நூற்றுக்கணக்கான கொத்தடிமைகளை மீட்டெடுத்த வீரமங்கை பெல்லி லலிதா!
யார் இந்த பெல்லி லலிதா?
பெல்லி லலிதா தனது குடும்பத்தில் ஏழு உடன்பிறப்புகளில் ஒருவராக பிறந்தவர். அவருக்கு முறையான கல்வி இல்லை; ஒரு பஞ்சாலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்தார்.
25 வயதில் தொழிலாளர்களின் குரலாக உயர்ந்தார், அரசாங்கத்திலும் அதிகாரத்திலும் இருந்தவர்களும் பயப்படுமளவுக்கு அவர் மிகுந்த செல்வாக்கைப் பெற்றவராக வளர்ந்தார்.
பெல்லி லலிதா ஒரு பாரம்பரிய ஒக்கு கதா (Oggu Katha) பாடகி. அவரை அன்புடன் “தெலங்கானாவின் கான கோகிலா” (Telangana Gana Kokila) என்று மக்கள் அழைத்தனர். அவர் தெலங்கானா கலை சமிதி (Telangana Kala Samithi) என்கிற அமைப்பை நிறுவினார்.
முறையான கல்வி இல்லாவிட்டாலும், பஞ்சாலைத் தொழிலாளியாக இருந்த தனது வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் எழுதியும் பாடியும் வந்தார். அந்த பாடல்கள் தெலங்கானா மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
அவர் ஒடுக்கப்பட்ட தெலங்கானா மக்களின் குரலாக மாறி, அப்போது ஒன்றாக இருந்ததால், ஆந்திரா அரசை ஆட்சியை கேள்விக்குட்படுத்தினார்.
தனித்தெலங்கானா மாநிலத்திற்காக, “டாகா பட்டா தெலங்கானா” (Daga Padda Telangana) என்ற பொதுக்கூட்டத்தில் அவர் மனமாரப் பாடினார். புவோங்கிர், வரங்கல், மேடக், மகபூப்நகர் போன்ற இடங்களில் தனித்தெலங்கானா இயக்கத்தின் முக்கிய சின்னமாகவே பெல்லி லலிதா ஒரு நட்சத்திரம் போல் உயர்ந்தார், மிளிர்ந்தார். ஹைதராபாதில் விசைத்தறித் தொழிலில் கொத்தடிமைகளாக இருந்த பல பெண்களை களத்தில் இறங்கி மீட்டார்.
1999 மே 26ஆம் தேதி, லலிதா வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபின் ஒரு கூட்டத்திற்கு சென்றார்; அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை. காவல்துறை அவரது காணாமற்போன புகாரை ஏற்க மறுத்தது. மக்கள் போராட்டம் தொடங்கியபோது, ஒரு மாவட்ட காவல் அதிகாரி “அவரை பிடித்திருந்தால் கைது செய்யாமல் நேரடியாக ‘என்கவுண்டர்’ செய்திருப்போம்” என கூறிய தகவல் பரவத்தொடங்கியது.
அவரது பெயரில் போலி கடிதம் வெளியிடப்பட்டது. சில ஊடகங்கள் அவரது நடத்தையை களங்கப்படுத்தி செய்திகள் வெளியிட்டு மகிழ்ந்தன. தெலங்கானாவின் 10 மாவட்டங்களிலும் மக்கள் சாலைகளில் இறங்கி அரசை கேள்வி கேட்டனர்.
நான்கு நாட்கள் கழித்து, ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட உடல் பகுதிகள் ஒரு கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டது. அவை லலிதாவுடையவை அல்ல என்று போலீஸ் மறுத்தது. 13 நாட்கள் தொடர்ந்து புவோங்கிர் பகுதியில் பல இடங்களில் பெண் உடலின் பகுதிகள் மீட்கப்பட்டன.
இறுதியாக, 1999 ஜூன் 10ஆம் தேதி நள்ளிரவில், லலிதாவின் தலை கண்டுபிடிக்கப்பட்டது. அவர் 17 துண்டுகளாக வெட்டப்பட்டு, அவரது உடல் பகுதிகள் தெலங்கானாவின் புவோங்கிர் (Bhongir) பகுதியின் பல இடங்களில் விதைக்கப்பட்டிருந்தார்.
ஆயிரக்கணக்கான மக்கள் அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு அன்றைய முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் உள்துறை அமைச்சர் அலிமினேட்டி மாதவ ரெட்டிக்கு எதிராக கோஷமிட்டனர். புவோங்கிர் தொகுதியில் லலிதாவின் வளர்ந்துவரும் செல்வாக்கு மாதவ ரெட்டியை பதற்றப்படுத்தியதாகவும், அவர் தேர்தலில் போட்டியிட இருந்ததாகவும் மக்கள் நம்பினர்.
அவரது கொலை, தனித்தெலங்கானா கோரிக்கையை அடக்க முயற்சியாக இருந்ததாகவும் கருதப்பட்டது.
காவல்துறையும் அரசும் இந்தக் கொலையை “காதல் தொடர்பான கொலை” என மாற்றிக் காட்ட முயன்றன. பின்னர், நயீமின் சகோதரர் அலிமுத்தீன் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்தக் கொலையில் ஈடுபட்டதாக போலீஸ் தெரிவித்தது.
அவரது கொடூரமான கொலை பலருக்கு கோபத்தையும், அதே சமயம் தனித்தெலங்கானா இயக்கத்தில் இணைவதற்கான ஊக்கத்தையும் அளித்தது.
கத்தார் (Gaddar) போன்ற செல்வாக்கு அவருக்கும் இருந்தாலும், அவர் ஒரு பெண் மற்றும் குருமா கொல்லா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது கதை பெரும்பாலும் சொல்லப்படாமல் ஒதுக்கப்பட்டது.
பெல்லி லலிதா — அதிகாரத்தில் இருப்பவர்களை அச்சப்படுத்திய எதிர்ப்புக் குரல்.
இந்த மே தினத்தை முன்னிட்டு அவரது பாடலும் வாழ்க்கைக் கதையும் பகிர வேண்டும் என்று நினைத்தேன்.
உழைப்பவர்களின் உரிமை குரலாக உயர்ந்தவரை, இந்த உழைப்பாளர் தினத்தில் நினைவுகூறுவோம், கொண்டாடுவோம்.
இதனை எழுதும் ஒவ்வொரு வரியிலும் மதுரை லீலாவதியின் நினைவு மையை போல் இந்த வெற்றி காகிதம் முழுவதும் படர்வதை, அந்த துண்டிக்கப்பட்ட விரல்களும் எண்ணைய் கின்னமும் கண்களில் முட்டி மோதி மேலெழும்புகிறது.
உலகம் முழுவதும் இன்று உழைத்து நல்லா சம்பளம் ஈட்டுகிற ஒவ்வொருவரும் தங்கள் துறை, தங்கள் பெற்றோர் வேலை செய்த வேலையிடங்கள் எப்படி இருந்தன, அவை எப்படி எல்லாம் போராட்டங்களின் வழியே மாற்றம் பெற்றன, ஒவ்வொரு போராட்டமும் எப்படி வேலையிடத்தில் மனித தன்மையை கொண்டு வந்து சேர்த்தன என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
நன்றி: முத்துகிருஷ்ணன்.

