🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அன்று தூக்குக்கயிறை அறுத்தெறிந்த வைகோ; இன்று மண்டகப்படி தடையையும் தகர்த்தெறிந்தார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவில் 500 வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்துவரும் கட்டபொம்மன் சத்திர மண்டகப்படிக்கு அறநிலையத்துறை இணை ஆணையாளர் விதித்த தடை. ஆலயக்குழுவினரின் முறையீட்டை அடுத்து 24 மணி நேரத்தில் தமிழக முதல்வரைச் சந்தித்து தடையைத் தகர்தெறிந்த வைகோ. அன்று கட்டபொம்மனாரின் வாரிசு குருசாமி நாயக்கரின் தூக்குக்கயிறை இறுதி வினாடிகளில் அறுத்தெறிந்த அதே வைகோ,  இன்று கட்டபொம்மன் மண்டகப்படிக்கான தடையை இறுதி நொடியில் தகர்த்தெறிந்துள்ளார். பரபரப்பான திக்... திக்... இறுதி நொடிகள். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கட்டபொம்மன் மண்டகப்படியில் நடந்தது என்ன?. இதுபற்றிய முழுவிவரம் வருமாறு, 


அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில், வீரபாண்டிய கட்டபொம்மனின் முன்னோர்களால் 500 ஆண்டுகளுக்கு முன்பாக  'சத்திரம்'  ஒன்று கட்டப்பட்டது.   மாசித்திருவிழா 9-வது நாள் மண்டகப்படியின்போது சிவன் கோயிலில் இருந்து கொண்டுவரப்படும் உற்சவ மூர்த்தி முருகப்பெருமான்,  'கட்டபொம்மன் சத்திரம்' என்றழைக்கப்படும் மண்டபத்தில் எழுந்தருளி, வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் அவரது முன்னோர்கள் அன்பளிப்பாக வழங்கிய தங்க ஆபரணங்களை சரிபார்த்து மடத்தின் நிர்வாகிகளிடம் கையெழுத்து பெற்றுச்செல்வது வாடிக்கை.

பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருந்துவரும் கட்டபொம்மன் மண்டகப்படியை கட்டபொம்மனாரின் வாரிசுதாரர்களுக்குள் நிலவும் பிரச்சினையைக் காரணம் காட்டி, இன்று (மார்ச்'1) மாலை நடைபெறவுள்ள மண்டகப்படிக்கு, இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் சில தினங்களுக்கு முன்பு தடை விதித்திருந்தார். திடீரென விதிக்கப்பட்ட தடையை விலக்கிக்கொள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலையக்குழுவினர் உள்ளூரளவில் கடந்த  வியாழக்கிழமை (27.02.2026) வரை பெருமுயற்சி எடுத்துள்ளனர்.

ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி தடையைத் திரும்பப்பெற இணை ஆணையாளர் உறுதியாக மறுத்துவிட்டார். மண்டகப்படிக்கு இரண்டு நாட்களே இருந்தநிலையில், கட்டபொம்மன் வம்சாவளியினருக்கு இருந்துவரும் பாரம்பரிய உரிமையை நிலைநாட்ட "வீரசக்கதேவி" வழிகாட்டதான் வழிகாட்ட வேண்டுமென ஆலயக்குழுவினர் அம்மனிடம் சரணாகதியடைந்தனர். அன்னை சக்கதேவியோ வாழும் கட்டபொம்மனாம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களைக் கைகாட்டியது போலும்.

ஆம், அதற்குப்பின் நடந்த அனைத்தும் சினிமா பணியில் பரபரப்பாக நடந்தேறியுள்ளது.

கூட்டணி தொகுதிப் பங்கீடு, நிதியளிப்புக் கூட்டம் என எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வைகோ அவர்களைச் சந்திக்க இடமும், நேரமும் கிடைப்பது குதிரைக்கொம்பு என்பது அரசியலை நன்கறிந்தவர்கள் அறிவர். நல்வாய்ப்பாக வெள்ளியன்று சென்னையில் இருப்பதை உறுதி செய்துகொண்ட ஆலயக்குழுவினர், உடனடியாக வியாழக்கிழமை நல்லிரவே புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை சென்னை வந்து சேர்ந்தனர். 

அங்குதான் ஒரு டிவிஸ்ட்.... 

தூத்துக்குடியிலிருந்து ஆலயக்குழுவினர் மட்டும் வந்தனரா? இல்லை அன்னை சக்கதேவியும் உடன் வந்தாளா? என்று தெரியவில்லை.

ஆம், ஆலயக்குழுவினர் சென்னை வந்த நேரம், வைகோ அவர்கள் கட்சித் தலைமையகமான 'தாயகம்' வருவதாகத் தகவல். பொதுவாக வைகோ அவர்கள் சென்னையில் இருந்தால் தினந்தோறும் தாயகத்திற்கு வந்துவிடுவார் என்பது வாடிக்கை தான் என்றாலும், இருதய அறுவை சிகிச்சைக்குப்பிறகு, சமீப ஆண்டுகளில் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி ஓய்வெடுக்கச் சொல்வதால் 'தாயகம்' எப்போது வருவார் என்பது உறுதியாகச் சொல்லமுடியாத நிலைதான். 


வந்திருப்பது ஆலயக்குழுவினர் அல்ல, வீரசக்கதேவியே தான் என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகள் உறுதி செய்தன.

வைகோ அவர்களைச் சந்திப்பது உறுதியாகிவிட்டது. இப்போது ஆலயக்குழுவினருக்கு ஒரே சந்தேகம் மட்டுந்தான். தலைவரிடம் பிரச்சினையை விளக்கிச்சொல்ல போதுமான நேரம் கிடைக்குமா? தகுந்த சூழல் அமையுமா? என்ற தயக்கத்துடனே 'தாயகத்திற்குள் அடியெடுத்து வைத்தனர். 

அவர்களுக்குத் தெரியாதல்லவா? தங்கள் கையை மீறிப்போய்விட்ட பிரச்சினையைத் தீர்க்க சக்கதேவிதான் 'தாயக வாசலுக்கு' அழைத்து வந்துள்ளாள் என்பது...

ஆனால் பாருங்கள், தாயகத்தில் ஆலயக்குழுவினர் தன்னைச் சந்தித்தபோது சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகப் பேசியுள்ளோம் என்பது வைகோ அவர்களுக்கே தெரியாது. 


ஆம், தன்னை சந்திக்க வந்திருப்பவர்கள் தன் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களோ, பிற கட்சித் தலைவர்களோ, முக்கியப் பிரமுகர்களே கிடையாது. சக்கதேவி, கட்டபொம்மன் தான் தெரியுமே தவிர, இப்போது வந்துள்ளவர்களைப் பற்றி வைகோ அவர்கலுக்கு எதுவும் தெரியாது. சமீப காலங்களில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக யாரிடமாவது, எந்தவித இடையூறுமின்றி தான் பேசியிருப்பேனா? என்று வைகோ அவர்கள் யோசித்துப் பார்ப்பாரேயானால் நிச்சயம் இல்லை என்பதே நிதர்சனமாக இருக்கும். அந்த அளவுக்கு ஆலயக்குழுவினரோடு கட்டபொம்மன் குறித்தும், கட்டபொம்மன் வாரிசுதாரர் குருசாமி நாயக்கரின் தூக்குத் தண்டனையை இறுதி நொடியில் தடுத்து நிறுத்திய வரலாற்று சம்பவங்களையும் அசைபோட்டுள்ளார் வைகோ.

ஆலயக்குழுவினருக்கோ நாம் வந்துள்ளது 'தாயகமா?' இல்லை 'தாய் வீடா?' என்று வியக்கும் அளவிற்கு வைகோ-வுடனான சந்திப்பு மன நிறைவைத்தந்திருக்கும்.


இரண்டு மணிநேர உரையாடலில் கட்டபொம்மன் சத்திர மண்டகப்படி குறித்த முழுவிவரங்களையும், மனுவையும் பெற்றுக்கொண்ட வைகோ அவர்கள், வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவால், பயணம் செய்யமுடியாத நிலையில் இருந்துவரும் கட்டபொம்மனாரின் நேரடி வாரிசுதாரர் வீமராஜா அனுப்பிருந்த வீடியோவையும் பார்த்துள்ளார். 'கட்டபொம்மனுக்காக நிச்சயம் செய்வேன்' என்று வாக்குக்கொடுத்த வைகோ அவர்களுக்கு, கிடைத்த கால அவகாசமோ 24 மணிநேரம் மட்டும் தான்.

ஏற்கனவே இணை ஆணையாளர் தடை உத்தரவு போட்டு, ஆலயக்குழுவின் மேல்முறையீடு அனைத்தும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டியிருப்பதால் சம்மந்தப்பட்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரிடம் முறையிட்டால் கூட, அவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிப்பாரே தவிர, 24 மணிநேரத்தில் முடிவெடுக்க வேண்டுமென்று அழுத்தம் கொடுக்கமுடியாது. தமிழக முதல்வர் மனது வைத்தால் மட்டுமே உடனடித் தீர்வுக்கான ஒரே வழி என்று முடிவு செய்துகொண்ட வைகோ அவர்கள், ' 5% மட்டுமே வாய்ப்புத் தெரிகிறது; நம்பிக்கையோடு ஊர் திரும்புங்கள்; என்னால் ஆனமட்டும் முயற்சி செய்கிறேன்' என ஆலயக்குழுவினருக்கு நம்பிக்கையூட்டிய கையோடு, அவர்களின் மனுவோடு சேர்த்து தானும் ஒரு கடிதத்தை தமிழக முதல்வருக்கு உடனடியாகத் தயார் செய்கிறார்.


வைகோ கேட்டால் பிரதமரே உடனடியாக அப்பாயின்மென்ட் கொடுப்பார். ஏன், வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் அப்பாயின்மென்ட் கூடத் தேவையில்லை என்ற நிலை தான். எங்கு வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் பிரதமரைச் சந்திக்க முடியும். ஏனெனில், வைகோ சந்திக்க வருகிறார் என்றால் 'நிச்சயம் தனிப்பட்ட நலன் இருக்காது; பொதுநலனே இருக்கும்' என இந்திராகாந்தி முதல் மோடி வரை நம்புவது தான் அதற்குக் காரணம். அந்த நற்பெயரின் நீட்சிதான் மாநில முதல்வர்களுக்குக் கூட திறக்காத பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின் 'வீட்டுக் கதவுகள்' துரை வைகோ அவர்களுக்குத் திறப்பதின் சூட்சுமம். அப்படியிருக்க தன் ஆருயிர்ச் சகோதரர் தமிழக முதல்வரின் கதவுகள் திறக்காதா என்ன?

ஆனால் இங்குதான் ஒருசிக்கல்...

தமிழக முதல்வர் அப்போது தான் கோவையில் நடைபெறும் மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். எப்படியும் நல்லிரவுக்குள் வீடு திரும்பிவிடுவார். சனிக்கிழமை (28.02.2026) மதியத்திற்குள் சந்தித்தாக வேண்டும். ஆனால் அதேநேரத்தில் வேலூர் மண்டலத்தின் சார்பில் நடைபெறும் நிதியளிப்பு விழா நிகழ்ச்சிக்கு வைகோ அவர்கள் வேலூருக்குச் சென்றாக வேண்டும்.

'கட்சிக்கு நிதியா? கட்டபொம்மனுக்கு நீதியா?..

'ஒன்பது கம்பளத்தாரின் உரிமையா? உயிரினும் மேலான கட்சிக்காரர்களின் காத்திருப்பா?...

முடிவெடுக்க வேண்டிய நெருக்கடியில் வைகோ.


'கட்சிக்காரர்கள் ஓட்டுப்போடுவார்கள்; கம்பளத்தார்கள் ஓட்டுப்போடுவார்களா? இப்படித்தான் ஒரு அரசியல் கட்சித் தலைவர் யோசிப்பார்.

ஆனால் ' கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ' என்பதற்கு முன்னரே 'புரட்சிப்புயல் வைகோ' என்று பெயரெடுத்தவராயிற்றே!.

'புரட்சி என்றால் என்ன?'

இந்தப் பிரபஞ்சத்தில் எது உண்மை என்று நம்பப்பட்டு வருகிறதோ அதை ஒரே நொடியில் மாறிப்போவது தான் புரட்சி. 

உலகம் தட்டையானது என்று வேதங்கள் முதற்கொண்டு சொல்லப்பட்டதற்கு மாறாக உருண்டை என்று நிரூபிக்கப்பட்ட தருணம் புரட்சி.

பூமிதான் மையம் என்ற நம்பிக்கையை மாற்றி சூரியன் தான் மையம் என்று நிரூபிக்கப்பட்ட தருணம் புரட்சி.

 உலகெங்கும் முடியாட்சி கோலோச்சிய காலத்தில் மக்கள் போராட்டங்கள் மூலம் முடியாட்சிக்கு முடிவுகட்டி ஜனநாயகத்திற்கு விதையூன்றியது புரட்சி. 

அதுபோலத்தான் 'இது நடக்கவே நடக்காது என்று அனைவராலும் கைவிடப்பட்ட ஒன்றைக் கையிலெடுத்து அதை வெற்றிகரமாக முடித்துக்காட்டுவதும் புரட்சி தான்.

அப்படித்தான் வைகோ அவர்களின் பொதுவாழ்விலும் ஏராளமான உதாரணங்கள் 'புரட்சிப்புயல்' என்ற அடைமொழிக்குப் பெருமை சேர்க்கின்றன. 


குடும்பத் தகராறு ஒன்றில் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் வாரிசுதாரர்களில் ஒருவரான 'குருசாமி நாயக்கர்' தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கியபோது அவரது மாமா இறந்துவிடுகிறார். கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட 'குருசாமி நாயக்கருக்கு' திருநெல்வேலி அமர்வு நீதிமன்றம் 1976-இல் தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கிறது. இதனையடுத்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட குருசாமி நாயக்கர், தனது இறுதிநாட்களை எண்ணிக் கொண்டுள்ளார்.

1971-இல் இந்திரா காந்தி அம்மையாரால் கொண்டுவரப்பட்ட மிசா சட்டம், இந்தியாவில் அவசரநிலை பிரகடனத்தின்போது பலநூறு உயிர்களைப் பழிவாங்கியது, இந்திய வரலாற்றைப் புரட்டிப்போட்டது என பல, பல அம்சங்கள் இருந்தாலும், குருசாமி நாயக்கரின் இருண்ட வாழ்வில் புதிய வெளிச்சத்தைக் கொண்டுவந்தது இந்த மிசா சட்டம் தான் என்பது விநோதம்.


ஆம், 1977-இல் வைகோ அவர்கள் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறைக்குள் நுழைந்தபோது குருசாமி நாயக்கர் விடுதலைக்கான கதவுகள் திறந்தது. (தீமையிலும் ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது).

பாளையங்கோட்டை சிறையில் வைகோ - குருசாமி நாயக்கர் சந்திப்பு இந்திய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் பதிவு செய்கிறது. தற்செயலாக நடைபெற்றுவிட்ட கொலைக்காக, கட்டபொம்மன் வம்சாவளியில் மற்றுமொரு தூக்குக்கயிறா? என ஆதங்கப்படும் வைகோ, சிறைக்கொட்டடியில் குருசாமி நாயக்கர் தலைக்குமேல் தொங்கும் தூக்குக்கயிற்றை அறுத்தெறிய சபதமெடுத்துக் கொள்கிறார். ஆனால், குருசாமி நாயக்கரின் கருணை மனுவோ இந்திய உச்சநீதிமன்றத்தாலும், குடியரசுத் தலைவராலும் நிராகரிக்கப்படுகிறது. 38 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று, வைகோ அவர்கள் ஜனாதிபதி சஞ்சீவரெட்டியிடம் கொடுத்த மனு பயனற்றுப்போய், 1981-செப்டம்பர்'15 என்று குருசாமி நாயக்கர் தூக்கிலிடும் நாள் உறுதி செய்யப்பட்டாகிவிட்டது. 


தூக்கிலிட இன்னும் ஒருவாரகாலமே அவகாசம், இம்முறை 50 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துப்பெற்று மீண்டும் ஜனாதிபதியிடம் மனு அளிக்கிறார் வைகோ. இப்போது சற்று ஆறுதல் விசயமாக, உள்துறை இணை அமைச்சரிடம் மனு அளிக்குமாறு வைகோ கேட்டுக் கொள்ளப்படுகிறார். உள்துறை சார்பில் கட்டபொம்மனாரின் நேரடி வாரிசுதான் என்பதை உறுதிசெய்துகொள்ளும் நடைமுறை தொடங்குகிறது. இதைக்காரணம் காட்டி இன்னும் ஐந்து நாட்களில் தூக்கிலிடப்படவேண்டியது மேலும் ஒருவருடம் தாமதப்படுத்தப்படுகிறது.

இதற்கிடையே சஞ்சீவ ரெட்டிக்குப் பின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயில்சிங், சுதந்திரப்போராட்டத் தியாகியின் வாரிசு என்பதற்காக மரணதண்டனையைக் குறைக்கமுடியாது என்று இரண்டாவது கருணை மனுவையும் நிராகரிக்கின்றார். ஏற்கனவே ஜூன் 14, 1984 அன்று, மரணதண்டனை நிறைவேற்றப்படும் நாள் நிர்ணயிக்கப்பட்டு ஜூன் 21 ஆக மாற்றப்படுகிறது. இந்த அனைத்து கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில், நிகழ்வுகள் தங்கள் போக்கிற்காக பொறுமையாகவும் வேதனையுடனும் காத்திருந்த ஒரே நபர் குருசாமி நாயக்கர் மட்டுமே. அவர் தூக்கிலிடப்பட்டால், அவரது உடல் வைகோவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே அவரது ஒரே விருப்பம்.


இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி சின்னப்ப ரெட்டி, மரண தண்டனை விதிக்கப்பட்டவர் நீண்ட காலம் சிறையில் இருந்திருந்தால், தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்று தீர்ப்பளிக்கின்றார். இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், குருசாமி ஐந்து ஆண்டுகளாக சிறையில் வாடுவதாகக் கூறி ஜனாதிபதியிடம் மற்றொரு மனுவைத் தாக்கல் செய்கிறார் வைகோ.  மரணதண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் ஆகிய இரண்டிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

தீர்ப்பு நாள் வந்தது. நீதிபதிகள் வி. ராமசாமி மற்றும் நீதிபதி டேவிட் அன்னோசாமி ஆகியோர் “தொழில்முறை கொலைகாரர்களை தூக்கிலிடுவதில் இருந்து விடுவிக்க முடியுமானால், ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் சந்ததியினரும் தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும். எனவே மரண தண்டனையை ரத்து செய்து, அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிடுகிறோம்" என்று தீர்ப்பளிக்கின்றனர். இப்படியாக 7 வருடங்கள் போராடி குருசாமி நாயக்கர் தலைக்கு மேல் தொங்கிய கயிற்றை அறுத்தெறிந்தார் வைகோ.


அதுமட்டுமா?, கரீபியன் தீவுகளில் ஏற்பட்ட பெரும்புயலில் சிக்கிக்கொண்ட 153 தமிழர்கள் மரணத்தின் தருவாயில் நல்லிரவு நேரத்தில் வைகோ அவர்களைத் தொடர்புகொண்டபோது, அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது தூங்கிக்கொண்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங்கை எழுப்பி, உடனடியாகத் தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வைகோ கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஸ்டெர்லைட், நியூட்ரினோ, முல்லைப்பெரியாறு என அனைவரும் கைவிட்ட பிரச்சினைகளைக் கையிலெடுத்து வெற்றிகண்டவர் வைகோ என்பதால் தான் அவர் புரட்சிப்புயல் என்ற அடைமொழிக்கு பொருத்தமானவராகப் பார்க்கப்படுகிறார்.

இப்போது கட்டபொம்மன் மண்டகப்படி விசயத்திற்கு வருவோம்.

தொகுதிப்பங்கீடு, அடுத்தநாள் தனது பிறந்தநாள் என தமிழக முதல்வரின் நிகழ்ச்சி நிரல் என நேர நெருக்கடிகளுக்கு மத்தியில் சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு வைகோ அவர்கள் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார் முதல்வர். 


வைகோ அறிவாலயம் செல்கிறார் என்ற செய்தி வெளியானவுடன், என்ன- ஏது என்று தெரியாமல் அரசியல் வட்டாரங்களிலும், மீடியாக்களிலும் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. அதற்குள் அரசியல் விமர்சகர்கள் தொலைக்காட்சி "லைவ்" ஒளிபரப்பில் சென்று தங்கள் ஆரூடங்களைக் கூறத்தொடங்கியிருந்தனர். ஆனால் வைகோ அவர்கள் முதல்வரைச் சந்தித்துவிட்டு வெளியேவந்து செய்தியாளர்களைச் சந்தித்த போதுதான் உண்மை நிலவரம் தெரிந்தது. அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "பல நூற்றாண்டுகாலமாக கட்டபொம்மன் சத்திரத்தில் நடைபெற்று வரும் மண்டப்படிக்கு தடை விதித்துள்ள இணை ஆணையாளரின் செயலால், ஒன்பது கம்பளத்து சமுதாய மக்களும் பெரும் மனவேதனையில் இருப்பதை முதல்வரிடம் தெரிவித்து, இணை ஆணையாளர் விதித்த தடையைத் திரும்பப்பெற வேண்டுமென்று முதல்வரிடம் வலியுறுத்தியதாகவும், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை" என்று தெளிவுபடுத்தி விட்டு, வேலூர் நிகழ்ச்சிக்கு செல்வதாகக் கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.  


வைகோ அவர்களின் பேட்டி வெளியானதும் அதுவரை மீடியாக்களில் இருந்துவந்த பரபரப்பு கம்பளத்தார்கள் வாட்ஸப் குரூப்களுக்கு தொற்றிக்கொண்டது.

மறுபுறம் அடுத்த சில மணிநேரங்களில் இணை ஆணையாளர் தடை உத்தரவை திரும்பப் பெற்றுக்கொண்டு மண்டகப்படிக்கு அனுமதியளிக்க வேண்டும். என்ன நடக்கப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது.

தமிழகமெங்கும் மிகுந்த ஆவலோடு காத்துக்கொண்டிருக்கையில்,  தூத்துக்குடி கம்பளத்தார்கள் உட்சபட்ச பரபரப்பிற்கே சென்றுவிட்டனர். முற்றிலும் நம்பிக்கை இழந்திருந்த நேரத்தில் வைகோ அவர்கள் முதல்வரைச் சந்தித்துவிட்டு செய்தியாளரிடம் பேசியதிலிருந்து எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் சக்கதேவியை வேண்டிக்கொண்டு காத்திருந்தனர்.

வைகோ அவர்கள் குறிப்பிட்டதுபோல் 'ஒன்பது கம்பளத்தார்களின் நம்பிக்கையும், கட்டபொம்மனாரின் தியாகமும் வீண் போகவில்லை'. இணை ஆணையாளரின் தடையை உடைக்கும் ஒவ்வொரு அடியிலும் 'அன்னை சக்கதேவி' உடனிருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். இம்முயற்சியில் ஈடுபட்ட ஆலயக்குழுவினரே நம்பமுடியாத அளவில், வைகோ அவர்களே 5% வாய்ப்பே உள்ளது என்ற நிலையில், நேற்று இரவு அந்த நல்ல செய்தி கம்பளத்தார்களின் காதுகளை எட்டியது.

முதல்வர் அவர்களின் உத்தரவின்பேரில், கட்டபொம்மன் மண்டகப்படிக்கு தடை விதித்த இணை ஆணையாளரே தனது உத்தரவை திரும்பப்பெற்றுக்கொண்டு, இன்று மாலை வழக்கம்போல் 9-வது நாள் மண்டகப்படி  நடத்த உத்தரவிட்டுள்ளார். இறுதி கட்டத்தில் சில மணித்துளிகளில் தடையைத் தகர்த்தெறிய அனைவரையும் அன்னை சக்கதேவி வழிநடத்தியுள்ளால் என்றால் மிகையல்ல.


கடந்த சில தினங்களுக்கு முன்புதான் மதுரை திருமங்கலம் இரயில்வே மேம்பாலத்திற்கு "வீரபாண்டிய கட்டபொம்மன்" பெயர் சூட்டி, 40 லட்சம் கம்பளத்தார்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த முதல்வர், 'வாழும் கட்டபொம்மனாய். கம்பளத்தார்களுக்கு என்றும் துணைநிற்கும் வைகோ அவர்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து, வழக்கம்போல் கட்டபொம்மன் மண்டப்படி நடத்த உடனடியாக உத்தரவிட்டுள்ளார்.

1974இல் கட்டபொம்மன் கோட்டை தொடங்கி, கலைஞர் முதல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை, சமுதாய மக்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் கட்டபொம்மனாரின் புகழுக்கு தொடர்ந்து  பெருமை சேர்த்துவருவது சமுதாய மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த நெருக்கடியான தருணத்தில் கம்பளத்தாரின் பாரம்பரிய உரிமையை நிலை நாட்டியுள்ள தமிழக முதல்வர் அவர்களுக்கும் , இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களுக்கும், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், ஒருவேளை மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனார் காலத்தில் வைகோ இருந்திருந்தால் கட்டபொம்மனாருக்கு வந்த தூக்குக்கயிற்றையும் அறுத்தெறிந்திருப்பாரோ என்று அதிசயக்கும் வகையில், திராவிட இயக்கத்தின் போர்வாளாய் மட்டுமல்ல இராஜகம்பள சமுதாயத்திற்கும்  பாதுகாப்பு அரணாய் திகழும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும் இராஜகம்பள சமுதாயத்தினரின் மனமார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகின்றோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved