🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தந்திரம் வென்று சுதந்திரம் காப்போம்! - சுதந்திரதின வாழ்த்துகள்.

அடக்கி ஆள நினைக்கும் அந்நியர் சக்திகளுக்கு எதிராக, இந்த மண்ணில் பிறந்த என்னிடமே அந்நியன் வரி கேட்பதா என்று உரிமை முழக்கம் எழுப்பி, இம்மண்ணின் மக்களை சுதந்திரத்திற்காக போராட  தன் உயிரைக்கொடுத்து  உணர்வூட்டிய மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் வம்சாவளிகளாக இன்று இந்திய நாட்டின் 75-வது சுதந்திரதினத்தை மாநிலம் முழுவதும் பல இடங்களில் கம்பளத்தார்கள் கொண்டாடி வருகின்றனர். திருப்பூரிலுள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு த.வீ.க.பண்பாட்டுக்கழகத்தின் மாநில அவைத்தலைவர் திரு.P.S.மணி  தலைமையிலும், கோவை, ஈச்சனாரியிலுள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு ஈச்சனாரி N.மகாலிங்கம் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து தியாகிகளை வாழ்த்தி முழக்கம் எழுப்பினர். இந்நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் ஊராட்சி மன்றத்தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர். இதுதவிர வன்னியர் உள்ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டுள்ள 115 சமுதாயங்களை இணைந்து உருவாக்கியுள்ள சமூகநீதி கூட்டமைப்பின் சார்பில் கொங்கு செட்டியார், ஆண்டிப்பண்டாரத்தார், வண்ணார், நாவிதர் சமூகங்களை சேர்ந்தவர்கள் மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.


இந்த மண்ணில் மைந்தர்கள், பூர்வகுடிமக்கள் தங்கள் ஆதிக்கத்திற்கும், உரிமைக்கும் ஆபத்து வந்தபொழுது 200 ஆண்டுகளுக்கு முன்பே போராடி உயிர்நீத்துள்ளார்கள். ஆனால் அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெற்று, அனைவருக்கும், அனைத்தும் சமம் என்று அரசியல் சாசணம் உறுதி செய்தபின், கல்வியிலும், பொருளாதாரத்திலும் ஓரளவு  முன்னேற்றம் அடைந்துள்ள நாம், உள்ளங்கையில் உலகின் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளக்கூடிய அளவில் தொலைத்தொடர்பு சாதனங்களை கொண்டுள்ள இக்காலத்தில், நமது அடிப்படை உரிமைகள் குறித்துகூட தெரிந்துகொள்ளாமல், தெரிந்துகொள்ள ஆர்வமில்லாமல், நம் அடுத்த தலைமுறையை நாமே அடிமைகளாக்க துணைபோய்க்கொண்டுள்ளோம். 

இந்த மண்ணில் மானத்தோடும், சுயமரியதையோடும் வாழ்வதற்கு கட்டபொம்மன், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால நாயக்கர், தளி எத்திலப்ப நாயக்கர் உள்ளிட்ட பல தலைவர்கள் தங்கள் இன்னுயிர் துறந்துள்ளனர். ஆனால் அதைக்காப்பாற்றிக்கொள்ளும் வல்லமையற்றவர்களாக, இதுவரை அனுபவித்து வந்த இடஒதுக்கீட்டு உரிமையை இழந்துள்ளோம். இதை எதிர்த்து கேட்க நாதியற்றவர்களாக அறியாமை, சுயநலம் காரணமாக வாய்மூடி மௌனிகளாக உள்ளோம். சுதந்திர தினத்தை பெருமைபொங்க கொண்டாடுபவர்கள் யாவரும் சுதந்திரம் என்றால் என்ன? உண்மையில் நாம் சுதந்திரத்தின் மகத்துவத்தையும், அது குடிமக்களுக்கு வழங்கும் உரிமையையும் தெரிந்து வைத்துள்ளோமா? என்று சுயபரிசோதனை அவசியம். வாக்கு அரசியளுக்காக நமது உரிமைகள் மறிக்கப்படும் தந்திரத்தை அறியாமல், கட்சிகள் மீது விசுவாசம் கொண்டு ஆதரிப்பது சுயநலத்தின் உச்சம், இனத்துரோகம் என்பதைத்தவிர வேறொன்றுமில்லை. நாடு 75-வது சுதந்திரத்தைக்கொண்டாடும் இந்நன்னாளில் அரசியல் தந்திரம் வென்று சுதந்திரம் காப்போம்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved