கோவையில் பிரபஞ்ச அழகி கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை!
2015 இல் மிசஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற டெல்லியைச் சேர்ந்த ரூபி யாதவ் கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள மாவீரர் திலகம் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தர். இதனைத்தொடர்ந்து உள்ளூர் இராஜகம்பளத்தாரைச் சந்தித்து உரையாடிய ரூபி யாதவ் கோவை வடக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக பிரமுகர் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக புறப்பட்டுச் சென்றார். இதுகுறித்த விவரம் வருமாறு,
உத்திரப்பிரதேச மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரூபி யாதவ். மீரட்டில் உள்ள சி.சி.எஸ் பல்கலைக்கழகத்தில் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி (Organic Chemistry) பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 2015-ஆம் ஆண்டு பெலாரஸில் நடைபெற்ற சர்வதேச அழகிப் போட்டியில் 'மிசஸ் யுனிவர்ஸ் மேற்கு ஆசியா' (Mrs. Universe West Asia 2015) பட்டமும், 2013 இல் தேசிய அளவிலான அழகிப் போட்டியில் மிசஸ் இந்தியா குவீன் பட்டமும் பெற்றுள்ளார்.
பெண்கள் உரிமை, குழந்தைகள் நலன் மற்றும் சமூக நீதிக்காகக் குரல் கொடுத்து வரும் ரூபி யாதவ், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தெற்கு டெல்லி தொகுதியில் சுயோச்சையாகப் போட்டியிட்டு 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று கவனம் ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவில் சேர்ந்த ரூபி யாதவ் டெல்லி மாநில பாஜக மகளிரணி துணைத் தலைவராகவும், பாஜக கலாச்சாரப்பிரிவு தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மேலும், தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIFT) ஆளுநர் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக முக்கியத் தலைவரும், தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கோவை வந்துள்ள ரூபி யாதவ், அங்குள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.
தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் சமுதாய மக்களைச் சந்திக்க ஆர்வம் தெரிவித்தார். இதனையடுத்து கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் தலைமையில் ரூபி யாதவைச் சந்தித்துப்பேசினார். இதன் தொடர்ச்சியாக கடந்த வெள்ளியன்று (17.04.2026) பொள்ளாச்சி சென்ற ரூபி யாதவ், பாஜக பிரமுகரும் கோவை தெற்கு மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க பொருளாளருமான தர்மப்பிரகாஷ் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சமுதாய உறவுகளுடன் கலந்துரையாடினார். இதனையடுத்து மீண்டும் நேற்று ஈச்சனாரி சென்ற ரூபி யாதவ் அங்குள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக ஈச்சனாரியில் ரூபி யாதவை இராஜகம்பள சமுதாய நலச்சங்க மகளிரணி ஒருங்கிணைப்பாளர் பாக்கியலட்சுமிம் பாஜக பிரமுகர்கள் வடிவேல், செந்தில், சண்முககுமார் ஆகியோர் சிறப்பான வரவேற்பளித்தனர். பின்னர் ஈச்சனாரி விநாயகரை தரிசித்தபின்பு சமுதாய உறவுகளோடு சிறிது நேரம் கலந்துரையாடிவிட்டு தேர்தல் பரப்புரைக்காகப் புறப்பட்டுச் சென்றார்.
கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய மக்களுடனான ரூபி யாதவ் கலந்துரையாடல், மாலை அணிவித்தல் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளை சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் சிறப்பான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

