயங்கரவாத தாக்குதல்களை செய்யக்கூடும். 

தொழில்நுட்பம் என்பது மனித குலத்தின் வளர்ச்சிக்கான ஏணியாக இருக்க வேண்டுமே தவிர, அவனைக் கூண்டில் அடைக்கும் கம்பிகளாக மாறக்கூடாது.

அதிவேகமாக வளர்ந்து வரும் AI மற்றும் தரவுப் பகுப்பாய்வு உலகில், 'பாதுகாப்பு' என்ற பெயரில் நமது அடிப்படை உரிமைகளை நாம் அடகு வைக்கத் தயாராக இருக்கிறோமா? என்ற கேள்விக்கு விடை தேட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 

Palantir போன்ற நிறுவனங்கள் ஒருபுறம் உலகைப் பாதுகாப்பதாகக் கூறினாலும், மறுபுறம் அவை உலகை ஒரு கண்ணுக்குத் தெரியாத டிஜிட்டல் சிறைச்சாலைக்குள் தள்ளுகின்றன என்பதே கசப்பான உண்மை. இறுதியாக நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம், ஆனால் தொழில்நுட்பம் நம்மைப் பயன்படுத்தி நம்முடைய சுதந்திரத்தைத் கட்டுப்படுத்த நாம் அனுமதிக்கக் கூடாது. 

ஏற்கனவே பெகாசஸ் உளவு மென்பொருளாள் எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்காணிக்கப்படுவதாக மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சாதி, மத மோதலை ஊக்குவிக்கும் அதிகார வர்க்கங்களின் கைகளில் இந்தத் தொழில்நுட்பம் கிடைக்கும்போது ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை கற்பனைகூட செய்யமுடியவில்லை. 

இதுவே இன்றைய டிஜிட்டல் யுகத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல்.

நன்றி: முகிந்தன் துரைராஜசிங்கம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved