🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தமிழகத்தில் நான் மதிக்கும் ஒரே தமிழறிஞர் புலவர் பொ.வேல்சாமி - கவிஞர் யுகபாரதி புகழாரம்!

சங்கப்பாடல்கள் குறித்து பிரபல திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான யுகபாரதி எழுதிய மேல்கணக்கு நூல் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரிலுள்ள கவிக்கோ மன்றத்தில் சென்ற மாதம் 27-ஆம் தேதி நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் தலைமை ஏற்றார். மேலும் இவ்விழாவில் பிரபல திரைப்பட இயக்குனர்கள் கரு.பழனியப்பன், வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா, ராஜுமுருகன், எழுத்தாளர் சூரியா சேவியர் உள்ளிட்ட ஆளுமைகளோடு தமிழக அரசின் திருவிக விருது, அமெரிக்க தமிழ் இலக்கிய அமைப்பின் விளக்கு விருது போன்ற விருதுகளை வென்ற தமிழறிஞர் பொ.வேல்சாமியும் கலந்துகொண்டார்.

மேல்கணக்கு நூல் அறிமுகத்திற்குப்பின் பேசிய நூலாசிரியரும் கவிஞருமான யுகபாரதி புலவர் பொ.வேல்சாமி அவர்கள் குறித்து மிகுந்த பெருமிதத்தோடு பேசி அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் பேச்சின் விவரம் பின்வருமாறு,

இந்த புத்தகத்தை எழுதி அச்சிட்டுவிட்டு ஒருவரிடம் கொடுக்கும்போது நான் மிகவும் பதறிப்போய் பதட்டத்தோடு கொடுத்தது ஐயா புலவர் பொ.வேல்சாமி அவர்களிடம் தான். ஐயா பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணித் தேர்வை முதன்முறையாக தமிழிலேயே எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற ஒரே தமிழ் இலக்கிய மாணவர். இந்தியவியல், திராவிடவியல் ஆய்வாளரான இவர், ‘சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' என்று தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். அண்மையில் வெளியான இவரது 'Journey of a Civilization: Indus to Vaigai' என்ற ஆங்கில ஆய்வு நூல், 30 ஆண்டுக்கால ஆய்வுகளின் பயன். ஒடிசா மாநில அரசில் பல முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ள பாலகிருஷ்ணன், இந்தியத் தேர்தல் ஆணையத்தில் துணைத் தேர்தல் ஆணையராக இரண்டு முறை பணியாற்றி 30 சட்டமன்றத் தேர்தல்களையும், இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களையும் நடத்தியவர். ‘அன்புள்ள அம்மா’, ‘சிறகுக்குள் வானம்’, ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’, ‘நாட்டுக்குறள்’, ‘பன்மாயக் கள்வன்’, ‘இரண்டாம் சுற்று’, ‘குன்றென நிமிர்ந்து நில்’, ‘கடவுள் ஆயினும் ஆக’ ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். இந்திய ஆட்சிப் பணியில் 34 ஆண்டுகள் பணியாற்றி 2018-ல் ஓய்வுபெற்ற பாலகிருஷ்ணன், தற்போது ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகராகப் பணியாற்றிவருகிறார்) அவர்களை தமிழ் படித்தவர் என்று சொன்னால், அவரைவிடவும் தமிழ் படித்தவர், தமிழ்நாட்டில் நான் மதிக்க கூடிய ஒரே தமிழறிஞர் என்றால் அது பொ.வேல்சாமி அவர்கள் மட்டும் தான். இதை நான் காத்திரமாகவும், தைரியமாகவும் சொல்கிறேன். இதற்கு காரணம் என்னவென்றால் புலவர் பொ.வேல்சாமி அவர்கள் எல்லா மட்டத்திலும் வாசிக்கக்கூடியவர். பொதுவாக தமிழறிஞர் என்றால் என்ன செய்வார்களென்றால், ஏதாவது பழந்தமிழ் புத்தகத்தைக் கொடுத்து படிக்க சொல்வார்கள். ஆனால் அந்த புத்தகத்தை சாதரணமாக படிக்கவே முடியாது. ஏனெனில் காலத்தால் கடந்திருப்பதால் கரையான் வாடை அடிக்கும். ஆனால் இவரிடம் புத்தகத்தைக்கொடுத்தால் அதைப்படிக்கவேமாட்டார். PDF வடிவில் அனுப்பச்சொல்வார். அய்யா வேட்டி சட்டைதான் போடுறாரு, பேசுவதெல்லாம் சிவஞானபோதம் பேசுவார், ஆனால் PDF இல் தான் படிப்பார். இது தான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது.


PDF வடிவில் என்னாலேயே படிக்கமுடியவில்லை, கண்ணெல்லாம் உறுத்துகிறது, இந்த வயதில் உங்களால் எப்படி படிக்கமுடிகிறது என்று கேட்டால். அதற்கு "கொஞ்சம் படிச்சு பழகுங்க, அதுக்கப்புறம் நிறைய படிக்கலாம்" என்று சொன்னார். இதைத்தாண்டி, இந்த புத்தகத்தை படித்து வழக்கம் போல பாராட்டு எல்லாம் சொல்லிட்டு, சின்னதாக ரெண்டு குறிப்பிருப்பதாக சொன்னார். 

நானும் ஏதாவது பாட்டு எண் மாறியிருக்கும் என்று நினைத்துக்கொண்டு, சொல்லுங்க ஐயா என்றேன்.

முடிநாகனார் என்ற புலவர் இருக்கிறாரென்று அவரைப்பற்றி அய்யா சொல்லத்தொடங்கினார். 

எனது புத்தகத்தில் ஒரு பாட்டில் முடிநாகராயர் என்று பெயர் போட்டிருந்தேன். "நானும் நிறைய படித்திருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்ள வேண்டுமல்லவா?"

நன்றாக சரி பார்த்தீரா? என்று கேட்டார். 

எப்போது அவரிடம் பேசினாலும் மிகவும் எச்சரிக்கையுடன் பயந்து தான் பேசுவேன். ஏனென்றால் ஒருவிடயம் நம்மிடம் கேட்கிறார் என்றால் அதுகுறித்து அவர் முழுமையாக அறிந்து வைத்துக்கொண்டுதான் நாம்மிடம் பேசுவார். அதற்கான பதிலும் அவரிடம் நிச்சயம் இருக்கும். முடிநாகராயர் என்று இருந்ததைக்குறிப்பிட்டு, ராயர் பற்றிய முழுத்தகவலையும் சொன்னதோடு, இரண்டு புத்தங்களையும் அனுப்பி வைத்திருந்தார். அந்த அளவிற்கு தமிழகத்தில் ஒரு நடமாடும் தகவல் பெட்டகமாக இருந்து அறிய தகவல்களை வாரி வாரி வழங்கிவருகிறார் என்று புலவர் பொ.வேல்சாமி அவர்கள் குறித்து பெருமித்தோடு கவிஞர் யுகபாரதி பேசினார்.

கோவில் - நிலம் - சாதி, பொய்யும்,வழுவும், பொற்காலங்களும், இருண்ட காலங்களும் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளதோடு, மதுரா விஜயம் நூலின் தொகுப்பாசிரியரும் கூட. பொம்மையா நாயக்கர், பாப்பம்மாள் தம்பதியினருக்கு 1951-இல் தஞ்சாவூரில் பிறந்த புலவர் பொ.வேல்சாமி அவர்கள் புகழ்பெற்ற நிறப்பிரிகை இதழின் ஆசிரியர் குழுவில் அ.மார்க்ஸ் மற்றும் ரவிக்குமார் போன்றவர்களோடு இணைந்து இயங்கியவர். 

பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாருக்குப்பின் இலக்கிய உலகிற்கு சமுதாயம் வழங்கிய மிகப்பெரிய ஆளுமை புலவர் பொ.வேல்சாமி என்றால் மிகையல்ல. தற்போது நாமக்கல்லில் வசித்து வரும் புலவர் அவர்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ்ந்திருந்தால் இன்னும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருப்பார்.  

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved