🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதி அரசே நீதிமன்றத்தில் பொய்சொல்வதா?- சமூகநீதிகூட்டமைப்பு ஏமாற்றம்!

146 BC & 115 MBC/DNT சமூகங்களின் வேண்டுகோள், தயவு செய்து அரசு நீதிமன்றத்தில் தவறானக் கருத்தைத் தெரிவிக்க வேண்டாம்!

அனைத்து ஊடக ஆசிரியர்களுக்கும் வணக்கம்;

மக்கள் விரோத எடப்பாடி அரசு, அரசியல் ஆதாயத்திற்காக, சட்டவிரோதமாக, எந்தவிதமான சமீபகால சாதிவாரிப் புள்ளிவிபரங்களும் இல்லாமல், கடைசி நிமிடத்தில் ஜனநாயக நடைமுறைகளுக்கு விரோதமாக 26.2.2021 அன்று நிறைவேற்றிய 10.5% வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டம் 8/2021, 115 சமூகங்களின் உரிமையைப் பறிப்பதோடு, நடைமுறையில் உள்ள சமூகநீதியையே சிதைக்கும் வண்ணம் உள்ளது. புதிய அரசும் அந்த அநீதியானச் சட்டத்தைச் செயல்படுத்த அரசாணைப் பிறப்பித்ததைக் கண்டித்து, தமிழகத்தில் உள்ள 146 BC மற்றும் 115 MBC/DNT சமூகங்கள் கூட்டாக இணைந்து எதிர்ப்பது என்றும் சமூகநீதி சமீபகாலங்களில் சந்தித்துவரும் சவால்களை இணைந்து முறியடிப்பது என்றும் முடிவுசெய்து, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீட்டுச் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று வலியுறுத்தி 10.5% இடஒதுக்கீடு குறித்த உண்மைகளை அனைத்து சமூகங்களுக்கும்  விளக்குவதற்காக தொடர் பிரச்சாரங்களும் தன்னெழுச்சிப் போராட்டங் களையும் நடத்திவருகின்றோம். ஊடங்கள் உணமையின் பக்கம் நிற்க வேண்டிக்கொள்கிறோம்.

2. மேற்படி அநீதியானச் சட்டத்தின் முகப்புரையில் பல முன்னுக்குப்பின் முரணான, பொய்யான விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் சில:

i) வன்னியர்கள் MBC பிரிவில் உள்ள மற்ற சமூகங்களோடுப் போட்டியிட முடியவில்லை என்பதால் தனி இடஒதுக்கீடு கோரியுள்ளனர் என்பது பச்சைப் பொய் ஏனென்றால், மருத்துவர் ராமதாஸ் “சுக்கா மிளகா சமூகநீதி” நூலில் வன்னியர்கள் அரசு வேலைகளில் 1 இலட்சம் பேர் இருப்பதாகவும், நிறுவன வேலையில் 1 இலட்சம் பேர் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார் மற்றும் திரு.இறைவன் எழுதியுள்ள நூல்களில் அவர்கள் BCயில் இருந்தபோதும்  MBCயில் இருக்கின்றபோதும் 50% இடங்களைப் பெற்றுள்ளோம் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். (அந்த நூல்களின் சம்பந்தபட்டப் பக்கங்களை இணைத்துள்ளோம்); 

ii) வன்னியர் மக்கள் தொகை அதிகமாக இருக்கின்ற காரணத்தால் இக்கோரிக்கையை முன்வைக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. இதற்கும் எந்த அடிப்படையும் இல்லை. 1931க்கு பிறகு மதம் மற்றும் அட்டவணைச் சமூகத்தினரைத் தவிர, எந்த சமூகத்திற்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அம்பாசங்கர் வன்னியரின் அறிக்கையை ஆதாரமாக முன்வைக்கின்றனர். அது பொய். 2ம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறுதிப்பெரும்பான்மை உறுப்பினர்களின் அறிக்கையில் வன்னியர்களின் எண்ணிக்கை மிகைப்படுத்திக்காட்டப்பட்டுள்ளது என்றும், பல சமூகங்களின் எண்ணிக்கை குறைத்துக்காட்டப்பட்டுள்ளது என்றும், எனவே, அவ்வாணையத்தின் கணக்கெடுப்பின் முடிவுகள் ஒருசார்புடையது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் சுருக்கம் ஆங்கிலத்தில் கீழேகொடுக்கின்றோம் (மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களின் அறிக்கையை இணைத்துள்ளோம்)

“XXXX  Lastly we unanimously recommend that the Government may do well to conduct a thorough verification of the socio educational survey conducted by the commission and also check the population figures at least the major communities by reconciling the figures with estimated projected castewise population figures available with the Government, we are of the opinion regarding some major communities, the population figures are much inflated at the cost of several other communities as the whole operation was biased.” 

“இறுதியாக, ஏகமனதாக நாங்கள் அனைவரும் பரிந்துரைப்பது என்னவென்றால், ஆணையம் நடத்திய சமூக, கல்விக் கணக்கெடுப்பை முழுவதுமாக சரிப்பார்க்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் பெரும் சமுதாயங்களின் மக்கள் தொகையை, அரசிடம் உள்ள மதிப்பிடப்பட்டுள்ள மக்கள் தொகையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஏன்னென்றால்,எங்களுடைய கருத்துப்படி சில பெரும் சமுதாயங்களுடைய மக்கள்தொகை எண்ணிக்கை மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது. அதற்கு விலையாக மற்ற சமுதாயங்களுடைய எண்ணிக்கை குறைத்தும் காட்டப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்த செயல்பாடுகளும் ஒரு சார்புள்ளதாக இருந்து கணக்கெடுப்பு ஆகும்.


iii) முன்பு இருந்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது சம்பந்தமாக கருத்துக்கேட்கப்பட்டதாகவும் பரிந்துரைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அனைத்தும் பொய். நீதிபதி ஜனார்த்தனம் வன்னியர் 2012-ல் மற்ற உறுப்பினர்களைக் கட்டாயப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க முயற்சி செய்து தோற்றுப்போன விபரங்களை அப்போதைய ஆணையத்தின் செயலாளர் முனைவர் மு. ராஜேந்திரன் தனது சுயசரிதை நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த நூலின் சம்பந்தப்பட்ட பக்கங்களின் நகல்கள் உங்கள் பார்வைக்காக இணைத்துள்ளோம். அதைத் தொடர்ந்துதான் அரசாணை 35ன் மூலம் ஆணையத்திற்கு உள் ஒதுக்கீடு சம்பந்தமாக பரிந்துரை கோரிப்பணி வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்றுவரை 115 சமூகங்கள் யாரிடமும் கருத்துக்கேட்கவில்லை வன்னியர் மட்டும் வன்னியர்களுக்காக பரிந்துரை செய்வதற்கு ஆணையம் எதற்கு?. மேலும் அப்படி ஒரு பரிந்துரை வழங்கியிருந்தால் அந்த பணியை மீண்டும் தற்போதுள்ள ஆணையத்திற்கு அரசாணை 52 நாள் 8.7.2020ல் ஏன் வழங்க வேண்டும்?. அரசாணை 35 மற்றும் 52ன் நகல்களை இணைத்துள்ளோம். 


iv) வன்னியர் உள் ஒதுக்கீடு வழங்குவது சம்பந்தமாக தலைவரின் கருத்தைக்கோரினோம் என்றும் நீதிபதி தணிகாச்சலம் வன்னியர் முன்னாள் தலைவர் நீதிபதி ஜனார்த்தனன் வன்னியரின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி உள் ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்தார் என்றும், அதனடிப்படையில் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இதுவும் பொய். ஆணையத்தின் பரிந்துரையைத்தான் அரசு கோர முடியுமே தவிர தலைவரின் கருத்தை அல்ல. அதுவும் வன்னியர் மட்டுமே 1969லிருந்து சமூகநீதியைச் சூறையாடுவதற்காக ஆணையங்களை ஆக்கிரமிப்பது பல பிற்போக்கான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய தலைவர் பொறுப்பேற்றபின் 7.10.2020 மற்றும் 21.1.2021 தேதிகளில் இரண்டு கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. அதில் உள் ஒதுக்கீடு சம்பந்தமாக எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. தற்போதைய உறுப்பினர்களிடம் நீங்கள் அழைத்து விசாரித்துக்கொள்ளலாம். மொத்தத்தில் சமூகநீதிக் கொள்ளை நடந்துள்ளது.

3. இவைதவிர 10.5% சட்டம் பார்த்த மாத்திரத்திலேயே சட்ட விரோதமானது என்பதைக் காட்டும் சில சட்டக்காரணங்கள் உங்கள் பார்வைக்கு முன்வைக்கின்றோம்.


i. அரசமைப்புச் சட்டம் சரத்து 15/4 மற்றும் 16/4 ன்படி வகுப்புவாரி இடஒதுக்கீடுதான் வழங்க முடியும். சாதிவாரி இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்ற செண்பகம்துரை ராஜன் வழக்கு முதல் நீதிமன்றங்கள் தொடர்ந்து தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில் விடுதலைக்கு முன் வழங்கப்பட்ட இடஒதுக்கீடு தொடர்கிறது அதுவும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதே.

ii. 102ம் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்ட சரத்து 338B(9)யின் படி தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தைக் கலந்து ஆலோசித்துவிட்டுத்தான் இப்படிப்பட்ட சட்டம் கொண்டுவர முடியும். எனவே, இச்சட்டம் செல்லாதச் சட்டம். வன்னியர்கள் வாக்குக்காக வன்னியர்களை ஏமாற்றியச் சட்டம்.

iii. உச்சநீதிமன்றம் 2008ம் ஆண்டு நாகராஜ் வழக்கில் சமீபத்திய போதுமான புள்ளிவிபரங்கள் இல்லாமல் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் இன்றுவரை ஒரு சமூகத்தினர் மட்டும் இட்டுக்கட்டிய, முறைகேடான, அனுமானமான, ஏற்கத்தகாத புள்ளிவிபரங்கள் மட்டும்தான் உள்ளது.

iv. உச்சநீதிமன்றத்தில் மராத்தா வழக்கில் தமிழக அரசும் பிரதிவாதி,  அவ்வழக்கில்  மாநில அரசுக்கு பிற்படுத்தப்பட்டோரை வகைப்படுத்தும் அதிகாரமே இல்லை என்று விசாரணை நடைப்பெற்றக்கொண்டு இருந்த போதே இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. 5.5.2021ல் மாநில அரசுக்கு அதிகாரமே இல்லை என்று தீர்ப்பளித்துவிட்டது. இருப்பினும் செல்லாதச் சட்டத்தை அநீதியாக செயல்படுத்த முயற்சிகள் நடப்பதும், அனைவரும் வேடிக்கை பார்ப்பதும் வேதனை.

v. SFRBC அமைப்பு ஒரு சாதியினர் மட்டும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை ஆக்கிரமித்துக்கொண்டு முறையான கணக்கெடுப்பு நடத்தவிடாமல் பல சமூகங்களுக்கு சமூகநீதி கிடைக்கத் தடைகளை ஏற்படுத்திவருகின்றனர் எனவே தேசிய ஆணையம் உடனே விசாரிக்க வேண்டும் என்று கொடுத்துள்ள புகாரை உடனே விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு 3284/2021ல் 16.2.2021 அன்று மேற்படிப் புகாரை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் ஆணைப்பிறப்பித்து விசாரணை நடைபெற்று வரும் வேலையில் அவற்றையெல்லாம் மூடி மறைத்து இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

vi. தாய் இடஒதுக்கீட்டுச்சட்டம் 45/1994, அரசமைப்புச் சட்டம், சரத்து 31Bயின் கீழ் 76வது அரசமைப்பு திருத்தச் சட்டப்படி 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் 31Cயின் கீழ் ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று கூடுதல் பாதுகாப்பு பெற்ற அச்சட்டத்தை சர்வநாசம் செய்யும்விதம் அச்சட்டத்தை முறையாக திருத்தாமல் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு எதிராக ஆளுநரின் ஒப்புதலோடு இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

4. நீதிமன்றங்கள் பலமுறை உத்தரவு பிறப்பித்தும், அதிமுக அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தத் தவறிவிட்டது. சென்செஸ் சட்டம் 1948ன்படி மத்திய அரசுதான் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்க முடியும் என்று தவறாக எண்ணிக்கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் இந்தியாமுழுவதும் மக்கள் தொகையை எண்ணுவது வேறு புள்ளிவிபரச் சட்டப்படி மக்கள்தொகை சம்பந்தமான புள்ளிவிபரங்களைச் சேகரிப்பது என்பது வேறு என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டது. புள்ளிவிபரச் சட்டம் 2008ன்படி  மாநில அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திக்கொள்ள வழிவகையுள்ளது. மேலும் அந்த புள்ளிவிபரச்சட்டத்தில் யாரால், எப்படி, எப்போது, என்ன கணக்கெடுப்பு நடத்தலாம் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும், அச்சட்டத்திற்கு எதிராக அரசாணை 99 நாள் 21.12.2021ன் மூலம் மீண்டும் நீதிபதி குலசேகரன் வன்னியரை, சாதிவாரிப் புள்ளிவிபரங்களைச் சேகரிக்க நியமிப்பதாகவும் மற்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் 6 மாதத்திற்குள் புள்ளிவிபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஒரு மோசடியை அரங்கேற்றியது எடப்பாடி அரசு. புள்ளிவிபரச் சட்டப்படி அப்படி ஒரு ஆணையத்தை  நியமிக்கவே முடியாது. எனவே மேற்படி சட்டப்படி நவீன புள்ளிவிபரச் சேகரிப்பு முறைகளைக் கையாண்டு விரைவில் துல்லியமான மக்கள், கல்வி, சமூகநிலை, அரசு வேலைகளில் சமூகங்கள் பெற்றுள்ள பங்கு போன்ற விபரங்களைச் சேகரிக்க வேண்டும்.   

5. உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் அந்த அடிப்படையற்ற அநீதியான 10.5% சட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டு, அரசுக்கு அறிவிப்புக் கொடுக்கப்பட்டுத் தடைகோரும் மனுக்கள் நிலுவையில் உள்ளது. உயர்நீதிமன்றப் பணி நியமனத்தில் அச்சட்டத்தை செயல்படுத்த முடியாது என்று தலைமைநீதிபதியின் ஒப்புதலோடு பதிவாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அதேநிலையைத்தான் அரசின் மற்ற துறைகளும் எடுக்கமுடியும். ஆனால் 1.4.2021 அன்று உயர்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையின் அடிப்படையில் சில கல்விநிறுவனங்களில் உள்ஒதுக்கீடு வழங்குவது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். தமிழக அரசையும் வழக்கில் சேர்த்து 5.5.2021 மராத்தா வழக்கில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் அரசு சுழற்சிமுறைப் பட்டியல் குறித்து அரசாணை வெளியிடுவதற்கு முன் பல துறைகள் 10.5% இடஒதுக்கீட்டுச்சட்டத்தைச் செயல்படுத்த முயல்வதுச் சட்ட விரோதம். இஸ்லாமியர், அருந்ததியர் இடஒதுக்கீட்டுச் சட்டங்களை முன்னுதாரணங்களாகக் காட்டுவதுச் சட்டப்படி ஏற்புடையதல்ல 10.5% சட்டம் 2018க்கு பிறகு வந்தச் சட்டம் அடிப்படைப் புள்ளிவிபரம் இல்லாதச் சட்டம்.

6. உண்மை இவ்வாறு இருக்க, சட்டமன்றத்தில் ஆய்விற்குப் பிறகு நல்ல முடிவெடுப்போம் என்று சொன்ன அரசு, 26.7.2021 அன்று இந்த அநீதியானச் சட்டத்தைச் செயல்படுத்தி அவசர அவசராம அரசாணை 75யை வெளியிட்டுள்ளது. 28.7.2021 அன்று நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது நீதிமன்றம் தடைவிதிக்கத் தயாராக இருந்தது. ஆனால் அரசு தலைமை வழக்கறிஞர் 1.4.2021 முதலேச் சட்டப் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தப்பட்டுவிட்டது. அதன் தொடர்ச்சிதான் அரசாணையென்றார். தடைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் 26.7.2021 உயர்கல்வி ஆன்லயன் மனுவில் அச்சட்டம் செயல்படுத்தப்படவில்லை, இரவோடு இரவாக அரணை, பின்பு அம்மனு மாற்றப்பட்டது, வாக்களித்த மக்களை வஞ்சிப்பதோடு, இந்த அரசு அனைவருக்குமான அரசு அல்ல, சென்னதைக்கூட செய்யாத அரசு, இன்நிலை நீடித்தால் அரசு மக்களிடதிலிருந்து முழுவதுமாக அன்னியப்பட்டுவிடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

7. எனவே தமிழக அரசு நீதிமன்றத்தில் தவறானக் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம் என்றும், அநீதியானச் சட்டத்தச் செயல்படுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், எல்லாச் சமூகங்களையும் அழைத்து கலந்து ஆலோசித்து, சாதிவாரிக்கணக்கெடுப்பு நடத்தி, அறிஞர்குழு மூலம் ஆய்வு செய்து எல்லாச் சமூகங்களுக்கும் உரிய இடஒதுக்கீடு கிடைத்திடும் வகையில் வகுப்புவாரித் தொகுப்பு இடஒதுக்கீட்டு முறையை வகுத்துச் செயல்படுத்தும்வரை MBC 20% இடஒதுக்கீட்டுச் சட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது என்று அரசை வலியுறுத்திக் கேட்டுகொள்கிறோம். 10.5% சட்டம் அநீதியானது என்பதை விளக்க முதல்வரை நேரில் சந்திக்க அனுமதிக்க வேண்டும். ஒரு உண்மையான வெள்ளையறிக்கையை வெளியிட்டு ஆரோக்கியமான வெளிப்படையான பொது விவாதங்களை நடத்தி கருத்தொற்றுமையை ஏற்படுத்தி, சமூகநீதியைக் காத்து, கடைமடைச் சமூகங்களுக்கும் சமூகநீதிச் சென்றடைய அரசு வழிவகை செய்ய வேண்டும். 

இப்படிக்கு

146 BC & 115 MBC.DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு.

09.8.2021

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved