🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தாரின் கல்விச்சேவைக்கு 2 கோடி மதிப்பீட்டில் உருவாகும் கல்விச்சோலை!

தமிழக அரசுத்துறைகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற இராஜகம்பளத்தார் சமுதாய உறவுகள் ஒருங்கிணைந்து தொடங்கிய தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை 2016 முதல் செயல்பட்டு வருகிறது. 130-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் சமுதாய மக்களை ஒருங்கிணைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை அறக்கட்டளையின் உறுப்பினராக்கி திருமண தகவல் மையம், இடஒதுக்கீடு, டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சமுதாயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த அறக்கட்டளையானது, சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் க்ட்டுமானப்பணிக்கு பெருமளவு உதவி புரிந்துள்ளதோடு, முப்பெரும் விழாவிலும் முக்கியப்பங்காற்றியுள்ளது.


இந்நிலையில் கல்வியில் சிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் கம்பளத்தார் சமுதாயத்திற்கென்று பிரத்யோக கல்வி நிறுவனம் ஏதுமில்லாத குறையைப்போக்கி, கிராமப்புற மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப்பயிற்சி மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க வேண்டுமென்ற உயரிய நோக்கத்தோடு கடந்த ஆண்டு நாமக்கல் நகரின் பிரதான இடத்தில் அறக்கட்டளைக்கு சொந்தமாக சுமார் 60 லட்சம் மதிப்பில் ஒருகிரவுண்ட் நிலம் வாங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மூன்று தளங்கள் கொண்ட 6000 சதுரடிக்கு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா 23.08.2023 காலை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கட்டட அனுமதிக்காக கோப்புகள் நகராட்சிக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறுவதில் சில மாதங்கள் தாமதமானது.

இந்நிலையில் கடந்த மாதம் கட்டடத்திற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதையடுத்து கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் தொடங்கியது. முதல்கட்டமாக 1000 அடிக்கு போர்வெல் போடப்பட்டு, மின் இணைப்பு பெறப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தமாதம் முதல்வாரத்தில் அஸ்திவாரம் தோண்டும்பணி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 16 தூண்கள் நிறுவப்பட்டு அஸ்திவார காங்கிரீட் போடும் பணிகள் நடைபெற்றது.

நாமக்ல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைக்கு சொந்தமான கட்டடப்பணிகள் வேகமெடுக்கத்தொடங்கியதை அடுத்து ஓராண்டிற்குள் கட்டுமானப்பணிகளை நிறைவு செய்து முழுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கான அனைத்து திட்டங்களையும் வகுத்து, நிதிதிரட்டும் பணியில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஈடுப்பட்டு வருகின்றனர். சமுதாயத்திற்கு சொந்தமாக நாமக்கல் நகரில் பிரமாண்ட கட்டடம் உருவாவதில் அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு, படித்தவர்கள், நடுத்தர குடும்பத்தினர் மற்றும் செல்வந்தரகள் என அனைத்து தரப்பினரும் தாமாக முன்வந்து ஐம்பதாயிரம், ஒரு லட்சம், இரண்டு லட்சம் என நன்கொடை வாரி வழங்கி வருகின்றனர். இதனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டுமானப்பணியை நிறைவு செய்திட முடியும் என்று அறக்கட்டளை நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.  

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved