🔴 LIVE | முப்பெரும் விழா 2023


267-வது பிறந்தநாள் விழா - மதுரையில் விஜயபிரபாகரன்?

மாவீரர் திலகம் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 267-வது பிறந்தநாள் விழா நாளை (ஜனவரி'03 ) கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே அதிமுக சார்பில் தலைமைக்கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்துவது உறுதியாகியுள்ள நிலையில், தேமுதிக சார்பில் முதன்முறையாக விஜய பிரபாகரன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விவரம் வருமாறு,


இந்திய சுதந்திரப்போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனரின் 267-வது பிறந்தநாள் விழா நாளை மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களிலுள்ள கட்டபொம்மனாரின் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு விழாவுக்குத் தயாராகிவருகின்றன. சமுதாய அமைப்புகள் ஒருபுறம் கட்டபொம்மானாரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவந்தாலும், அரசியல் கட்சித் தலைவர்கள் யார், யார் எந்தெந்தெந்த ஊர்களில் கலந்துகொள்கின்றனர் என்ற ஆர்வம் மேலோங்கியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டும் என்று நம்பப்படுகிறது.


அதிமுக சார்பில் ஏற்கனவே நிலையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் மதுரையில் அமைந்துள்ள சிலைக்கு மாலையணிவிக்க உள்ளனர். அதேபோல் மதிமுக சார்பில் பொதுச்செயலாளர் வைகோ அல்லது துரைவைகோ இருவரில் ஒருவர் அல்லது சில சமயம் இருவருமே கலந்து கொள்ளும் வாய்ப்பும் உண்டு. வைகோ அவர்கள் இன்றுதான் சமத்துவ நடைபயணைத்தை திருச்சியில் தொடங்கியுள்ளதால் ஒருவேளை காலை மதுரை சென்று மாலையணிவித்துவிட்டு மீண்டும் நடைபயணத்தைத் தொடங்கும் வாய்ப்புள்ளது.

இதற்கிடையே புதிய திருப்பமாக தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த மதுரை வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அரசியலுக்குப் புதிய வரவான தவெக தலைவர் விஜய் அவர்கள் தனது அலுவலகத்தில் கட்டபொம்மன் திருவுருப்படத்திற்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஆளும்கட்சி சார்பில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 3-ஆம் தேதி திண்டுக்கல்லில் அரசுவிழாவில் கலந்துகொள்வதாக இருந்தது ஜனவரி 7 ஆம் தேதிக்கு மாற்றமாகியுள்ளது. எனவே தமிழக முதல்வர் சென்னையிலுள்ள நிலையில் வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாள் அரசு விழாவாக சித்திரை வெள்ளியன்று உள்ளநிலையில், இரண்டு பிறந்தநாள் விழா நடத்துவது சாத்தியமில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், துணைமுதல்வரை கிண்டி வரவழைக்க அனைத்து முயற்சிகளும் சமுதாய அமைப்புகள் சார்பில் எடுக்கப்பட்டுவருகின்றன. 

எனினும் தேர்தலை மனதில் கொண்டு அரசியல்கட்சித் தலைவர்களால் கட்டபொம்மன் சிலை அமைந்துள்ள இடங்கள் நிரம்பிவழிய வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved