🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!

பரிணாம வளர்ச்சியில், மனித மூளை உச்சத்தில் இருப்பதாக நாம்  நம்புகிறோம். அதில் ஓரளவு உண்மை இருந்தாலும், மொத்தமாக அப்படிச் சொல்லிவிட முடியாது. 

பூமியில் வாழும் உயிரினங்களில் ஒக்டோபஸுக்குத்தான் அதிக மூளைகள் இருக்கின்றன. ஒக்டோபஸ்களுக்கு 3 இதயங்களும், 9 மூளைகளும் உள்ளன. இரண்டு இதயங்கள் செவுள்களுக்கு ரத்தத்தைச் செலுத்தவும், மூன்றாவது இதயம் உடல் உறுப்புகளுக்கு ரத்தத்தை விநியோகிக்கவும் உதவுகின்றன. தலைப் பகுதியில் ஒரு பிரதான மூளையும் (Central Brain) , 8 கரங்களின் அடிப்பகுதியில் தலா ஒரு சிறிய மூளையும் (Mini Brains) அமைந்துள்ளன.இவற்றின் ரத்தத்தில் இரும்புச் சத்திற்குப் பதிலாக தாமிரம் (Copper) இருப்பதால், இவற்றின் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்

ஒக்டோபஸ்ஸின் பிரதான மூளை, கண்கள் இரண்டிற்கு நடுவே இருக்கின்றது. அங்கே, கண்களின் பின்னால், அடர்த்தியான நரம்பு மண்டலங்களைக் கொண்ட இரண்டு பெரிய  ‘பார்வை மடல்கள்’  (Optic Lobes) இருக்கின்றன. இவை இரண்டும், பிரதான மூளையுடன் தொடர்புடன் இருப்பதால், அவற்றையும் மூளையென்று நம்பி, மொத்தமாக மூன்று மூளைகள் என்று தவறாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், அவை மூளைகளல்ல. சாதாரணமாக மூளைக்குள் இருக்க வேண்டிய பகுதிகள். பார்வையின் தேவைக்காகப் பிரிந்து தனியே இருக்கின்றன. பார்வைக்குரிய தனித்துவமான இரண்டு பகுதிகள். மூளையுடன் தொடர்புடன் இருப்பவை. ஆனாலும் அவை மூளைகள் அல்ல. 

பிரதான மூளையின் ஆட்சி இல்லாமல், சுயாதீனமாகச் செயல்படக்கூடிய எட்டுத் தனித்தனி மூளைகள், ஒக்டோபஸின் எட்டுக் கால்களிலும் (அல்லது கைகளிலும்) இருக்கின்றன. ஒக்டோபஸ் உறங்கிக் கொண்டிருந்தாலும், அவற்றின் கால்கள் (அல்லது கைகள்) உறங்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு இரைகளைப் பிடித்துச் சுவைக்கவும் செய்கின்றன. இந்தியாவில் ஒரு ஒன்றிய அரசும், பல மாநில அரசுகளும் இருப்பதுபோல, ஒக்டோபஸுக்கு மூளைகள் அமைந்திருக்கின்றன. 

ஒக்டோபஸில் ஒரு மூளை உறங்கும்போது, மற்ற மூளைகள் தன்னிச்சையாக இயங்குமென்று சொன்னேனல்லவா? இதுபோல, ஒரே மூளையை, இரண்டாகப் பிரித்து, பாதி மூளையால் உறங்கவும், பாதி மூளையால் விழித்திருந்து செயல்படவும் சில உயிரினங்களால் முடியும் என்பதுதான் ஆச்சரியம். மனிதனால் செய்ய முடியாத விந்தை.  

திமிங்கிலம், டொல்பின் போன்ற மீன்களும், ‘ஃபிரிகேட்’ (Frigate Bird) போன்ற பறவைகளும், இந்த ஒற்றை அரைமூளை உறக்கத்தில் (Unihemispheric Sleep) ஈடுபடுகின்றன. 

திமிங்கிலங்களும், டொல்பின்களும் ஆழ்கடலில் நீந்திக் கொண்டிருந்தாலும், சுவாசிப்பதற்கு அவை கடல் மேற்பரப்பிற்கு வரவேண்டும். ஒருவேளை, அவை ஆழ்கடலில் நீந்தும்போது உறங்கிவிட்டால், அவற்றிற்கான சுவாசம் கிடைக்காமல் இறந்து போய்விடும் சாத்தியம் உண்டு. அதற்காக இயற்கை உருவாக்கியிருக்கும் பொறிமுறைதான் இந்த அரைமூளைத் தூக்கம். மூளையின் அரைவாசி உறங்கியபடி அதன் உடல் உறுப்புகளுக்கு ஓய்வைக் கொடுக்க, மற்ற அரைவாசி மூளை விழித்திருந்து சுவாசத்தையும், எதிரிகளின் ஆபத்தையும் கவனித்துக் கொள்கிறது. 

இதுபோல, ஃபிரிகேட் போன்ற பறவைகள் தொடர்ச்சியாகப் பத்து நாட்களுக்கு மேல் தரையைத் தொடாமல் பறந்து கொண்டேயிருக்கின்றன. அவ்வேளைகளில், அவை பாதி மூளையை உறங்குவதற்கும், மறுபாதி மூளையைப் பறத்தலின் தொடர்ச்சிக்கும் பயன்படுத்துகின்றன. ஆனாலும் அது முழுமையான நித்திரை இல்லை. குறுகிய குட்டித் தூக்கம் (Micro sleep) மட்டும்தான். 

மனிதனின் மூளையால் அளப்பரிய செயல்களையும், சிந்தனைகளையும் செய்ய முடிந்தாலும், இவ்வுயிரினங்களின் மூளைப் பொறிமுறையை அடைய  முடியவில்லை. அவை செய்யும் செயல்கள் அசாத்தியமானவை. மனிதனால் இப்படி மூளையைப் பாதியாகச் செயல்படுத்த ஏன் முடியவில்லை? மனித மூளையும் இரண்டு பகுதிகளாகப் பிரிந்து செயல்படுவதுதான். ஆனால், அவற்றிற்கான பணிகள் தனித்துவமானவை. ஆனாலும், அவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று இறுக்கமான பிணைப்பைக் கொண்டவை. அதனால் இப்படிப் பிரிந்து செயல்பட முடியவில்லை. 

நன்றி: ராஜ்சிவா.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved