பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ரித்திகா- 494 , பாலமுருகன் - 493, கரிஷ்மா -492 மதிப்பெண்கள் பெற்று சாதனை!
தமிழகத்தில்
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம்
நடைபெற்றது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 71 ஆயிரம் பேரும், பன்னிரெண்டாம்
வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 7 ஆயிரம் பேரும் எழுதினர். இதனையடுத்து விடைத்தாள்கள்
திருத்தும் பணி நிறைவுபெற்று நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.
இத்தேர்வுமுடிவுகளின்படி வழக்கம்போல் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற்றுள்ளனர். இதைப்பிரதிபலிக்கும் வகையில் கம்பளத்தார் சமுதாய மாணவியர் பலரும் 90% க்கும் அதிகான மதிப்பெண்களைப் பெற்று வெற்றிகனியைப் பறித்துள்ளனர்.

இதில், கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள பெரியதொட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ரித்திகா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 494 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பால்வியாபாரி திரு.முருகேசன் – திருமதி.சித்ரா ஆகியோரின் இரண்டாவது மகளான ரித்திகா, காரமடை அருகேயுள்ள SRSI மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்துவருகிறார். ரித்திகா கணிதப்பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரித்திகாவின் மூத்த சகோதரி ஜீவிதா, இளைய சகோதரி சஞ்சனா ஆகியோரும் அதேபள்ளியில் படித்து வருகின்றனர்.

இதேபோல் SRSI மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்துவரும் கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க மகளிரணி நிர்வாகி திருமதி சாவித்திரி – திரு.ரங்கநாதன் தம்பதியரின் மகள் ஆர்.லக்ஷனா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 474 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஓட்டுநராகப்பணியாற்றிவரும் திரு.இரங்கநாதனின் மற்றொரு மகள் காவியா அதேபள்ளியில் படித்து வருகிறார். ஈச்சனாரி வடிவேல் அவர்களின் மகள் 458 மதிப்பெண்களும் பெற்று வெற்றிபெற்றுள்ளனர்.
ஈரோடு மாவட்ட அளவில், சத்தியமங்கலம் SRT யுனிவெர்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்துவந்த தேவா அரிசி மண்டி உரிமையாளர் திரு. பி.ஆனந்தன் – திருமதி.வனஜா ஆகியோரின் அன்புமகள் ஏ.கரிஷ்மா 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். பொறியியல் படட்தாரியான செல்வி கரிஷ்மா-வின் சகோதரர் கார்த்திகேயன் தற்போது எம்பிஏ படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் சாண்டி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் திரு.எம்.செல்வராஜ் அவர்களின் சகோதரி மகளான செல்வி எஸ்.விஷ்வ தர்ஷினி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 484 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல்மாணவியாக வெற்றி பெற்றுள்ளார்.

மாணவர்கள் வரிசையில் தூத்துக்குடி மில்லர்புரத்திலுள்ள எக்ஸ் என் (X an) மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் முத்தையாபுரத்தைச் சேர்ந்த மின்வாரியப்பொறியாளர் திரு.கருணாகரன் - திருமதி காளீஸ்வரி தம்பதியரின் மகன் கே.பாலமுருகன் 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். கே.பாலமுருகனைப் பாராட்டி வீரசக்கதேவி ஆலயக்குழு தலைவர் முருகபூபதி மற்றும் நிர்வாகிகள் சக்கதேவி ஆலயத்தில் சிறப்புப்பூசை செய்து, மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

இதேபோல் எண்ணற்ற மாணவச்செல்வங்கள் வெற்றிபெற்ற செய்திகளை சமூக வளைதளங்கள் மூலமாக அறியமுடிகிறது. அவர்களைப்பற்றிய மேலதிக விபரங்களை தனிப்பட்ட முறையில் யாரும் தகவல் தெரிவிக்காத காரணத்தால் இச்செய்தியில் குறிப்பிடமுடியவில்லை. எனினும் வெற்றிபெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

