🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இராஜகம்பளத்தார் வாக்கு யாருக்கு? களமிறக்கப்படுகிறாரா கலையரசன்?

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி இன்றோ நாளையோ அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் 40 லட்சம் கம்பளத்தார்களின் வாக்குகளை கவரப்போவது எந்தக் கட்சி எது என்ற கேள்வியும், இதையொட்டிய அரசியல் கட்சிகளின் நகர்வுகளும், இந்தமுறையாவது தங்கள் சமூகத்தினருக்கு அரசியல் கட்சிகள் போட்டியிடும் வாய்ப்பு வழங்குமா? என்ற எதிர்பார்ப்புகளையும் அலசுகிறது இக்கட்டுரை.

நடப்பு தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் மே 7 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து இன்று (15.03.2026) அல்லது நாளை 17-வது சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ளது. இதற்கிடையே, தெலுங்குமொழி பேசும் இரண்டாவது பெரிய சமூகமான இராஜகம்பள சமூகம், பல பத்தாண்டுகளாக தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டு வருவது அச்சமுதாய இளம் தலைமுறை வாக்காளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இராஜகம்பள சமுதாயத்தினருக்கு இந்தத் தேர்தலில் உரிய வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று சமுதாய அமைப்புகள் பலவும் பிரதான அரசியல் கட்சிகளைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. முன்னெப்போதுமில்லாத அளவில் இப்பிரச்சினையை சமுதாய மக்களிடையே பேசுபொருளாக்கியுள்ளதில் வெற்றிபெற்றுள்ள சமுதாய அமைப்புகள், இந்தத் தேர்தலில் இராஜகம்பள சமுதாய மக்களின் வாக்கு வலிமையை உணர்த்த வேண்டும் என்பதிலும் குறியாக உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் கம்பளத்தார் வாக்குகளைப்பெற பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகின்றன.

ஆளும்கட்சியான திமுக தனது 75 ஆண்டுகால வரலாற்றில் 1977-இல் ஒரே ஒருமுறை மட்டுமே க.சுப்பு அவர்களுக்கு வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கியுள்ளது. அதன் பின் இராஜகம்பள சமுதாயம் என்ற ஒரு சமுதாயம் இருப்பதையே அக்கட்சி மறந்துவிட்டது. அந்த அளவிற்கு அரசியல் ரீதியாக உரிய வாய்ப்புகளின்றி  இராஜகம்பள சமுதாயம் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. எனினும், சமீப ஓரிரு ஆண்டுகளில் இருவருக்கு ஒன்றியச் செயலாளர் பதவியை அக்கட்சி வழங்கியுள்ளது. இருந்தபோதும், 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு பெரும் சமுதாயத்திற்கு சட்டமன்ற, நாடாளுமன்ற வாய்ப்புகளையோ அல்லது வாரியம் உள்ளிட்ட நியமனப் பதவிகளையோ கட்சி வழங்கவில்லை என்ற நீண்டகாலக் குறை சமூக மக்களிடையே மேலோங்கியுள்ளது. மேலும், அக்கட்சியில் எண்ணற்ற இராஜகம்பளத்தார்கள் கீழ்மட்டப் பொறுப்புகளில் இருந்தும் தலைமையை நேரடியாகச் சந்தித்து சமூகத்தின் தேவைகளை எடுத்துச் சொல்லக்கூடிய ஆளுமைகளை அக்கட்சி அடையாளப்படுத்தவில்லை என்பதால் கட்சிக்கும், மக்களுக்குமான இடைவெளி அதிகமாக உள்ளதையும் அக்கட்சி உணரவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. 

அதேவேளையில், 1974-இல் கலைஞர் ஆட்சியில்  கட்டபொம்மன் கோட்டை கட்டியது முதல் தற்போது தலைநகர் சென்னையில் மாவீரன் கட்டபொம்மன் சிலை நிறுவியது, மதுரை ரெயில்வே மேம்பாலத்திற்கு கட்டபொம்மன் பெயர் சூட்டியது, வரலாற்றில் முதல் முறையாக தமிழக முதல்வர் ஒருவர் கட்டபொம்மன் நினைவு நாளன்று நேரடியாக வந்து மரியாதை செலுத்தியது, திருச்செந்தூரில் கட்டபொம்மன் மண்டகப்படி நடத்த இணை ஆணையாளர் விதித்த தடையை உடனடியாக முதல்வர் தலையிட்டு விலக்கியது போன்ற பல  நல்ல விசயங்களால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான மதிப்பீடு சமுதாய மக்களிடம் பல மடங்கு உயர்ந்துள்ளது என்பதையும்  மறுப்பதிற்கில்லை.

ஆனால், இராஜகம்பளத்தார் சமூகத்திற்கு திமுக செய்துள்ள பல நல்ல விசயங்களை மக்களிடம் எடுத்துச்சொல்லி வாக்குகளை அறுவடை செய்ய, தங்கள் கட்சியிலுள்ள அச்சமுதாயத் தலைவர்களைப் பயன்படுத்திக்கொள்வதற்கு பதிலாக, தேமுதிக போன்ற கூட்டணிக் கட்சி வாயிலாக கம்பளத்தார் வாக்குகளைப் பெற திமுக முயல்வது பெரும் அரசியல் பிழை.


எல்லாப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலும் சினிமா மோகம் இருப்பது போல்தான் கம்பளத்தார் சமுதாயத்திலும் ஒருகுறிப்பிட்ட அளவில் சினிமா ரசிகர்கள் உண்டு. அதைத்தாண்டி இராஜகம்பளத்தார் சமுகத்திற்காக தேமுதிக சிருதுரும்பைக்கூட கிள்ளிப்போட்டதைல்லை என்பதே உண்மை. இன்னும் சொல்லப்போனால், இராஜகம்பளத்தார் சமுதாயத்தின் அடையாளமாம் மாவீரன் கட்டபொம்மனாருக்கு கேப்டன் விஜயகாந்த் உயிருடன் இருந்தவரை ஒரு மாலை கூட அணிவிக்க வந்தவரில்லை என்பதே நிதர்சனம். இவையெல்லாம் உணர்ந்துள்ள இராஜகம்பள சமூக படித்த மேல்த்தட்டு வர்க்கத்தில் விஜயகாந்த ஆதரவு மனநிலை துளியளவும் இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கம்பளத்தார்கள் அதிகமுள்ள விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் அதிக வாக்குகளைப் பெற்றதை வைத்து ஒட்டுமொத்த கம்பளத்தார் வாக்குகளை தேமுதிக கொண்டுவரும் என்று திமுக தலைமை நம்புவது கானல் நீராகவே முடியும் என்பதை தேர்தல் முடிவுகள் நிச்சயம் உணர்த்தும்.

மறுபுறம் தங்கள் கூட்டணியில் இருந்து தேமுதிக-வை இழந்துள்ள அதிமுக, தனது வேட்பாளர் தேர்வின் மூலம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக தங்கள் கூட்டணிக்குப் பெற்றுத்தந்த 0.5% வாக்குகளைவிடக் கூடுதலாகப் பெறமுடியும் எனத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கருத்து நிலவுகின்றன. அதாவது, தேமுதிக வை கூட்டணியில் சேர்த்து 'நோட்'டையும், 'சீட்'டையும் கொடுப்பதைவிட, அக்கட்சியின் ஓட்டு வங்கியாக நம்பப்படும் சமூகங்களைச் சேர்ந்த தங்கள் கட்சிப் பிரமுகர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கலாம் என்று திட்டமிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதன் மூலம் 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க அதிமுக திட்டமிடுகிறது'. 


அதாவது, தமிழகத்தில் பிஜேபி தலைதூக்கியபின்பு 'சோசியல் எஞ்சினீரிங்' என்ற பெயரில், அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஏதாவது ஒரு கட்சிப்பதவியை வழங்கி அவர்களின் அரசியல் ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளது. அதனால் விழித்துக்கொண்ட ஒவ்வொரு சமூகமும் எங்கே தங்கள் அரசியல் பிரதிநிதித்துவம் எனத் தேடத்தொடங்கியுள்ளன. 50 ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சியில் பெரும்பான்மை எண்ணிக்கையுள்ள 6, 7 சமூகங்களே அனைத்து அதிகாரங்களையும் ஆண்டு அனுபவித்து வருவதாக சாதி. மொழி சிறுபான்மை சமூகத்தினர் உணரத் தொடங்கியுள்ளனர். இது தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்று நீண்ட நாட்களாகக் கூறிவரும் தொட்டிய நாயக்கர், வேட்டுவக்கவுண்டர் போன்று பல தொகுதிகளில் வெற்றி தோல்விகளை நிர்ணயம் செய்யக்கூடிய அளவிலுள்ள  சமூகங்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக உள்ளது.

அந்தவகையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகவுள்ள, தெலுங்குமொழி பேசுவோரில் இரண்டாவது பெரிய சமூகமான தொட்டிய நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தன் கட்சி சார்பில் 'சீட்' வழங்குவதின் மூலம் நேரடியாக அதிமுக-வின் வாக்கு சதவீதத்தை உயர்த்தமுடியும் என்று அக்கட்சி நம்புவதாகத் தெரிகிறது. அதன்படி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் கோ.கலையரசன் களமிறக்கப்படலாம் என்ற செய்தி அரசியல் வட்டாரங்களில் கசிகிறது. 


கொங்கு வெள்ளாளர் செல்வாக்குள்ள இத்தொகுதியில் அதே சமுதாயத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சட்டமன்றத் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக தங்கவேலுவும் களமிறக்கப்பட்டபோது அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றிக்கனியைப் பறிக்கமுடியவில்லை. குறிப்பாக இஸ்லாமியர் அதிமுள்ள பள்ளபட்டி வாக்குச் சாவடியில் சொற்ப வாக்குகளே பெற்றனர். 

அதே சமயம் இங்கு கணிசமாகவுள்ள தொட்டிய நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் கவுண்டர் சமூகமல்லாத நாயக்கர், பிள்ளைமார், செட்டியார், அருந்ததியர் போன்ற சமூக வாக்குகள் அதிமுக வேட்பாளருக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அதாவது 'கவுண்டர் சமூகத்திற்கான நெகடிவ் வாக்கு குறையும்'. மேலும், அதிமுக வேட்பாளராக அறியப்படும் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியச் செயலாளர் கோ.கலையரசன் அனைவருக்கும் தெரிந்த முகமாகவும், களப்பணியில் நெ.1 ஆகவும், எல்லா சமூகங்களினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முகமாகவும் இருக்கிறார். ஒன்றே ஒன்று, அதிமுக தனது வெள்ளாளக் கவுண்டர் பாரம்பரிய வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற்றுத்தர முயற்சி எடுக்க வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் 'அதிமுக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் கட்சி' என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அத்தோடு இதன் தாக்கம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சொற்ப வாக்குகளில் வெற்றிக்கனியைத் தவறவிட்ட கம்பளத்தார்கள் அதிகம் வசிக்கும் ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக. அதிமுக தலைமையை நேரடியாக சமூக ரீதியாக குறிவைப்பவர்கள் செல்வாக்குள்ள தொகுதிகளில் கம்பளத்தார் எண்ணிக்கை கணிசமாக இருப்பது அக்கட்சியின் இழப்பை ஈடுசெய்ய உதவும். ஏற்கனவே, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை இராதாகிருஷ்ணன் போன்ற சிறுபான்மை சாதியினரோடு தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகங்களின் ஆதரவை நேரடியாகப்பெறுவதின் மூலம் அதிமுக தனது இழப்புகளை ஈடுசெய்து, வலிமையைப் பெருக்கிக்கொள்ள உதவும்.


சவால் என்று பார்த்தால், தொட்டிய நாயக்கர் போன்று குறிப்பிடத்தக்க வாக்குபலமுள்ள சாதி, மொழி சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த கட்சியினருக்கு அதிமுக தலைமை நேரடியாக வாய்ப்பு வழங்கும்போது 'தேர்தல் செலவு' மட்டுமே தடையாக உள்ளது. இது கலையரசன் விசயத்திலும் எதிரொலிக்கிறது. கலையரசன் சிறந்த களப்பணியாளர் என்பது அவரின் அரசியல் எதிரிகளும்கூட ஒப்புக்கொள்வர். ஆனால் அவரின் பெரிய மைனஸ் 'வைட்டமின் ப' என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

தொட்டிய நாயக்கர் போன்ற இடைநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மிகச்சிறந்த உழைப்பாளிகள், விசுவாசிகள் தானே தவிர 'செல்வந்தர்கள் அல்ல' என்பதே அவர்களின் பலவீனம். இதனைக் கருத்தில் கொண்டு, அதிமுக தலைமை 'கலையரசன்' போன்று ஒருசில பத்துப் பேர்களுக்கு 'தேர்தல் செலவை முழுமையாக ஏற்றுக்கொண்டு அவர்களைக் களமாடவிட்டால், கட்சிக்கு வெற்றி மட்டுமல்ல சாதி - மொழி சிறுபான்மையினரின் நம்பிக்கையையும் பெறலாம். தனது தலைமையிலான அதிமுக அனைவருக்குமான கட்சி தான என்பதை தன் சமூக வாக்குகளைக் கொண்டே எடப்பாடியார் நிரூபிக்கலாம்'.

பாஜக உடனான கூட்டணியைத் தொடர்ந்து மத சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றிபெறாத நிலையில், சாதி-மொழி சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளைப் பெறுவது தான் அக்கட்சிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. ஏற்கனவே எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் இச்சமூகங்களால் ஆதரிக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. சமீப காலங்களில் தலைமைக்கு எதிரானவர்களால் கட்டமைக்கப்பட்ட 'குறிப்பிட்ட சாதிக்கான கட்சி' என்ற மாய பிம்பத்தை அரசியல் வட்டாரங்களில் கசியும் செய்து உண்மையாகி 'ஒருவேளை அரவக்குறிச்சியில் கலையரசன் களமிறக்கப்பட்டு, அவரது வெற்றிக்கு அதிமுக தலைமை சிறப்பு கவனம் செலுத்துமானால், கட்சியின் தேக்கநிலைக்கும், விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து மாபெரும் எழுச்சிக்கான விதையாக அமையும் என்பது மட்டும் நிச்சயம்'.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved