தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்க அழைக்கப்பட வேண்டும்!
நடந்து முடிந்த 17 வது சட்டமன்றப் பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழகத்தில் முன்னெப்போதுமில்லாத அளவில் மிகுந்த அரசியல் குழப்பம் நீடித்துவருகிறது.
எனினும் தனிப்பெரும்கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு ஆளுநரைச் சந்தித்து உரிமைகோரியுள்ள நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் அவர்கள் தவெக தலைவர் திரு.விஜய் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்து, தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதை ஆளுநர் தாமதமின்றி நிறைவேற்றி அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இராஜகம்பள சமுதாயமும் விரும்புகிறது.
17வது சட்டமன்றத் தேர்தல் பல விநோதங்களை அரங்கேற்றி பல புதிய செய்திகளை வரலாற்றில் எழுதியுள்ளது. அதன்படி கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழக அரசியலில் நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை பிரபல சினிமா நட்சத்திரம் திரு.ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் மாற்றியமைத்துள்ளது. இத்தேர்தலில் ஆளும்கட்சியான திமுக மற்றும் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தோல்வியைத் தழுவி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது. அதேபோல் தமிழகத்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறாக பல புதிய சுவாரஸ்யங்களுக்கு வித்திட்ட இத்தேர்தலின் "க்ளைமாக்ஸ்" என்பது எந்தக்கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ பெரும்பான்மை இல்லாமல் போனதே. அருதிப்பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களுக்கு மிக அருகில் 108 இடங்களைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தனிம்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனடிப்படையில் தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறுகேட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் தமிழக பொறுப்பு ஆளுநரைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியும் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து 113 எம்எல்ஏ க்கள் பட்டியலை அளுநரிடம் வழங்கி ஆட்சியமைக்கும் உரிமை கோரினார்.
எனினும் பெரும்பான்மைக்குத் தேவையான 118 எம்எல்ஏ க்கள் ஆதரவைத் தெரிவிக்குமாறு தமிழக ஆளுநர் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. இதனையடுத்து தனது ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டும் பணியில் தவெக கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு வழங்குமாறு கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து அக்கட்சிகள் இன்று ஆலோசித்து முடிவைத் தெரிவிப்பதாக அறிவித்துள்ளன.
தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்களை எட்டியுள்ள நிலையில் புதிய அரசு அமையாமல் காலதாமதமாவது பொதுமக்களிடையே தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கியுள்ளது. தனிப்பெருங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள நிலையில் தமிழக ஆளுநரிடம் அக்கட்சி வழங்கியுள்ள கடிதத்தின் அடிப்படையில் உள்ள சிக்கலைக் காட்டி ஆளுனர் தரப்பில் சில விளக்கங்கள் முன்வைக்கப்படுகிறது.
எனினும் தமிழகத்தின் நலன் கருதியும், தேவையற்ற அரசியல் குழப்பங்களைத் தவிர்க்கும் வகையிலும், மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும்,108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க உரிமைகோரியுள்ளதை ஏற்று அக்கட்சியின் தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கு முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்வித்து,தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க தமிழக ஆளுநர் வாய்ப்பு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை பொதுமக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்துகின்றன. அதுவே இராஜக்மபள சமுதாய மக்களின் எண்ணமுமாக உள்ளது. ஆகவே ஆளுநர் காலம் தாழ்த்தாமல் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கு ஆட்சியமைக்க அழைப்புவிடுக்க வேண்டுமாய் வலியுறுத்துகிறோம்.

