தந்திரங்களைத் தவிடுபொடியாக்கும் எடப்பாடியார்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாகிவிட்டது. நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் அனைத்துக்கட்சி வாக்கு வங்கியையும் பதம்பார்க்கும் என்று கணிக்கப்படுவதால் 'சான்ஸ்' எடுத்துக்கொள்ள விரும்பாத ஆளும்கட்சியான திமுக மேலும் தன் கூட்டணியில் பல கட்சிகளைச் சேர்த்து வலிமைப்படுத்தி வருகிறது. உட்கட்சிக் குழப்பம் மற்றும் பாஜகவின் அழுத்தம் போன்ற காரணங்களால் பலவீனப்பட்டவராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சிக்கப்படுகிறார். ஆனால் உண்மையில் தனக்கு விரிக்கப்படும் வலையிலிருந்து தப்பித்துக்கொண்டும், வலிமைப்படுத்திக்கொண்டும் வருகிறார் எடப்பாடி என்கின்றனர் சில அரசியல் விமர்சகர்கள். எடப்பாடியார் குறித்து அவர்கள் பார்வை என்ன?
அம்மையார் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு அவர் எந்த நிலையில், எப்படியான சூழலில், யாரால் முதலமைச்சர் ஆனார் என்பது நாடறிந்தது. அதிகாரம் கைக்கு வந்த பின்னால் அவருக்கு இருந்த சவால்கள், சங்கடங்களை ஒவ்வொரு கட்டத்திலும் சரிசெய்து ஆட்சியை முழு ஆயுட்காலமும் தக்கவைத்துக்கொண்டது அவரின் மிகப்பெரிய வெற்றி. இதன் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் எல்லோரும் செய்துகொள்ளக்கூடிய ஒன்றே. இன்னும் சொல்லப்போனால் வலிமையான அதிகாரம் கொண்ட மத்திய அரசு, நீதித்துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பல மாநிலங்களில் செய்த மாய ஜால, மந்திர அரசியலுக்கு பலியாகாமல் சட்டமன்ற உருப்பினர்களைத் தக்கவைத்துக் கொண்டது 'நான்' வேற மாதிரி என்பதைப் புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வைத்தார். மத்தியில் ஆள்பவர்கள் யாரைத் தங்களுக்கு அச்சுறுத்தலாகப் பார்த்தார்களோ அந்த 'தினகரனை' விலக்கி வைத்து, அவர்கள் யாரைத் தங்களுக்கு ஆதரவாகப் பார்த்தார்களோ அந்த 'ஓபிஎஸை' உள்ளே கொண்டுவந்து, இணை ஒருங்கிணைப்பாளராகத் தன்னை தாழ்த்திக்கொண்டு, ஆட்சி லகானைக் கையில் வைத்துக்கொண்டு, அவர்களின் ஆசியோடு முழு ஆயுட்காலமும் ஆட்சி செய்தது அரசியல் சாதுர்யமானது. ஒப்பீட்டள்வில் அவரது ஆட்சியும் ஒன்று அவ்வளவு மோசமானது இல்லை. மோசம் என்பதற்காக சொல்லப்படும் காரணமும் மத்திய அரசின் பிடிவாதமான சில கொள்கைகளால் தான்.
அவர் ஆட்சியில் இருந்த போதும், ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் தீராத பிரச்சினை என்பது அரசியல் எதிரிகளால் அல்ல, கூட இருந்தே குழி பறிக்க நினைக்கும் குள்ளநரிக் கூட்டத்தால் மட்டுமே. சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருப்பார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த படுதோல்வியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தவர், கட்சிக்குள் காலைவாரக் காத்திருந்தவர்களுக்கு 'செக்' வைக்கும் விதமாக, கடைசி நேரத்தில் கொண்டுவரப்பட்ட வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு ஆட்சியைப் பலிகொடுக்கக் காரணமாயிற்று. இன்னும் கொஞ்சம் கூடுதல் அவகாசம் கிடைத்திருந்தாலோ அல்லது உடன் இருப்பவர்கள் விசுவாசமாக இருந்திருந்தாலோ இவ்விவகாரத்தை அவர் இன்னும் சூதனமாகக் கையாண்டிருக்க முடியும். ஆட்சிக்கும், கட்சிக்கும் பாதிப்பு என்றால் அந்த ஒருவிசயம் மட்டுமே.
ஏற்கனவே சசிகலா, ஓபிஎஸ் எதிராக இருக்கும்போது முக்குலத்தோர் இடம்பெற்றுள்ள இடஒதுக்கீடு விவகாரத்தைக் கையாண்ட விதம் ஒட்டுமொத்த சாதியையும் பழிவாங்கத் துடிக்கின்றார் என்ற எண்ணத்தை அம்மக்களிடம் ஏற்படுத்திவிட்டது. அந்த இழப்பை பிற சாதிகளை வைத்து ஈடு செய்திருக்கமுடியும், ஆனால் அதற்கான கால அவகாசம் இல்லாமல் போய்விட்டது. எனினும் எதிர்க்கட்சியாக கிடைத்த கால அவகாசத்தைக்கொண்டு கட்சியைத் தற்போது தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை விலக்கிவைத்து அவர் ஆடிய ஆட்டம் தேர்தலில் தோல்விதான் என்றாலும் கட்சியில் தனக்கு எதிரிகள் இல்லை என்பதில் வெற்றிதான்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலையில் தவெகவுடன் கூட்டணிக்கான முயற்சியைத் தொடக்கத்திலேயே செய்து பார்த்து விஜயின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்துகொண்டார். இதில் பதறிப்போன பாஜக ஓராண்டுக்கு முன்னரே வலுக்கட்டாயமாகச் சேர்த்துக்கொண்டு 'நாட்டாமை' செய்யத் தொடங்கியதை அதன் போக்கிலேயே விட்டுவிட்டார். தனக்கு ஆதாயமாகவுள்ள பாமகவுடன் மட்டும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை உறுதி செய்துவிட்டு, மற்ற எல்லாப் பொறுப்புகளையும் பாஜகவின் போக்கிலேயே விட்டுவிட்டார். பாஜக-வும் அதைத்தான் விரும்பும் என்பதைத் தெரிந்தே. செங்கோட்டையனை வேறுகட்சிக்கு அனுப்பியாகிவிட்டது, நயினார், தினகரன் போதும் ஓபிஎஸ் வேண்டாம், இனி பழனிச்சாமி குடிமி நம்மிடம் தான் என்று 'மனக்கோட்டை' கட்டிக்கொண்டு டெல்லியிலிருந்து பிரதமர், உள்துறை அமைச்சர் என அடிக்கடி தமிழகம் வந்து என்டிஏ கூட்டணி, என்டிஏ கூட்டணி எவ்வளவு முழங்கினாலும் எடப்பாடியாரிடம் எந்த ரியேக்சனும் இல்லை.
அதே நம்பிக்கையோடு விஜயை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக கடுமையாக முயற்செய்கிறது. விஜயின் டிமாண்ட் என்ன என்பது அவருக்கு ஏற்கனவே தெரியுமல்லவா. விஜயைக் கூட்டணிக்குள் கொண்டுவந்தால் பாஜக அடுத்து எப்படிக்காய் நகர்த்தும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன?. இருந்தும் ஆரம்பத்திலேயே வேணாமென்று சொல்லாமல் பாஜகவின் போக்கிலேயே விட்டு தேர்தல் தேதி அறிவிப்புவரை நகர்த்தி விட்டார். ஏற்கனவே 14% வாக்கு உள்ளது 2 சீட்டுக்கு 1 சீட்டு பாஜகவுக்கு வேண்டும் என்ற ரீதியில் பேசி 50 சீட்டில் முடிக்க நினைக்கும் பாஜக, விஜயையும் கூட்டி வந்தால் அதிமுகவை நூறு சீட்டுக்குள் அடக்க நிர்ப்பந்திப்பார்கள் என்பதும் தெரியும். மேலும், பீகரில் நிதீஷ்குமாருக்கு முதலமைச்சர் பதவி விட்டுக்கொடுத்து துணைமுதல்வராக பாஜவைச் சேர்ந்த ஒருவருக்கும், விஜய்க்கும் கொடுப்பதாகவே கூட்டணியை பாஜக உறுதி செய்யும். அதற்குப்பின்னால் என்ன செய்வார்கள் என்பது கத்துக்குட்டி அரசியல்வாதிகளுக்கே தெரியும்போது எடப்பாடி போன்ற அரசியல் வித்தகர்களுக்குத் தெரியாதா என்ன?.
தவெக விசயத்தில் எடப்பாடியாரின் நிலைப்பாடுதான் என்ன?
எடப்பாடியாரைப்பொறுத்தவரை விஜய்-க்கு துணைமுதல்வர் பதவி கொடுக்கக்கூட தயார் தான். ஆனால் அது அதிமுக - தவெக கூட்டணியாக இருக்க வேண்டும். இக்கூட்டணிக்கு பாஜக ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜ் தான். இருந்தாலும் ஒருசில தேவைகளுக்காக சின்ன அட்ஜெஸ்மென்ட் செய்து பாஜக வை மைனர் பார்ட்னராக சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் பாஜக வழியாக தவெக கூட்டணிக்குள் வந்தால், முதலில் கொள்கை எதிரி பாஜக என்ற ஒவ்வாமையிலிருந்து விஜய் வெளியே வந்துவிடுவார். ஒருவேளை இக்கூட்டணி வெற்றிபெற்றுவிட்டால் அடுத்து விஜயின் பிரபலத்தை தனக்கு மூலதனமாக்கிக்கொள்ள பாஜக முயற்சிக்கும்.
2029 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்குள் விஜயின் தவெக வை முன்னிறுத்தி அதிமுகவை தனிமைப்படுத்தும். மத்தியில் மீண்டும் அதிகாரம் கைக்கு வந்தால் 2031இல் அதிமுக என்ற கட்சியையே பழிகொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே இறுதிவரை என்டிஏ கூட்டணியில் தவெக வைச் சேர்க்க முயற்சிக்கும் பாஜகவை தன்போக்கிலேயே விட்டுவிட்ட எடப்பாடியார், தள்ளியே நின்று எப்போது வேட்டு வைக்க வேண்டுமோ அப்போது நேரம் பார்த்து வேட்டு வைத்து, அதை விஜய் வாயாலேயே அறிவிக்க வைத்துவிட்டார்.
மேலும், பாஜக தான் தவெகவுடன் பேச்சு நடத்துகிறது என்ற செய்தி மூலம் திமுக விற்குப்போகாத சிறுபான்மை வாக்குகளின் ஒருபகுதியயை விஜய் பக்கம் செல்லாமல் தடுத்துவிட்டார். இரண்டு வார காலம் பாஜகவின் கவனம் முழுவதும் தவெகவிடம் இருந்ததால் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை காலதாமதமாகியது எடப்பாடியாருக்கு சாதகம். இப்போது விஜய் இல்லை என்றாகிவிட்ட நிலையில் பாஜக எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் தொகுதி கொடுக்காமல் குறைத்துக் கொடுப்பதின் மூலம் முதல்வராக இருந்தபோதுமட்டுமல்ல இப்போதும் வலிமையான தலைவர் தான் என்பதையும் நிரூபிக்கிறார். இதில் முக்கிய அம்சம் என்னெவெனில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் எடப்பாடியார் ரூட்டிலேயே சிந்திப்பதாகச் சொல்லப்படுகிறது.
விஜய் போன்ற சினிமா பிரபலங்கள் வருவது தனது எதிர்கால அரசியலுக்கு உகந்தது அல்ல என்று நினைக்கிறார். பாஜக தலைமையும் விஜய் போன்ற தலையாட்டி பொம்மைகளைத் தான் விரும்பும், அண்ணாமலை போன்ற 'வைப்ரன்ட்' லீடர்களை விரும்பாது என்று சொல்லப்படுகிறது. மாநிலத்தில் தலைவர்கள் தேவையில்லை தலையாட்டி பொம்மைகள் இருந்தால் மட்டும் போதும் என்பதில் காங்கிரஸ், பாஜக இரண்டும் ஒன்றுதான். இதையெல்லாம் கணக்கில் வைத்துதான் எடப்பாடியார் அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். எந்த நேரத்திலும் மாறக்கூடிய அரசியல் சூழல் தனக்கு சாதகமாக அமைந்தால் தன்னை முதலமைச்சராக்க வேண்டிய தேவை பாஜகவுக்கே ஏற்படக்கூடும் என்று நம்புகிறார். கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதுவரை எந்த இடத்திலும் பாஜகவிடம் எடப்பாடியார் தனது பிடியை இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

