🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மது அருந்தாமலேயே போதை ஏற்றும் குடல் நொதித்தல் நோய்!

சில வருடங்களுக்கு முன்னர், அமெரிக்க நாட்டில் பெல்ஜியத்தை பூர்வீகமாகக்கொண்ட 40 வயதான ரே லீவிஸ், சட்டப்பூர்வ வரம்பைத் தாண்டி மூன்று மடங்கு அதிகமாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். 

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அன்றைய தினம் ரே லீவிஸ் மது அருந்தவில்லை என்பதுதான். இதனை மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் ரே லீவிஸ் நிரூபித்தார். எனினும், ரே லீவிஸ் உடலில் ஆல்கஹால் அலவு உயரக்காரணம் என்ன என்ற குழப்பம் ஏற்பட்டது. நீண்ட ஆய்வுக்குப்பின்தான் தெரிய வந்தது ரே லீவிஸ் குடல் நொதித்தல் (Auto-Brewery Syndrome) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் தானாக ஆல்கஹால் உற்பத்தி செய்யப்படுகிறது.

2014 டிசம்பரில் அமெரிக்காவில் மீன் மற்றும் வனவிலங்கு துறையில் உயிரியல் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி கொண்டிருந்த போது தான் இந்த அசம்பாவிதம் நடந்தது. மீன் மற்றும் வன விலங்கு துறைக்கு சொந்தமான 11,000 உயிருள்ள சால்மன் மீன்கள் ஏற்றப்பட்ட டிரக்கை லீவிஸ் ஓட்டி சென்றார். அப்போது நேரிட்ட விபத்தில் டிரக் கவிழ்ந்தது.

அதன் பின்னர், அமெரிக்காவில் ஒரேகானில் உள்ள ஒரு மருத்துவமனையில் ரே லீவிஸ் அனுமதிக்கப்பட்டார். போதை தெளிந்து எழுந்த போது அவருக்கு இரண்டு விஷயங்கள் உறுதியாக நினைவில் இருந்தது. முதலாவதாக, அவர் பணியாற்றிய மீன் மற்றும் வனவிலங்கு துறைக்கு சொந்தமான 11,000 உயிருள்ள சால்மன் மீன்களை ஏற்றிச் சென்ற டிரக் விபத்தில் சிக்கியது. இரண்டாவதாக, அவருக்கு ரத்தத்தில் அதிக அளவு ஆல்கஹால் இருந்ததாக காவல்துறை சோதனை கருவி மூலம் பதிவு செய்த போதிலும், விபத்து நடந்த அன்று இரவு அவர் மது அருந்தவில்லை.

"நான் நிச்சயமாக ஒரு துளி மதுவை கூடத் தொடவில்லை, எனக்கு நன்றாகத் தெரியும், அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு, பனி இரவில், ஒரு பெரிய டிரக்குடன் சாலையில் பயணிக்க போகிறேன் என்பதும், அப்படியிருக்க நான் எப்படி மது குடிப்பேன்?" என்று 54 வயதான ரே லீவிஸ் அன்று நடந்ததை நினைவு கூர்ந்தார். விபத்து நடந்து எட்டு மாதங்களுக்குப் பிறகுதான் உண்மை வெளியானது, ரே லீவிஸுக்கு குடல் நொதித்தல் (Auto-Brewery Syndrome) எனப்படும் அரிதான நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவரின் உடல் தானாகவே ஆல்கஹால் உற்பத்தி செய்து அவருக்கு போதை ஏற்படுத்தியிருக்கிறது.

குடல் நொதித்தல் நோய் என்றால் என்ன?

ஆட்டோ-ப்ரூவரி சிண்ட்ரோம் (ஏபிஎஸ்) அல்லது குடல் நொதித்தல் நோய் (Gut Fermentation Syndrome -GFS) என்பது ஒரு மர்மமான நோய் ஆகும். இது இரத்தத்தில் ஆல்கஹால் அளவை உயர்த்துகிறது. நோயாளி குறைவாக மது அருந்தி இருந்தாலும் அல்லது மது அருந்தாமல் இருந்தாலும் கூட, அதீத போதை அறிகுறிகளை அவரின் உடலில் ஏற்படுத்துகிறது. குடல், சிறுநீர் அமைப்பு அல்லது வாய் பகுதிகளில் உள்ள பாக்டீரியாக்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரைகளை ஆல்கஹாலாக மாற்றும்போது இந்த நிலை ஏற்படும். இது `உட்புற ஆல்கஹால் உற்பத்தி’ (Endogenous Alcohol Production) என்று அழைக்கப்படுகிறது.

இந்த நோய் நிலையில், நோயாளிகளுக்கு மந்தமான பேச்சு, நிலையற்ற நடை துர்நாற்றம், போதை ஆகியவை ஏற்படும்.

1940களில் ஒரு சிறுவன் இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டதாக தரவுகள் காட்டுகின்றன. உகாண்டா மருத்துவமனையில் மருத்துவர்கள் 5 வயது சிறுவனின் பிரேத பரிசோதனை முடிவுகளை பார்த்து அதிர்ந்து போயினர். வயிறு வெடித்து இறந்து போன அந்த சிறுவனின் வயிற்று பகுதியை அறுவை சிகிச்சை செய்து பார்த்த போது, அதிலிருந்து ஆல்கஹால் வாசனை வீசியது. இந்த பிரேத பரிசோதனையின் முடிவு பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வெளியானது.

ஏபிஎஸ் நோய் யாருக்கெல்லாம் வரும்?

குடல் நொதித்தல் நோய்நிலை மிகவும் அரிதானது. அமெரிக்க இரைப்பை குடலியல் ஆய்விதழில் வெளியிடப்பட்ட 2021 ஆய்வின்படி, இதுவரை அமெரிக்காவில் 100 க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் ஏபிஎஸ் பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. சில நிபுணர்கள் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று சந்தேகிக்கின்றனர். ஒரு சிலருக்கு மட்டும் இந்த குடல் நொதித்தல் நிலை ஏன் ஏற்படுகிறது என்பதை மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை.

செரிமான செயல்பாட்டின் ஒரு பகுதியாக மனித உடல், குடலில் சிறிய அளவிலான ஆல்கஹால் உற்பத்தி செய்வது இயற்கையான நிலை. ஆனால் இது முதல்-பாஸ் வளர்சிதை மாற்றம் எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் இரத்த ஓட்டத்தில் நுழைவதற்கு முன்பே அகற்றப்படுகிறது.

"மனித உடலில் இயற்கையாகவே சிறிது அளவு மது உற்பத்தி ஆகும், ஆனால் குடல் நொதித்தல் நோய் உடைய ஒருவருக்கு அதிக அளவில் மது உற்பத்தி ஆகி இரத்த ஓட்டத்தில் கலக்கும்" என்று போர்ச்சுகலைச் சேர்ந்த உயிரியல் மருத்துவ ஆலோசகரும் தடயவியல் நிபுணருமான டாக்டர் ரிக்கார்டோ ஜார்ஜ் டினிஸ்-ஒலிவேரா விளக்குகிறார். இவர் ஏபிஎஸ் நிலை குறித்து பல கட்டுரைகளை வெளியிட்டவர்.

"துரதிர்ஷ்டவசமாக, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறிய, ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு போன்ற கடுமையான அத்தியாயத்தை கடக்க வேண்டியிருக்கும்." என்கிறார்.

ரிக்கார்டோ, ஏபிஎஸ்ஸை "வளர்சிதை மாற்ற புயல்" என்று அழைக்கிறார். அதாவது உடலில் ஒரே நேரத்தில் நடக்கும் பல விஷயங்களால் இந்த நிலை தூண்டப்படுகிறது.

முதலாவதாக, நீரிழிவு, உடல் பருமன் அல்லது கிரோன் நோய் போன்ற பாதிப்புகள் இருக்கும் நபருக்கு குடல் நொதித்தல் நிலை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். இரண்டாவதாக, இந்த நோயாளிகள் அடிக்கடி உட்கொள்ளும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் நோய் எதிர்ப்புத் தடுப்பு மருந்துகள் போன்ற மருந்துகளின் பின்விளைவாக இந்த நிலை ஏற்படலாம். அதாவது, குடலில் வாழும் பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளை பாதிக்கக் கூடிய மருந்துகளை அதிக அளவில் உட்கொண்டால் குடல் நொதித்தல் நிலை ஏற்படலாம்.

(சாக்கரோமைசஸ் செரிவிசியா என்ற பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் நம் உடலில் மிகக் குறைந்த அளவில் ஆல்கஹால் உற்பத்தி செய்யும், ஆனால் மிக அரிதாக சிலரின் உடலில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது).

ஏபிஎஸ் உடன் வாழ்ந்த செவிலியர்.

அமெரிக்க செவிலியர் ஜோ கோர்டெல், ஒரு குடும்ப விருந்தை முடித்து விட்டு திரும்பும் போது, அவரது வார்த்தைகள் தடுமாறியது. பேச முடியாமல் திக்கினார். தான் அதிகமாக வான்கோழி இறைச்சி சாப்பிட்டதால் இப்படி ஏற்படுகிறது என்று நினைத்தார்.

அதன் பின்னர், அவர் பணிபுரிந்த டெக்சாஸ் மருத்துவமனையில் சக ஊழியர் ஒருவர் ஜோ கோர்டெல் பணியின் போது குடிபோதையில் இருப்பதாக குற்றம் சாட்டினார். இதனால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது 75 வயதான கோர்டெல் அன்று நடந்ததை நினைவு கூர்ந்தார், "நான் சுவாசிக்கும் போது ஆல்கஹால் வாசனை இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். நான் `குடிகாரர்’ என்று என்னை சுற்றி இருந்தவர்கள் நினைத்தார்கள். நான் தலைகுனிந்து நின்றேன். வெட்கமாக இருந்தது. என் வேலையை நான் மிகவும் நேசித்தேன். பணியின் போது ஒரு நாளும் தவறு செய்ததில்லை" என்றார்.

ஆரம்பத்தில், அவரது மனைவி பார்பரா கூட அவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக சந்தேகித்தார். சக செவிலியரான அவர், தனது கணவரை நம்பலாமா வேண்டாமா என்று தவித்தார். வீட்டில் மது பாட்டில்களை மறைத்து வைத்திருப்பார் என்று சந்தேகித்து வீடு முழுக்க தேடினார். ஏற்கனவே இருக்கும் மதுபாட்டில்கள் அளவையும் கண்காணித்தார். கோர்டெலை தொடர்ந்து நோட்டமிட தொடங்கினார்.

"நான் முதலில் என் கணவரை சந்தேகித்தேன். எங்களிடம் இருந்த மது பாட்டிலில் மதுவின் அளவை நான் குறித்து வைத்தேன். ஆனால் அவை குறையவே இல்லை". ஜோ கோர்டெல் தன் மீது எழும் குற்றச்சாட்டுகளால் பதற்றமானார். அவரது வாழ்வில் இந்த மது போதை அத்தியாயம் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியதாக சொல்கிறார்.

"அனைத்தும் மிகவும் குழப்பமாக இருந்தது. இந்த சம்பவங்கள் என்னை உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதித்தது" என்று அவர் கூறுகிறார்.

ஜோ கோர்டெலுக்கு ஏபிஎஸ் எனப்படும் குடல் நொதித்தல் நோய் இருப்பது 2010 இல் கண்டறியப்பட்டது. அறிகுறிகள் தோன்றி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஏபிஎஸ் இருப்பது தெரிந்தது. அதன் பின்னர் அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் தினமும் இரத்த ஆல்கஹால் பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது. பல்வேறு தேடலுக்கு பிறகு, 850 உறுப்பினர்களைக் கொண்ட ஆட்டோ-ப்ரூவரி சிண்ட்ரோம் ஆதரவுக் குழுவை பார்பரா கண்டுபிடித்தார்.

"மது போதை தானாக ஏற்படுகிறது என்று சொல்லும் நோயாளிகள் பெரும்பாலான மருத்துவர்களால் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். நோயாளிகளை நம்பாமல் பலர் மோசமாக தூற்றுகின்றனர். மதுபோதையில் உளறுவதாக அவமானப்படுத்துகின்றனர். பொய்யர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இல்லையெனில் மிகவும் மோசமாக நடத்தப்படுகிறார்கள்" என்கிறார் பார்பரா.

சிகிச்சையைத் தொடங்கியவுடன், தன்னுடன் சிகிச்சை பெற்ற பலர் நோயின் அறிகுறிகளை குறைக்க உதவுமாறு கோரிக்கை வைத்ததாக ஜோ கோர்டெல் கூறுகிறார்.

"ஆனால், காலப்போக்கில் நோயை குணமாக்கும் உணர்வுகளைத் தவிர்ப்பதற்காக குடிப் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள்." என்கிறார் ஜோ.

"சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் பசியின் அளவு அதிகமாக இருந்தது. இப்போது நான் 10 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இன்றி நலமாக இருக்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.

ஏபிஎஸ் எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

மருத்துவர்கள் முதலில் மதுபோதை அறிகுறிகளின் பிற சாத்தியமான காரணங்களை கண்டறிகின்றனர். பின்னர் அவர்கள் ஆய்வக சோதனைகளை நடத்தி நோயாளியின் செரிமான அமைப்பில் பாக்டீரியாக்களின் இருப்பை பகுப்பாய்வு செய்கின்றனர். ஆல்கஹால் உற்பத்தி செய்யும் நுண்ணுயிரிகளின் அசாதாரண இருப்பை பகுப்பாய்வு செய்வார்.

அடிக்கடி குளுக்கோஸ் சவால் சோதனையை (Glucose Challenge Test) நடத்துவார்கள். அதன்படி நோயாளி கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும் அல்லது வெறும் வயிற்றில் குளுக்கோஸை உட்கொள்ள வேண்டும். சில மணி நேரத்திற்கு பிறகு, ஏபிஎஸ் பாதிப்பு இல்லாதவர்களின் இரத்தத்தில் ஆல்கஹால் அளவைக் கண்டறிய முடியாது. அதே நேரத்தில் ஏபிஎஸ் உள்ளவர்கள் உயர்ந்த அளவைக் கொண்டிருப்பார்கள்.

டாக்டர் டினிஸ்-ஒலிவேரா கூறுகையில், "பொதுவாக மருந்துகளின் கலவை, குறைந்த கார்போஹைட்ரேட் உணவு, குடல் நுண்ணுயிர்களை ஒழுங்குபடுத்தும் உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் ஏபிஎஸ் நிலையை கட்டுப்படுத்தலாம்." என்றார்.

இதை பின்பற்றிய ஜோவுக்கு கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக ஏபிஎஸ் பாதிப்பு மீண்டும் ஏற்படவில்லை.

அதே சமயம் குறைந்த கார்போஹைட்ரேட் உணவை உட்கொண்டு, மது பழக்கத்தை முற்றிலுமாக கைவிட்ட ரே லீவிஸ் இன்னும் சில பக்க விளைவுகளுடன் போராடுகிறார். இருப்பினும் அவருக்கு 2020 முதல் ஏபிஎஸ் பாதிப்பு அதிக அளவில் இல்லை.

ரே லீவிஸ் தனது நிலையை சமாளிப்பதற்கு மற்றொரு வழியைக் கண்டுபிடித்தார் - `மியா’ என்ற நாய் அவருக்கு உதவியது. லாப்ரடூடுல் ரகமான மியா, ரேயின் உடலில் மதுவின் அளவு அதிகரிக்க தொடங்கும் ஆரம்ப நிலைகள் உட்பட ரசாயன மாற்றங்களை உணர பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ரேயின் உடலில் மாற்றத்தை கண்டறிந்தால், ரேயின் முன்னால் நின்று மியா உன்னிப்பாகப் பார்க்கும்.

"மியா என்னை சோதிப்பதற்கு முன், நான் வீட்டை விட்டு வெளியேற மாட்டேன், ஏனென்றால் எனக்கு அல்லது பிறருக்கு என் மது போதையால் ஏதாவது நடந்து விடுமோ என்ற பயம் எனக்கு இருக்கும்." என்று ரே கூறுகிறார்.

"எனக்கு விபத்து ஏற்பட்டபோது அதிர்ஷ்டவசமாக நான் யார் மீதும் மோதவில்லை, ஆனால் என்னை நானே காயப்படுத்திக் கொண்டேன்."

ஏபிஎஸ் பாதிப்பால் விபத்து ஏற்படுத்திய ரே மீது தவறில்லை என்பதை நீதிபதி ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ரே வேலையை இழந்தார். வாகனம் ஓட்டும் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

"நீதிமன்றங்கள் என்ன முடிவு செய்தாலும், எனக்கு எஞ்சியிருப்பது சரியானவற்றுக்காக போராடுவது மட்டும் தான்." என்கிறார் ரே.

அவரும் அவரது மனைவி சியராவும் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறார்கள். எப்படி இருந்தாலும் ஏபிஎஸ் இருப்பதால் ரே -வுக்கு மீண்டும் வேலை கிடைக்கவில்லை. ஆனால் அவர் நம்பிக்கையை, நகைச்சுவை உணர்வை இழக்கவில்லை.

"ஏபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இலவசமாக மதுபோதையை அனுபவிப்பார்கள் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள், ஆனால் நான் அதன் `ஹேங்க் ஓவர்’ பகுதியை மட்டுமே அனுபவித்தேன்” என்றார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved