இந்தியாவின் ஆன்மா - 75-வது தேசிய அரசியல் சாசன தினம்
அரசியலமைப்பு (Constitution) என்பது பிரெஞ்சு இலத்தீன் வார்த்தை Constitutio இலிருந்து வந்தது. அரசியலமைப்புச் சட்டம் (Constitution) என்பது, ஒரு தன்னாட்சி உரிமை கொண்ட ஒரு அரசியல் அலகுக்கான, சட்ட விதிகள், கொள்கைகள் போன்றவற்றை விளக்கும் எழுத்துமூல ஆவணம் ஆகும். இது ஒரு அரசின் முறைமைகளை விளக்குகிறது. நாடுகளைப் பொறுத்தவரை இச் சொல், அரசின் அடிப்படை அரசியல் கொள்கைகள், அமைப்பு, செயல்முறைகள், அதிகாரம், கடமைகள் என்பவற்றை வரையறுக்கும் தேசிய அரசியல் சட்டத்தைக் குறிக்கின்றது.
1947,ஆகஸ்ட் 15-இல் பிரித்தானிய இந்தியாவானது இந்திய மாகாணம், பாக்கிஸ்தான் மாகாணம் என்ற இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டதால் சுதந்திர இந்தியாவிற்கான அரசியலமைப்பை மட்டும் உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணய சபை செய்ய வேண்டியதாயிற்று.
இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதி 1858 லிருந்து 1947 வரை ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. இந்தக் காலத்தில் வெளிநாட்டு ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக உயர்வு கண்டது. 1934-இல் இந்தியாவிற்கு ஓர் அரசியல் நிர்ணய சபை வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. பின்னர் 1936-லும் 1939-லும் இக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதன்படி, அரசியல் நிர்ணய சபையை உருவாக்கலாம் எனக் கிரிப்ஸ் தூதுக்குழு மார்ச்-1942-இல் பரிந்துரைத்தது. பின்னர் வந்த அமைச்சரவைத் தூதுக்குழு (மே-1946) அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன்படி அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல், ஜூலை 1946-இல் நடைபெற்றது.
ஒன்றிய மற்றும் மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களால் அரசியலமைப்பு நிர்ணய சபை அமைக்கப்பட்டது. அரசியல் சாசன நிர்ணய சபையில் இருந்த 389 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள்தான் பெண்கள்.
ஜவகர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், சந்திப் குமார் படேல், டாக்டர் அம்பேத்கர், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், மற்றும் பால்வந்த் சிங் மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் முக்கிய பிரமுகர்களாக இருந்தனர். தாழ்த்தபட்ட வகுப்புகளைச் சேர்ந்த 30 மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு இருந்தனர். பிராங்க் அந்தோணி ஆங்கிலோ இந்திய சமூகத்தைப் பிரதிபலித்தார். பார்சி இனத்தவர்களை ஹெச்பி மோடி பிரதிபலித்தார். சிறுபான்மையினர் குழுவின் தலைவராக, ஆங்கிலோ இந்தியர்கள் தவிர மற்ற அனைத்துக் கிரிஸ்துவர்களின் பிரதிநிதியாக ஃஅரென்ட்ர ஊமர் முகெர்ஜீ என்ற புகழ்பெற்ற கிரிஸ்துவர் இருந்தார். அரி பகதூர் குறூங் கோர்கா சமூகத்தைப் பிரதிபலித்தார். அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், பி ஆர் அம்பேத்கர், பெனகல் நர்சிங் ராவ் மற்றும் கி.மீ. முன்ஷி, கணேஷ் மவ்லன்கர் போன்ற முக்கிய நடுவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். சரோஜினி நாயுடு, ஹன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக், ராஜ்குமாரி அம்ரித் கவுர் மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்றவர்கள் முக்கியமான பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அரசமைப்பு மன்றத்தின் தற்காலிக தலைவராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் சச்சிதானந்தன் சின்ஹா இருந்தார். பின்னர், ராஜேந்திர பிரசாத் சட்டமன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசமைப்பு மன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 9, 1946 அன்று முதல் முறையாகக் கூடினர்.
1947, ஆகஸ்ட் 29 -இல் அரசியல் நிர்ணய சபைஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ. இரா. அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting Committee) உருவாக்கப்பட்டது.
1.பீ. இரா. அம்பேத்கர்
2.என். கோபாலசாமி அய்யங்கார்
3.அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
4.கே. எம். முன்ஷி
5.சையது முகமது சாதுல்லா
6.என். மாதவ ராவ்
7.டி. டி. கிருஷ்ணமாச்சாரி, ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-இல் ஒப்படைத்தது. நவம்பர் 4-இல் அரசியல் நிர்ணய சபையிடம் ஒப்படைக்கப்பட்ட இவ்வறிக்கை, முழு வடிவம் பெற்று, 1949 நவம்பர் 26-இல் அரசியல் நிர்ணய சபையின் தலைவரான இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றது. ஜனவரி 24-இல் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையின் கடைசிக் கூட்டத்தில், சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930,ஜனவரி 26-இல் இந்தியாவிற்குச் சுதந்திரம் பெற்றே தீருவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நினைவாக ஜனவரி 26-ஆம் தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது என்றும் அரசியல் நிர்ணய சபை முடிவு செய்தது. "இந்திய அரசியலமைச் சட்டம்-1950" இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது.
இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படும் போது, பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால், இந்திய அரசமைப்பு சட்டத்தைக் 'கடன்களின் பொதி' என்பர். 'கூட்டாட்சி முறையைக்' கனடாவில் இருந்தும், 'அடிப்படை உரிமைகள்' அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்தும், அடிப்படைக் கடமைகளை அன்றைய சோவியத் யூனியனிடமிருந்தும் பெற்றது. அரசியல் சட்டத்திருத்த முறையைத் தென்னாப்பிரிக்கா இருந்தும், மாநிலங்களவை நியமன எம்.பி.,க்கள் முறையை அயர்லாந்திடம் இருந்தும் பெற்றது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தலைமைச் சிற்பியான டாக்டர் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை இன்றைய தலைமுறையினர் நன்றாகப் புரிந்து கொள்ளும் வகையில் - டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 25.11.1949 அன்று மக்களவையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை 75-வது அரசியல் சாசன தினமான இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி.
அரசியல் நிர்ணய சபையின் பணிகளை ஒரு முறை திரும்பிப் பார்க்கும்போது, 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று, முதலில் கூடியதிலிருந்து இரண்டு ஆண்டுகள் பதினோரு மாதங்கள், பதினேழு நாட்கள் கழிந்துள்ளன. இந்தக் கால அளவில் அரசியல் நிர்ணய சபை மொத்தத்தில் பதினோரு முறை கூடியுள்ளது. இந்தப் பதினோரு அமர்வுகளில், நோக்கங்களைப் பற்றிய தீர்மானங்களை நிறைவேற்றவும், அடிப்படை உரிமைகள் பற்றிய குழுவின் அறிக்கை, ஒன்றியத்தின் அரசியல் சட்டம் பற்றிய அறிக்கை, ஒன்றியத்தின் அதிகாரம் பற்றிய அறிக்கை, மாகாண அரசியல் அமைப்புச் சட்டம் பற்றிய அறிக்கை, சிறுபான்மையினர் பற்றிய அறிக்கை, பட்டியல் வகுப்பினர் பற்றிய அறிக்கை, பட்டியல் பழங்குடியினர் பற்றிய அறிக்கை ஆகியவைகளைப் பரிசீலிப்பதில் கழிந்தன. ஏழு, எட்டு, ஒன்பது, பத்து மற்றும் பதினோராவது அமர்வுகள், அரசியல் சாசன வரைவுச் சட்டத்தை பரிசீலிப்பதில் கழிந்தன. அரசியல் நிர்ணய சபையின் இந்தப் பதினோரு அமர்வுகளுக்கும் 165 நாட்கள் பிடித்தன.
வரைவுக் குழுவைப் பொறுத்தவரை, அது அரசியல் நிர்ணய சபையால் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 29 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆகஸ்டு மாதம் 30 ஆம் நாளில் அது தன் முதல் கூட்டத்தை நடத்தியது. ஆகஸ்டு 30 ஆம் நாளிலிருந்து 141 நாள்கள் அது அமர்வில் இருந்தது. இந்த சமயத்தில் அது அரசியல் சாசன வரைவைத் தயாரித்தது. வரைவுக் குழுவின் பணிக்கு அடிப்படையாக, அரசியல் சாசனத் தயாரிப்பு ஆலோசகர் தயாரித்து, வரைவுக் குழுவின் பணிக்கு அடிப்படையாகக் கொடுக்கப்பட்ட அரசியல் சாசனம் - 243 விதிகளையும் 13 அட்டவணைகளையும் கொண்டிருந்தது. வரைவுக் குழு அரசியல் நிர்ணய சபைக்கு அளித்த முதலாவது அரசியல் சாசன வரைவில், 315 விதிகளும் 8 அட்டவணைகளும் இருந்தன. பரிசீலனைக் கூட்டத்திற்குப் பிறகு அரசியல் சாசன வரைவில் அடங்கியிருந்த விதிகளின் எண்ணிக்கை 386 ஆக அதிகரித்தது. அதன் இறுதி வடிவத்தில் அரசியல் சாசன வரைவு, 395 விதிகளையும் 8 அட்டவணைகளையும் கொண்டுள்ளது. சுமார் 7,635 திருத்தங்கள் அரசியல் சாசன வரைவுக்கு முன் வைக்கப்பட்டன. இவற்றில் எதார்த்தத்தில் சபையில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் 2,475 ஆகும்.
இந்தத் தகவல்களையெல்லாம் நான் ஏன் கூறுகிறேன் என்றால் ஒரு கட்டத்தில், இந்தப் பணியை முடிப்பதற்கு அரசியல் நிர்ணய சபை அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது என்று கூறப்பட்டது. அது, பொதுமக்கள் பணத்தை விரயம் செய்து ஆமை வேகத்தில் பணியாற்றுவதாகக் குறை கூறப்பட்டது. ‘ரோமாபுரி எரியும்போது நீரோ மன்னன் பிடில் இசைத்ததைப் போன்றுள்ளது' என்று பழி சுமத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளில் ஏதாவது நியாயம் உள்ளதா?
அரசியல் சாசனங்களை உருவாக்க மற்ற நாடுகளிலுள்ள அரசியல் நிர்ணய சபைகள் எடுத்துக் கொண்ட நேரத்தை நாம் பார்க்கலாம். சில எடுத்துக்காட்டுகள் : 1787 மே மாதம் 25 அன்று கூடிய அமெரிக்க கன்வென்ஷன், தன் பணியை 1787 செப்டம்பர் 17இல் அதாவது நான்கு மாதத்தில் முடித்தது. கனடா நாட்டு அரசியல் சாசன அமைப்பு கன்வென்ஷன், 1864 அக்டோபர் 10 இல் கூடியது; 1867 மார்ச்சில் அரசியல் சாசனம் ஏற்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளும் அய்ந்து மாதங்களும் எடுத்துக் கொண்டது. ஆஸ்திரேலியாவின் அரசியல் சாசனத் தயாரிப்பு அவை, 1891 மார்ச்சில் கூடியது; 1900 சூலை 9 இல் அரசியல் சாசனத்தை உருவாக்கியது. 9 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. தென் ஆப்பிரிக்க கன்வென்ஷன், 1908 அக்டோபரில் கூடியது; 1909 செப்டம்பர் 20 இல் அரசியல் சாசனத்தை நிறைவேற்றியது. இதற்கு ஓராண்டுக்கால உழைப்பு தேவைப்பட்டது.
அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்க அரசியல் சாசனத் தயாரிப்பு அமைப்புகளைவிட, நாம் அதிக காலம் எடுத்துக் கொண்டது உண்மைதான். ஆனால், கனடா கன்வென்ஷனைவிட அதிக காலம் எடுத்துக் கொள்ளவில்லை; ஆஸ்திரேலியா கன்வென்ஷனை விடக் குறைவாகவே நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் கால அளவை ஒப்பிடும் போது, இரண்டு விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அரசியல் சாசனங்கள், இந்திய அரசியல் சாசனத்தைவிட மிகச் சிறியவை. நான் ஏற்கனவே கூறியபடி, நமது அரசியல் சாசனத்தில் 395 விதிகள் உள்ளன. அமெரிக்க அரசியல் சாசனத்தில் 7 விதிகள் மட்டுமே உள்ளன. முதல் நான்கு விதிகள் 21 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கனடா நாட்டு அரசியல் சாசனத்தில் 147ம், ஆஸ்திரேலிய சாசனத்தில் 1283ம் தென் ஆப்பிரிக்க அரசியல் சாசனத்தில் 153 பிரிவுகளும் உள்ளன.
இரண்டாவது விஷயம் என்னவென்றால் - அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அரசியல் அமைப்புச் சாசனங்களை உருவாக்கியவர்கள், திருத்தங்கள் சம்பந்தமான பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருக்கவில்லை. முன்மொழியப்பட்ட வடிவத்திலேயே அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், அதே நேரத்தில் நமது அரசியல் நிர்ணய சபை 2,473 திருத்தங்கள் வரை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த உண்மை களை எல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால், நாம் தாமதமாகச் செயல்பட்டோம் என்ற குற்றச்சாட்டு, முற்றிலும் ஆதாரமற்றது என்று எனக்குத் தோன்றுகிறது. இவ்வளவு கடினமான பணியை, இவ்வளவு விரைவில் நிறைவேற்றியதற்காக, அரசியல் நிர்ணய சபை கண்டிப்பாகத் தன்னைப் பாராட்டிக் கொள்ளலாம்..
ஒரே ஒரு தனிப்பட்ட உறுப்பினரைத் தவிர, வரைவுக் குழுவின் பணிகளைக் குறித்து, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களின் பாராட்டுதல்களில் பொதுவான உடன்பாடு காணப்படுகிறது. தனது பணிகளை அங்கீகரித்து, தன்னிச்சையாக தாராளமாக வழங்கப்பட்ட பாராட்டுதல்களினால், குழு மகிழ்ச்சி அடைந்திருக்கும் என்பதில் அய்யமில்லை. இந்த வரைவுக் குழு சபையின் உறுப்பினர்களும் வரைவுக் குழுவில் என்னுடன் பணியாற்றிய நண்பர்களும் என் மீது பொழிந்த புகழாரங்களுக்கு, நன்றி தெரிவித்துக் கொள்ள சொற்கள் கிடைக்காமல் திண்டாடுகிறேன். பட்டியல் சாதியினரின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமென்பதைத் தவிர, வேறு எந்தவித நோக்கங்களுமின்றிதான் நான் அரசியல் நிர்ணய சபையில் சேர்ந்தேன். அதிகப் பொறுப்பான பணி களை ஏற்க நான் அழைக்கப்படுவேன் என்று நான் சிறிதளவுகூட சிந்திக்கவில்லை. என்னை வரைவுக் குழுவுக்கு சட்டமன்றம் தேர்ந்தெடுத்தபோது, நான் பெரிதும் வியப்படைந்தேன். வரைவுக் குழு என்னை அதன் தலைவராகத் தேர்ந்தெடுத்தபோது, நான் அதைவிட கூடுதல் வியப்படைந்தேன். எனது நண்பர் அல்லாடி கிருஷ்ணசாமி (அய்யர்) போன்ற என்னைவிட மிகவும் தகுதிபெற்ற சிறந்த பெரிய மனிதர்கள் வரைவுக் குழுவில் இருந்தனர். என் மீது இவ்வளவு நம்பிக்கை கொண்டு, பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து - அவர்களுடைய கருவியாக என்னைப் பயன்படுத்தி - நாட்டிற்குத் தொண்டு செய்ய எனக்கு அளித்துள்ள வாய்ப்புக்கு அரசியல் நிர்ணய சபைக்கும், வரைவுக் குழுவிற்கும் நன்றியுடையவனாக இருப்பேன்.
எல்லா உறுப்பினர்களும் கட்சிக் கட்டுப் பாட்டிற்கு அடங்கி நடந்திருந்தால், அரசியல் நிர்ணய சபையின் நடவடிக்கைகள் சுவையற்றதாக இருந்திருக்கும். கட்சிக் கட்டுப்பாடு, அதன் கண்டிப்பான தன்மையால் சட்டமன்றத்தை ‘ஆமாம் சாமி'களின் கூட்டமாக மாற்றியிருக்கும். நல்லவேளை சில ‘புரட்சியாளர்கள்' இருந்தனர். திரு. காமத், டாக்டர் பி.எஸ். தேஷ்முக், திரு. சித்வா, பேராசிரியர் சக்சேனா, பண்டிட் தாகூர்தாஸ் பார்கவா ஆகியவர்களைக் குறிப்பிட வேண்டும். அவர்கள் எழுப்பிய பிரச்சினைகளெல்லாம் பெரும்பாலும் சித்தாந்தம் பற்றியவையே. அவர்களுடைய ஆலோசனைகளை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதிருந்தது, அவர்களுடைய ஆலோசனைகளின் மதிப்பைக் குறைத்துவிடவில்லை. சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு உயிரோட்டம் அளிக்க, அவர்கள் செய்த பணியை குறைத்து மதிப்பிட முடியாது. நான் அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் இல்லையென்றால், அரசியல் சாசனத்தின் அடிப்படை யான கோட்பாடுகளை விளக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்காமல் போயிருக்கும். அரசியல் சாசனத்தை எந்திர கதியில் நிறைவேற்றுவதைவிட இது முக்கியமானது.
இறுதியாக, இந்தச் சபை நடவடிக்கைகளை நடத்திய முறைக்கு தலைவர் அவர்களே, உங்களுக்கு நான் என் நன்றியைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். இந்த சபையின் நடவடிக்கைகளில் பங்கு கொண்டவர்களுக்கு - தாங்கள் காட்டிய பரிவும், மரியாதையும் அவர்களால் மறந்துவிட முடியாது. வரைவுக் குழுவின் திருத்தங்கள் சில தருணங்களில் தொழில் ரீதியான சில காரணங்களினால் ரத்து செய்யப்பட வேண்டி வந்தது. அவை எனக்கு மிகவும் நெருக்கடியான தருணங்களாக இருந்தன. அரசியல் சாசனத் தயாரிப்புப் பணி; சட்டப் பிடிப்பில் சிக்கிக்கொள்ள அனுமதிக்காததற்கு நான் முக்கியமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது நண்பர்கள் திரு. அல்லாடி கிருஷ்ணசாமி (அய்யரும்), திரு. டி.டி. கிருஷ்ணமாச்(சாரி)யும் அரசியல் சாசனத்திற்கு எவ்வளவு ஆதரவு அளிக்க முடியுமோ அவ்வளவு ஆதரவு அளித்துள்ளனர். எனவே, நமது அரசியல் சாசனத்தின் சிறப்புத் தகுதிகளைப் பற்றி இப்பொழுது நான் பேசப் போவதில்லை. ஏனெனில், ஓர் அரசியல் சாசனம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அதைச் செயல்படுத்து பவர்களின் தன்மையைப் பொறுத்து, அது மோசமானதாக மாறலாம். ஓர் அரசியல் சாசனம் எவ்வளவு மோசமாக இருப்பினும், அதைச் செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருப்பின் - அது ஒரு சிறந்த அரசியல் சாசனமாக செயல்படும். ஓர் அரசியல் சாசனத்தின் செயல்பாடு அதன் தன்மையை மட்டும் முற்றிலும் சார்ந்ததன்று. அரசின் உறுப்புகளான சட்டமன்றம், ஆட்சித்துறை, நீதித்துறை ஆகியவைகளை உருவாக்க மட்டும் அரசியல் சாசனம் வழிவகை செய்யும். ஆனால், அரசின் இந்த அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு ஆதாரமான காரணிகள் - மக்களும், அவர்கள் தங்கள் நோக்கங் களையும் அரசியல் விருப்பங்களையும் நிறைவேற்ற கருவிகளாகப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுமேயாகும். இவற்றின் செயல்பாடுகளைப் பொறுத்தே அதன் வெற்றியுள்ளது.
இந்திய மக்களும் அவர்களுடைய அரசியல் கட்சிகளும் எம்முறையில் நடந்து கொள்வார்கள் என்பதை யார் கூற முடியும்? தங்கள் நோக்கங்களை அடைய, அவர்கள் அரசியல் சாசன ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பார்களா அல்லது புரட்சிகர முறைகளைப் பின்பற்றப் போகிறார்களா? அவர்கள் புரட்சிகர முறைகளை பின்பற்றப் போகிறார்கள் என்றால், அரசியல் சாசனம் எவ்வளவு சிறப்புள்ளதாக இருந்தாலும், அது தோற்றுவிடும் என்று கூற எந்த தீர்க்கதரிசியும் தேவையில்லை. எனவே, மக்களும் அவர்களது கட்சிகளும் என்ன பங்கு வகிக்கப் போகிறார்கள் என்பதைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், அரசியல் சாசனத்தைக் குறித்துத் தீர்ப்பளிப்பது பயனற்றது.
கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சோஷலிஸ்டு கட்சி ஆகிய இரண்டு தரப்பினரிடமிருந்தும் பெருமளவில் அரசியல் சாசனத்துக்கு எதிரான கண்டனக் குரலைக் கேட்க முடிகிறது. அரசியல் சாசனத்துக்கு எதிராக அவர்கள் ஏன் கண்டனக் குரல் எழுப்புகின்றனர்? அது உண்மையிலேயே ஒரு மோசமான அரசியல் சாசனமா? இல்லை என்று உறுதியாகக் கூறுகிறேன். பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், அரசியல் சாசனம் இருக்க வேண்டுமென்று கம்யூனிஸ்டுக் கட்சி விரும்புகிறது. நாடாளுமன்ற ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படையில், இந்த அரசியல் சாசனம் அமைந்திருப்பதால் அவர்கள் கண்டனம் செய்கின்றனர்.
சோஷலிஸ்டுகள் இரண்டு விஷயங்களை விரும்புகிறார்கள். அவர்கள் விரும்பும் முதல் விஷயம் இதுதான் : இழப்பீடு எதுவும் அளிக்காமல், எல்லா தனியார் சொத்துகளையும் தேசியமயமாக்க அரசியல் சாசனம் அவர்களுக்குச் சுதந்திரம் அளிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். இரண்டாவதாக, சோஷலிஸ்டுகள் விரும்புவது, அரசியல் சாசனம் குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமைகள் முழுமையானதாக, வரம்பற்றதாக இருக்க வேண்டுமென்கிறார்கள். அப்பொழுதுதான் அவர்கள் கட்சி ஆட்சிக்கு வரமுடியாவிட்டால், விமர்சிப்பதற்கு அவர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் இருப்பதுடன் அரசைக் கவிழ்ப்பதற்கும்கூட உரிமை இருக்கும்.
இந்த முக்கியமான அடிப்படைகளில்தான் அரசியல் சாசனம் குற்றம் சாட்டப்படுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகக் கோட்பாடு மட்டுமே அரசியல் ஜனநாயக முறையில் சிறந்தது என்று நான் கூறவில்லை. இழப்பீடு அளிக்காமல் தனியார் சொத்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற கோட் பாடு புனிதமானதென்றோ, அதிலிருந்து விலகிச் செல்வது கூடாது என்றோ நான் கூறவில்லை. அடிப்படை உரிமைகள் முழுமையாக இருக்கக் கூடாதென்றோ அல்லது அதற்கு அளிக்கப்பட்டுள்ள வரம்புகள் நீக்க முடியாததென்றோ நான் கூறவில்லை. நான் கூறுவதெல்லாம் இந்த அரசியல் சாசனத்தின் கோட்பாடுகள், தற்கால தலைமுறையினரின் கருத்துகளே. ஒருவேளை நான் மிகைப்படக் கூறுவதாகக் கருதினால், அவை அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களின் கருத்துகள் என்று கூறுகிறேன். அரசியல் சாசனத்தில் அவை சேர்க்கப்பட்டதற்கு, வரைவுக் குழுவின் மீது ஏன் குறை கூறுகின்றீர்கள்? அரசியல் நிர்ணய உறுப்பினர்கள்கூட ஏன் குறைகூறப்பட வேண்டும் என்று கேட்கிறேன்? அமெரிக்க அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்த அமெரிக்காவின் புகழ்பெற்ற அரசியல் நிபுணரான ஜெபர்சன், சில அழுத்தமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் சாசனத்தை உருவாக்குபவர்கள் எவரும் இதைத் தவிர்க்க முடியாது. ஓரிடத்தில் அவர் பின்வருமாறு கூறியுள்ளார்:
“ஒவ்வொரு தலைமுறையும் - பெரும்பான்மையின் விருப்பப்படி, தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு வாழும் உரிமையுடைய ஒரு தனிப்பட்ட தேசிய இனமாகக் கருத வேண்டும். மற்ற நாட்டுக் குடிமக்களுடன் தங்களைப் பிணைத்துக் கொள்ளும் உரிமையில்லாதது போலவே, அடுத்த தலைமுறை யையும் பிணைத்துக் கொள்ள முடியாது.” மற்றொரு இடத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்:
‘ஒரு தேசத்தின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள், தங்களுடைய நலனுக்காகக்கூடத் தொடக்கூடியதல்ல, மாற்றக்கூடியதல்ல என்ற கருத்து, பொதுமக்களுக்காக அவைகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்டவர்களுக்கு, தாராளமாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை - மன்னர் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க, ஒரு சட்ட வழிமுறையாக இருக்கலாம். ஆனால், இது அந்தத் தேசத்துக்கு எதிரான முட்டாள்தனமான கருத்தாகும். நமது சட்டவல்லுநர்களும் மதகுருமார்களும் பொதுவாக இந்தக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார்கள். ஒருவேளை முந்தைய சந்ததியினர், இந்த உலகை அதிக சுதந்திரத்துடன் கையாண்டிருக்கலாம். நம்மால் மாற்ற முடியாத சட்டங்களை நம்மீது திணிக்க உரிமை யுள்ளவர்களாக எண்ணியிருக்கலாம். அதே போன்று நாமும் சட்டங்களை உருவாக்க, எதிர்காலத் தலைமுறையினரின் மீது திணிக்கலாம். அவர்களுக்கு அதை மாற்றுவதற்கு எந்த உரிமையும் இருக்காது. மொத்தத்தில் உலகம் உயிருடன் வாழும் மனிதர்களுக்கல்ல, மடிந்தவர்களுக்கே அது சொந்தம்.”
ஜெபர்சன் கூறியது, முழுக்க முழுக்க உண்மை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஜெபர்சன் எடுத்துரைத்துள்ள இந்தக் கோட்பாட்டிலிருந்து அரசியல் நிர்ணய சபை விலகிச் சென்றிருந்தால் - அதைக் குறைகூறுவது, ஏன் கண்டனம் செய்வதுகூட நியாயமானதுதான். ஆனால், அது அப்படி நடந்து கொண்டுள்ளதா என்று கேட்கிறேன்? அவ்வாறு நடந்து கொள்ளாமல் முற்றிலும் மாறாக அது செயல்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தைத் திருத்துவது சம்பந்தமான வழிமுறைகளை ஆழ்ந்து நோக்க வேண்டும். இந்த அரசியல் சாசனம் தவறற்றது என்றோ, இறுதியானது என்றோ, இந்த சபை முத்திரை குத்தவில்லை. கனடா நாட்டிலுள்ளது போல, மக்களுக்கு அரசியல் சாசனத்தைத் திருத்தும் உரிமை வழங்கப்படாமலிருக்கவில்லை. ஆஸ்திரேலியா அல்லது அமெரிக்காவிலுள்ளது போல, அரசியல் சாசனத்தைத் திருத்த, சிறப்பு நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. மாறாக, அரசியல் சாசனத்தைத் திருத்துவதற்கு, மிகவும் எளிதான நடைமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன.
நாடு இன்றுள்ள நிலையில் அரசியல் சாசனத்தைத் திருத்த, நாம் உருவாக்கியுள்ள எளிதான நடைமுறையை, உலகிலுள்ள வேறு எந்த அரசியல் நிர்ணய சபையாவது கொண்டு வந்துள்ளது என்று நிரூபிக்க முடியுமா? அரசியல் சாசனத்தை விமர்சிக்கும் எந்த நபருக்கும் நான் சவால் விடுகிறேன். அரசியல் சாசனத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைதான். அவர்களுக்கு ஆதரவாக வயது வந்தோர் வாக்குரிமை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறமுடியவில்லை என்றால், அரசியல் சாசனத்தைப் பற்றிய அவர்களது அதிருப்தி - பொதுமக்களால் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்றுதான் கூறவேண்டும்.
அரசியல் சட்ட முக்கியத்துவம் பெற்ற ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும்தான் குறிப்பிடுகிறேன். மத்திய அரசில் அதிகாரம் குவிக்கப்பட்டு, மாநிலங்கள் நகரசபைகள் அளவுக்கு அதிகாரம் இழந்துள்ளன என்ற கடுமையான குற்றச்சாட்டுள்ளது. இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு என்பது தெளிவாகத் தெரிவதுடன், அரசியல் சாசனம் எதை நடைமுறைப்படுத்த உள்ளது என்பதைப் பற்றிய தவறான அடிப்படையிலிருந்து இது எழுந்துள்ளது எனலாம். மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பொறுத்த வரையில், அது அமைந்துள்ள அடிப்படைக் கோட்பாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியம். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சட்டமன்ற மற்றும் நிர்வாகப் பிரிவினை, மத்திய அரசு இயற்றும் சட்டத்தினால் அல்லாமல் அரசியல் சாசனத்தின் மூலமே நிர்ணயிக்கப்படுகிறது என்பதுதான் கூட்டாட்சி முறையின் அடிப்படையான கோட்பாடு. அதைத்தான் அரசியல் சாசனம் செயல்படுத்துகிறது. நமது அரசியல் சாசனத்தின்படி, மாநிலங்கள் தங்கள் சட்டமன்ற மற்றும் நிர்வாக அதிகாரத்திற்கு மத்திய அரசைச் சார்ந்து இருக்கவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் சம நிலையில் உள்ளன. இப்படிப்பட்ட ஓர் அரசியல் சாசனத்தை மத்திய அரசுக்கு சாதகமானது என்று கூறப்படுவதைப் புரிந்து கொள்வது கடினமாக உள்ளது.
வேறு எந்தக் கூட்டாட்சி அரசியல் சாசனத்தில் உள்ளதைக் காட்டிலும் அதிக அளவிலான களத்தை, அதனுடைய சட்டமன்ற மற்றும் நிர்வாக அதிகாரத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசுக்கு இந்த அரசியல் சாசனம் ஒதுக்கியிருக்கலாம். எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டிருக்கலாம். இந்த அம்சங்கள் கூட்டாட்சியின் சாரமாக அமைவதில்லை. மத்திய அரசுக்கும் அதன் மாநிலங்களுக்கும் இடையே, சட்டமன்ற மற்றும் நிர்வாக அதிகாரத்தை அரசியல் சாசனம் பகுத்தளிப்பதுதான் கூட்டாட்சி முறையின் முக்கிய அம்சம் எனலாம். இந்தக் கோட்பாட்டைத்தான் நமது அரசியல் சாசனம் கொண்டுள்ளது. அதைப் பற்றி எந்தவித அய்யப்பாடும் இருக்க முடியாது. எனவே, மாநிலங்கள் மத்திய அரசின் கீழ் வைக்கப்பட்டுள்ளன என்று கூறுவது தவறாகும். இந்த அதிகாரப் பிரிவின் எல்லையை, மத்திய அரசு தன் விருப்பப்படி மாற்ற முடியாது. நீதித் துறைகூட ஒன்றும் செய்ய முடியாது. இது மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
‘நீதிமன்றங்கள் திருத்தம் செய்யலாம். ஆனால், எதை ஒன்றையும் அதற்குப் பதிலாகப் புகுத்த முடியாது. முன்பு கூறிய விளக்கங்களுக்கு புதிய வாதங்களை, புதிய கருத்துகளை அளிக்கலாம். ஒரு சில சந்தர்ப்பங்களில் இந்த எல்லைக் கோட்டைத் தாண்டலாம். ஆனால், சில வரையறைகளை அவை தாண்ட முடியாது. குறிப்பிட்டு ஒதுக்கப்பட்டுள்ள சில அதிகாரங்களை அவை மாற்றி ஒதுக்க முடியாது. ஏற்கனவே உள்ள அதிகாரத்தின் கட்டுக் கோப்பை அவை விரிவுபடுத்த முடியும். வெளிப்படையாக ஓர் அமைப்புக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை, வேறு ஓர் அதிகார அமைப்புக்குக் கொடுக்க முடியாது.” ஆகவே, கூட்டாட்சி முறைக்கு மாறாக மத்திய அரசில் அதிகாரக் குவிப்பு என்ற முதல் குற்றச்சாட்டு தோல்வி அடைந்து விடுகிறது.
மாநில அரசுகளைப் புறக்கணித்து செயல்பட, மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது இரண்டாவது குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். இந்த மாதிரி அதிகப்படியான அதிகாரங்களை அரசியல் சாசனம் அளிப்பதற்காக அதைக் கண்டனம் செய்வதற்கு முன் சில நோக்கங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அதிகப்படியான அதிகாரம் என்பது, அரசியல் சாசனத்தின் பொதுவான அம்சமாக இல்லை. அது பயன்படுவதும், செயல்படுத்தப்படுவதும், நெருக்கடி கால நிலைகளில் மட்டுமே. இரண்டாவதாக சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு நெருக்கடி நிலை தோன்றும்போது, மத்திய அரசுக்கு அதிகப்படியான அதிகாரம் கொடுப்பதைத் தவிர்க்க முடியுமா? ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் மத்திய அரசுக்கு இப்படிப்பட்ட அதிகப்படியான அதிகாரம் கொடுப்பதின் நியாயத்தை மறுப்பவர்கள், பிரச்சினையின் அடிப்படையில் உள்ள விஷயத்தைத் தெளிவாகக் காணவில்லை என்று தெரிகிறது. ‘வட்ட மேசை' என்ற இதழின் 1935 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வெளியீட்டில், இந்தப் பிரச்சினை மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து பின்வரும் பகுதியைக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆசிரியர் கூறுகிறார்:
‘அரசியல் அமைப்பு முறைகள் என்பவை உரிமைகளும், கடமைகளும் அடங்கிய தொகுதியாக உள்ளன. இறுதியில் யாருக்கு அல்லது எந்த அதிகார அமைப்புக்கு ஒரு குடிமகன் தன் விசுவாசத்தைச் செலுத்துகிறான் என்பதில் இது அடங்கியிருக்கிறது. சாதாரண நடைமுறைகளில் இந்தக் கேள்வி எழுவதில்லை. ஏனெனில், சட்டம் அதை கவனித்துக் கொள்கிறது. இந்த மாதிரி பல்வேறு நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிட்ட செயல்பாடுகளில் - ஓர் அதிகார அமைப்பிற்கும், மற்ற நடவடிக்கைகளில் வேறு ஓர் அதிகார அமைப்பிற்கும் பணிந்து, குடிமகன் தன் அலுவல்களை கவனித்து வருகிறான். ஆனால், ஒரு நெருக்கடி உருவாகும்போது விசுவாசத்தைக் கோரும் உரிமை யாருக்கு என்பதில் முரண்பாடுகள் தோன்றுகின்றன. இறுதியான விசுவாசத்தைப் பிரிப்பது சாத்தியமில்லை என்பது அப்போது தெளிவாகிறது. இறுதியாக, சட்ட விளக்கத்தின் மூலம் விசுவாசப் பிரச்சினையை தீர்மானிக்க முடியாது. எல்லா எதார்த்த நிலைமைகளுக்கும் ஒத்து சட்டம் இருக்க வேண்டும். எல்லா சம்பிரதாய முறைகளையும் களைந்துவிட்டுப் பார்த்தால் கேள்வி இதுதான் - குடிமகனின் எஞ்சிய விசுவாசம், எந்த அதிகார அமைப்பிற்கு உள்ளது? அது மத்திய அரசுக்கா அல்லது உறுப்பினராக உள்ள மாநிலத்திற்கா?”
பிரச்சினையின் காரணமான இந்தக் கேள்வியின் பதிலைப் பொறுத்துதான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு உள்ளது. பெரும்பான்மையான மக்களின் கருத்துப்படி, நெருக்கடி காலத்தில் குடிமகனின் எஞ்சிய விசுவாசம் மத்திய அரசின் மீதுதான்; உறுப்பினராகவுள்ள மாநிலங்களின் மீதல்ல என்பதில் அய்யப்பாடு இல்லை. நாடு முழுவதற்குமான பொது நலனுக்காக, பொதுவான முடிவுக்கு மத்திய அரசே செயலாற்ற முடியும். ஒரு நெருக்கடி காலத்தில் மத்திய அரசுக்கு அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்பட்டதற்கான நியாயம் இதில்தான் இருக்கிறது. இந்த நெருக்கடி கால அதிகாரங்களினால் உறுப்பு மாநிலங்களுக்கு எத்தகைய கடமைகள் சுமத்தப்பட்டுள்ளன? இதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. ஒரு நெருக்கடி நிலையின்போது, தங்களுடைய பிராந்திய நலன்களுடன் மொத்தமாக தேசத்தின் நலன்களையும் கருத்துகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாதவர்கள் மட்டுமே அதை எதிர்த்துக் குறைகூற முடியும். இவ்வாறு அம்பேத்கார் உரையாற்றினார்.