🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தேனியில் பற்றிக்கொண்ட பெருநெருப்பு!

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் கல்லறை கட்டிவிட்டாலும், மதப்பிரச்சாரக்கூட்டங்களில் தேவன் மீண்டும் உயிர்த்தெழுவார் என்று திரும்ப திரும்ப கூறப்படுவதுபோல், வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் 8/2021-ஐ செல்லாது என்று அறிவித்து உயர்நீதிமன்றம் எழுப்பிய ஏழு கேள்விகளில் ஆறு கேள்வியை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளதால், எஞ்சியுள்ள ஒரே கேள்வியான போதிய தரவுகளை தமிழக அரசு ஓரிரு வாரங்கங்களில் தயார் செய்து மீண்டும் வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டுவரலாம் என்ற பிரச்சாரம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. 

தனி ஒரு சாதிக்கு உள்ஒதுக்கீடு சாத்தியமே இல்லை என்பதை அரசும், பிரச்சாரகர்களும் நன்கு அறிவார்கள் என்றபோதிலும், அவர்களின் பிழைப்பும், வாழ்வாதாரமும் அறியாத மக்களின் வாக்குகளை அறுவடை செய்வதிலேயே இருக்கிறது. அதற்காக எந்த எல்லைக்கும் போவதற்கு அவர்கள் தயாராகவே உள்ளனர். 

எம்பிசி சாதிகளுக்கு ஒதுக்கப்படும் 20 விழுக்காடு இடஒதுதுக்கீட்டால் பயன்பெறும் 116 சாதிகளின் எதிர்காலம் இதில் தான் தீர்மானிக்கப்படுகிறது. 115 சாதிகளை ஓரணியாகவும், ஒருசாதியை மற்றொரு அணியாகவும் பிரித்து  செய்யப்படும் அரசியலில் 115 சாதிகளின் அறியாமையை பயன்படுத்தி அவர்களின் உரிமை ஓட்டு திருடர்களால் அபகரிக்கப்படுகிறது. 

திருடர்களுக்கு திருடுவதே இயல்பு. அவர்கள் திருடத்தான் செய்வார்கள். இடஒதுக்கீடு எனும் அற்புத விளக்கு நம் வீடுகளுக்குள் உள்ளது.நமது வீடு அறியாமை எனும் இருளால் சூழப்பட்டுள்ளது. அந்த இருளை நீக்கி, வீட்டைப்பூட்டி பாதுகாக்க வேண்டியது வீட்டு உரிமையாளரின் கடமை. திருடர்கள் அரசாங்கம் எனும் போலீஸ் ஆதரவோடு  திருடவருகிறார்கள். விழித்துக்கொண்டோர் எல்லாம் பக்கத்து வீட்டுக்காரர்களை உசுப்பி விடுவது அவசியம். அந்த அவசியம் தான் இப்பொழுது 115 சாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. 

அதில் கள்ளர், மறவர் எல்லாம் ஏற்கனவே விழித்துக்கொண்டனர். ஊராளிக்கவுண்டர்களும் பெரம்பலூரில் மிகப்பெரிய கூட்டத்தை கடந்த திங்களன்று நடத்தி நாங்களும் விழித்துக்கொண்டுள்ளோம் என்பதை நிரூபித்து விட்டனர். நரிக்குறவர், நாவிதர், வண்ணார் சமூகங்களும் அலர்ட் ஆகி விட்டனர். 

ஆண்டபரம்பரை இறுதியாகத் தானே விழிக்கும். உறக்கத்தில் இருக்கும் கம்பளத்தார்களை எழுப்புவதும் அவசியம் தானே? ஏற்கனவே நாமக்கல் விழித்துக்கொண்டது. ஜமீன்களால் சூழப்பட்ட தேனி மாவட்ட கம்பளத்தார்களை உசுப்பி விடவேண்டுமல்லவா? 

சமூகநீதி கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் மத்திய அரசின் மு.பொறியாளருமான பி.இராமராஜ் அவர்கள் கடந்த வாரம்  தேனி சென்று உறவுகளை அழைத்து நாம் விழிப்போடு இருக்க வேண்டிய அவசியத்தை சொல்லிவிட்டு வந்தார். அவர் ஏற்றிவிட்டு வந்த ஒளிவிளக்கை தொடர்ந்து எண்ணெய் ஊற்றி திரியை தீண்டிவிடுவது அவசியமல்லவா? 

இப்பணியைத் தொடர சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்திற்கு பணிக்கப்பட்டது. கோடை விடுமுறைக்காக தேனி சென்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் இரண்டு தினங்கள் தேனி மாவட்டத்தின் பல கிராமங்களுக்குச் சென்று சமூகநீதி விளக்கை ஏற்றி வைத்தார். 

கடந்த 24, 25 தேதிகளில் போடி சௌந்திரபாண்டியன், சுருளி மணி, சிந்துவம்பட்டி ரமேஷ் ஆகியோரின் முழு ஒத்துழைப்போடும், உறுதுணையோடும் பல கிராமங்களுக்கு இக்குழுவினர் பயணித்தனர்.

முதல்நாளில் கோவில்புரம், ஆண்டிபட்டி, இராஜதானி, அழகாபுரி, ஆவாரம்பட்டி, தொப்பம்பட்டி, சித்தார்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று சமூக நீதி ஒளிவிளக்கை ஏற்றிவிட்டு, மாலையில் போடி, ஜக்கம்பட்டியில் இளைஞர் கோபி ஏற்பாட்டில் மிகச்சிறப்பான கூட்டத்தை கூட்டியிருந்தார். அக்கூட்டத்தை முடித்துக்கொண்டு, இரவு 8.30 மணிக்கு தமிழ்செல்வன் ஒருங்கிணைப்பில் கரிசல்பட்டியில் கூடியிருந்த உறவுகளிடம் உரையாடி விட்டு, இரவு 10.30 மணியளவில் கீழப்புலானந்தபுரத்தில் முடித்தனர். 

அடுத்தநாள் (நேற்று) பொதுச்செயலாளர், சுருளிமணி, சிந்துவம்பட்டி இரமேஷ், பிரபாகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பெரியகுளம், தேனி, அரண்மணைப்புதூர், ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களுக்குச் சென்றனர்.  அரண்மணைப்புதூரில் மாலைகோவில் செயலாளர் நாகராஜ், ரமேஷ்பாபு, பரமசிவம், வரதராஜ், உள்ளிட்ட தலைவர்களையும்,  ஆண்டிப்பட்டியில் பண்பாட்டுக்கழக மாவட்ட தலைவர் சக்திவேல், பாலமுருகன், பாண்டி செல்வம் உள்ளிட்ட உறவுகளையும், தேனியில் எரசப்பநாயக்கனூர் ஜமீன்தார் சாமிநாதன்,  செந்தில்குமார், அம்சமணி, தாமரைக்கனி, இராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து சமூகநீதி சுடரொளியை மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய தேவையை எடுத்துரைத்தனர். 

எதிர்பார்ப்பிற்கும் மாறாக இடஒதுக்கீடு விவகாரம் குறித்து அனைவரும் தெளிவுறப் பேசியது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தேனி மாவட்ட உறவுகள் உறங்கிவிடவில்லை, ஏற்கனவே அங்கே பெருந்தனல் கணன்றுகொண்டுள்ளது. அதற்கு எண்ணெய் ஊற்றிவந்துள்ளது இக்குழு. இந்த பெருநெருப்பு கண்டிப்பாக  இடஒதுக்கீடு எனும் அற்புத விளக்கை பறிக்க நினைப்பவர்களை பொசுக்கும் என்பதில் ஐயமில்லை. 

இரண்டு நாட்கள் அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவிட்டு  சமுதாய பணிக்காக முழுமையாக ஒப்படைத்துக்கொண்ட சுருளிமணி, சிந்துவம்பட்டி இரமேஷ் ஆகியோருக்கு சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

ஆகஸ்டு 7-ல் மதுரை சமூகநீதி மாநாட்டில் சமுத்திரமாய் திரள்வோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved