🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வல்லரசுகளை கதறவைக்கும் IRGC எனும் நிழல் சாம்ராஜ்ஜியம்!

வரலாற்றின் பக்கங்கள் எப்போதுமே விசித்திரமானவை. சில நேரங்களில் ஒரு நாட்டின் பலம் அதன் பிரம்மாண்டமான ராணுவத் தளவாடங்களின் மூலம் இல்லாமல் எதிரி எதிர்பார்க்காத, பிடிபடாத ஒரு நிழல் அமைப்பு  மூலம் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தையே அது பணியவைக்க முடியும்.

கடந்த பிப்ரவரி 28, 2026 முதல் ஏப்ரல் 8, 2026 வரை, சுமார் நாற்பது நாட்கள் நடந்த அமெரிக்கா - ஈரான் போரில், உலக வல்லரசான அமெரிக்கா, அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட இஸ்ரேல் மற்றும் செல்வாக்கு மிக்க வளைகுடா நாடுகள் என அத்தனை பேருக்கும் சிம்ம சொப்பனமாக ஈரான் திகழ்ந்தது. உலகமே வியந்து பார்க்கும் ஈரானின் இந்தத் துணிச்சலுக்கும், அசைக்க முடியாத எதிர்ப்புக்கும் பின்னால் இருப்பது ஒரே ஒரு சக்திதான்... அது 'இஸ்லாமியப் புரட்சிக் காவல்படை' (Islamic Revolutionary Guard Corps - IRGC)!

அமெரிக்க உளவு அமைப்புகளே "இது ஒரு ராணுவம் மட்டுமல்ல, ஒரு மாபெரும் பொருளாதார, அரசியல், மற்றும் உளவுத்துறைச் சாம்ராஜ்யம்" என்று வர்ணிக்கும் ஐஆர்ஜிசியின் உருவாக்கம், அவர்களின் பலம், மற்றும் இந்த நீண்ட போரில் அவர்கள் வகிக்கும் முக்கியப் பங்கு பற்றி நாம் அலசுவோம்!

பிப்ரவரி 28, 2026. அன்று தொடங்கிய ஈரானியப் போர், ஏப்ரல் 8- வரை ஓயாமல் தொடர்ந்தது. அமெரிக்காவின் அதிநவீன பி-52 ரக விமானங்கள் குண்டுகளை வீசினாலும், இஸ்ரேலின் ஆரோ, பேட்ரியாட், அயர்ன் டோம்  ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தினாலும், ஈரானின் எதிர்ப்பு சக்தி மட்டும் குறைந்தபாடாக இல்லை. வளைகுடா நாடுகளின் எண்ணெய் வயல்களும், துறைமுகங்களும் எப்போது தாக்கப்பட்டன என்று தெரியாமல், ஒருவிதப் பயத்துடனேயே இருந்தன.

இதற்கெல்லாம் ஒரே காரணம்... ஈரான் ராணுவத்தின் முக்கிய அங்கமான ஐஆர்ஜிசி (IRGC)! இவர்கள் யார்? சாதாரண ஈரான் ராணுவத்திற்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? வல்லரசுகளை பணியவைக்கும் இவர்களின் பலம் என்ன? 

1979-ல் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெடித்து, அமெரிக்க ஆதரவு பெற்ற ஷா மன்னர் விரட்டப்பட்டார். ஆயத்துல்லாஹ் கொமேனி தலைமையிலான புதிய இஸ்லாமிய அரசு அமைந்தது. ஆனால், புதிய அரசுக்குப் பயம் இருந்தது. ஷா மன்னருக்கு விசுவாசமாக இருந்த பழைய ஈரான் ராணுவம் ( Artesh என்றழைக்கப்பட்டார்கள்), எப்போது வேண்டுமானாலும் புரட்சிக்கு எதிராகக் கலகம் செய்யலாம் என்று நினைத்தார்கள்.

அந்தப் பழைய ராணுவத்தைக் கண்காணிப்பதற்கும், இஸ்லாமியப் புரட்சியின் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கும் கொமேனி உருவாக்கிய ஒரு 'இரண்டாவது ராணுவம்' தான்... ஐஆர்ஜிசி (ஆரம்பத்தில் 'பாஸ்தரான்' - Pasdaran என்று அழைக்கப்பட்டது)! இது சாதாரண ராணுவத்தைப் போல எல்லையைப் பாதுகாக்க மட்டும் உருவாக்கப்படவில்லை. புதிய இஸ்லாமிய அரசின் ஆன்மாவைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒரு கருத்தியல் ராணுவம் (Ideological Army) ஆகத்தான் கொமேனியால் வடிவமைக்கப்பட்டது.

ஐஆர்ஜிசி என்பது வெறும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் மட்டும் கொண்ட அமைப்பாக இல்லாமல் நான்கு மிக முக்கியத் தூண்களைக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான கட்டமைப்பாக‌ காணப்படுகிறது. 

படைப்பலம்: ஐஆர்ஜிசி-க்குச் சொந்தமாகத் தனித் தரைப்படை, கப்பற்படை, மற்றும் விமானப்படை உண்டு. ஈரானின் மிக அதிநவீன ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்கள் அனைத்தும் ஐஆர்ஜிசி-யின் முழுக் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஹூர்மூஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மிரட்டும் கப்பற்படை, அமெரிக்காவுக்கே பெரிய தலைவலி! 

குத்ஸ் படை: இது ஐஆர்ஜிசி-யின் 'நிழல் ராணுவம்'. ஈரானுக்கு வெளியே உள்ள நாடுகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் மற்றும் அங்குள்ள பினாமி (Proxy) அமைப்புகளை வளர்த்துவிடும் முக்கியப் பணி இவர்களுடையது. லெபனானின் ஹிஸ்புல்லாஹ், யமனின் ஹூத்திகள், இராக்கின் ஷியா கிளர்ச்சிக் குழுக்கள்... என மத்திய கிழக்கு முழுவதையும் ஈரானின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த மாஸ்டர் மைண்ட்கள் இவர்கள்தான்! காசிம் சுலைமானி இந்த அமைப்பின் மாபெரும் தலைவராகத் திகழ்ந்தார்.

பொருளாதாரச் சாம்ராஜ்யம்: ஐஆர்ஜிசி என்பது ஈரானின் மிகப்பெரிய 'ரியல் எஸ்டேட்' மற்றும் 'கார்ப்பரேட்' நிறுவனம்! போன்றது. கட்டுமானத் துறை, எண்ணெய் வயல்கள், வங்கித் துறை, விமான நிலையங்கள்... என ஈரானின் பொருளாதாரத்தின் பல முக்கியத் துறைகள் ஐஆர்ஜிசி-யின் வசம் உள்ளன. இது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைத் திறமையாகத் தாண்டி, தங்களுக்குத் தேவையான பணத்தை உருவாக்கிக்கொள்ள ஐஆர்ஜிசி-க்கு உதவுகிறது.

உள்நாட்டு ஆதிக்கம்: ஈரானின் உளவுத்துறை, காவல் துறை, மற்றும் அரசியல் ரீதியான முடிவுகள் அனைத்திலும் ஐஆர்ஜிசி-யின் ஆதிக்கம் மிக அதிகம். ஈரானின் உச்சத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதால், எந்தச் சட்டமும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது!

இந்த நீண்ட போரில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு ஐஆர்ஜிசி ஒரு சிம்மசொப்பனமாக இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. ஐஆர்ஜிசி, அமெரிக்காவைப்போல நேருக்கு நேர் சண்டையிடாது. மாறாக, தங்கள் பினாமி அமைப்புகள் மூலம் வளைகுடா நாடுகள் மீது ட்ரோன் தாக்குதல்கள், ஏவுகணைத் தாக்குதல்கள், மற்றும் கடல்வழித் தாக்குதல்களை நடத்தும். அமெரிக்கா யாரை அடிப்பது என்று தெரியாமல் குழம்பும். ஐஆர்ஜிசி-யின் கப்பற்படை, நினைத்த மாத்திரத்தில் ஹூர்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டு உலகப் பொருளாதாரத்தையே நிலைகுலையச் செய்யும் திறன் கொண்டது. ஐஆர்ஜிசி-யின் ஏவுகணைகள் வளைகுடா நாடுகள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் எந்தப் பகுதியையும் மிகத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை.

அது போக ஈரானுக்குள் எந்தவித உள்நாட்டுக் கலகமும் வராமல், மிக இரும்புக் கரம் கொண்டு ஐஆர்ஜிசி அடக்குகிறது. 

ஆரம்பத்தில் புரட்சியைக் காப்பாற்ற உருவான ஐஆர்ஜிசி, இன்று ஈரானின் ஆன்மா, உடல், மற்றும் பொருளாதாரம் என அனைத்தையும் ஆக்கிரமித்துள்ளது. அமெரிக்க மற்றும் ஆக்கிரமிப்பு தேசத்தின் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காமெனிக்குப் பிறகு, அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் ஐஆர்ஜிசி மிக முக்கியப் பங்கு வகித்தது. மத்திய கிழக்கு முழுவதும் தங்கள் பினாமி அமைப்புகளை மேலும் பலப்படுத்தி, அமெரிக்காவின் செல்வாக்கை முற்றிலுமாக அகற்றுவதே ஐஆர்ஜிசி-யின் எதிர்காலத் திட்டம். 

இந்த போரில் ஈரான் போருக்கு முந்தைய நிலையிலேயே நீடித்தால் ஈரானின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் தங்களின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, ஈரானிய மக்கள் அனைவருக்கும் ஐஆர்ஜிசி-யை ஒரு 'பொருளாதார மீட்பராக'க் காட்ட அவர்கள் முயற்சி செய்வார்கள்.

வல்லரசு என்பது ஆயுதங்களால் உருவாக்கப்படுவதில்லை. அது மற்ற நாடுகள் தங்கள் மீது வைத்திருக்கும் 'பயத்திலும், நம்பிக்கையிலும்' தான் உருவாக்கப்படுகிறது. சூயஸ் கால்வாயில் பிரிட்டன் தன் பயமுறுத்தும் திறனை இழந்தது. இன்று, ஐஆர்ஜிசி எனும் நிழல் சாம்ராஜ்யம், வளைகுடா மற்றும் ஆக்கிரமிப்பு தேசம் மீதான அமெரிக்காவின் பயமுறுத்தும் திறனைச் சேர்த்தே நிலைகுலையச் செய்து நிற்கிறது. ஆம், ஒரு மதக் கொள்கையின் அடிப்படையில் உருவான ஒரு அமைப்பு, இன்று உலக அரசியலையே மாற்றி அமைக்கும் ஒரு மாபெரும் சதுரங்க ஆட்டக்காரராக உருவெடுத்துவிட்டது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை!

நன்றி:  அப்துல்லா இப்னு நசீர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved