🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அதிகாரப்பூர்வ அரசு விழா இல்லை; ஆனாலும் பாஞ்சை வேந்தனுக்கு ராஜமரியாதை!

இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்டு, தூக்குக்கயிற்றை முத்தமிட்டு, நாட்டிற்காக இன்னுயிர் துறந்த மாவீரர் திலகம் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 267-வது பிறந்தநாள் விழா மிகுந்த எழுச்சியுடன் இன்று (03.01.2026) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசுவிழாவாக பாஞ்சாலங்குறிச்சி சித்திரைத் திருவிழாவோடு சேர்த்து கொண்டாடப்படுவதால், உண்மையான பிறந்தநாளான இன்று, அரசுவிழாவாகக் கொண்டாட முடியாத நிலை உள்ளது. எனினும் அரசுவிழாவுக்கான மரியாதையோடு இன்றைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டது, மாவீரனின் உண்மையான தியாகத்திற்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இதுபற்றிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு,


தமிழகத்தில் வாழும் 40 லட்சம் இராஜகம்பளத்தார்கள் மிகுந்த உணர்ச்சிப்பெருக்கோடும், உத்வேகத்தோடும் கொண்டாடும் திருவிழாவாக மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் பிறந்தநாள் அமைந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளும் கட்டபொம்மனாரின் தியாகத்தை அவ்வப்போது நினைவுபடுத்தவும், போற்றவும் தவறுவதில்லை. அரசியல் கட்சித் தலைவர்களைப் பொறுத்தவரை, வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வசனத்தை உச்சரிக்காமல் பேசவே முடியாது. அதேபோல், வீரம் என்றால் பொதுமக்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருபவராக கட்டபொம்மன் இருந்து வருகிறார். வரலாற்றில் இப்படி நீடித்த, நீங்காத பெயருக்கும், புகழுக்கும் காரணம், 39 வயதில் அவர் செய்த தியாகமே.

இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதி சமஸ்தானங்களும், நவாப்களும் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்துவிட்ட நிலையில், ஒரு குறுநில மன்னனாக, சுயமரியாதைக்காரனாக, ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்து, புன்னகையோடு தூக்குக்கயிற்றை முத்தமிட்ட பராக்கிரம செயலை இப்போது கேட்டாலும் ,கேட்போரைப் புல்லரிக்கச் செய்யும்.


இப்படிப்பட்ட அழியாப்புகழுக்கு சொந்தக்காரரான மாவீரன் கட்டபொம்மனாரின் உண்மையான பிறந்தாள் ஜனவரி-3 . 1974-இல் அன்றைய முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆங்கிலேயர்களால் அழித்தொழிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பி கட்டபொம்மனை மீண்டும் இம்மண்ணில் உயிர்த்தெழுப்பினார். அதுமுதல் சித்திரை முழுநிலவு சக்கதேவி கோவில் திருவிழாவும் சேர்ந்துகொண்டபடியால், எதிர்கால நலன் மற்றும் திருவிழா பாதுகாப்பு இவற்றைக் கருத்தில் கொண்டு சமுதாயப்பெரியோர்கள் வைத்த அன்புவேண்டுகோளை ஏற்று, அன்றைய தினமே கட்டபொம்மனாரின் பிறந்தநாளும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டுவருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட திமுக, இராஜகம்பள சமுதாய மக்களின் எண்ணவோட்டங்களை உள்வாங்கிக்கொண்டு, தலைநகர் சென்னையில் கட்டபொம்மனாருக்கு சிலை அமைக்க உறுதியளித்தது. அதனையடுத்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், முதல்வர் பதவியேற்றுக்கொண்ட சில மாதங்களிலேயே வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உறுதிகாட்டினார். அவர் சொன்னது போலவே தலைநகர் சென்னையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மையப்பகுதியில், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மாவீரன் கட்டபொம்மனுக்கு சிலை அமைத்து, அதைத் தானே திறந்தும் வைத்தார்.


கம்பளத்தார் எதிர்பார்த்தது போலவே தலைநகரில் சிலை வந்தாயிற்று. தலைநகரிலுள்ள கம்பளத்தாருக்கு கொண்டாட்டம். ஒருசில பிறந்த நாட்களை உற்சாகமாகக் கொண்டாடியவர்களுக்கு, அரசுவிழா குறித்த பின்னனி தெரியாத காரணத்தால், ஏன் ஜனவரி-3 ஆம் தேதி அரசுவிழாவாக, அமைச்சர்கள் வந்து மரியாதை செலுத்துவதில்லை என்ற குழப்பமும், மனக்குமுறலும் இருந்துவந்தது.

ஏற்கனவே வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கடும் முயற்சியால் கடந்த ஒருசில மாதங்களுக்கு முன் கட்டபொம்மனாரின் நினைவுநாளுக்கு தமிழக முதல்வர் நேரில் வந்து மரியாதை செய்துவிட்டுச் சென்ற நிலையில், மீண்டும் முதல்வர் வருவது சாத்தியமில்லை என்பதால் துணைமுதல்வரை பிறந்தநாளுக்கு அழைத்துவர வேண்டும் என்று நிர்வாகம் தீவிர முயற்சியில் இறங்கியது. ஆனால் அரசின் கொள்கை முடிவுகள், நடைமுறைகள் அதற்கு இடம்தரவில்லை. இதனால் அதிகாரப்பூர்வமாக எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. ஆனாலும் கட்டபொம்மன் மீது அக்கறை கொண்ட முதல்வர் அரசுவிழாவுக்குறிய அத்தனை மரியாதையும் செய்திருந்தது இன்றைய நிகழ்வில் உறுதியானது. 


பாஞ்சை வேந்தனின் பிறந்தநாளையொட்டி கிண்டியிலுள்ள கட்டபொம்மன் சிலை தமிழக அரசால் அலங்கரிக்கப்பட்டு, தமிழக அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியம், மேயர் ப்ரியா ராஜன், துணைமேயர் மகேஷ்குமார் ஆகியோர் மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதன் மூலம் தலைநகரில் மாமன்னர் பிறந்தநாள் விழா அரசுவிழாவாக வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு 40 லட்சம் இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகளும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் வாயிலாக தமிழக முதல்வருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved