உலக கவனத்தை ஈர்க்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி!
இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், மே15 ஆம் தேதி நடைபெற்ற வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, போலி சான்றிதழ்களை வைத்துக் கொண்டு வேலைவாய்ப்பின்றி திரியும் இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என ஒப்பிட்டுப் பேசினார்.
இதனைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த், பட்டதாரிகளையும், சமூக ஊடக விமர்சகர்களையும் 'கரப்பான்பூச்சிகள்' மற்றும் 'ஒட்டுண்ணிகள்' என விமர்சித்ததாக செய்திகள் வெளியானது. தலைமை நீதிபதியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவரான அபிஜித் தீப்கே என்பவர் "Cockroach Janta Party" சோம்பேறிகள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கான கட்சி..என்ற நையாண்டி இயக்கத்தைத் தொடங்கினார்.
இருப்பினும், நாட்டின் இளைஞர்கள் பற்றிய தமது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியுள்ளார். எனினும் நீதிபதி சூர்யகாந்தின் கருத்துக்கு எதிராக, சமூக ஊடகங்களில் நையாண்டிப் பிரசாரத்தை பலரும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இந்த விவாதத்தின் மையப்புள்ளியாக 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) உள்ளது.
கடந்த மே 16 அன்று இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்த இணைய வழி இயக்கம், வெறும் 5 நாட்களில் 20 மில்லியனுக்கும் (2 கோடி) அதிகமான ஃபாலோயர்களைக் கடந்து சாதனை படைத்தது. இதில் இணைந்திருப்பவர்கள் அனைவரும் தீவிர அரசியல்வாதிகள் அல்ல. வேலையில்லாத் திண்டாட்டத்தால் கடும் விரக்தியில் இருக்கும் இன்றைய தலைமுறை (Gen Z) இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இந்த இயக்கம் 2 கோடிக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுடன் ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பாகச் செயல்படுகிறது. ஆனால், பாகிஸ்தானில் இது எந்தவொரு தனிநபர் கட்டுப்பாடும் இன்றி, பல்வேறு தனிநபர்களால் தன்னிச்சையாகவும் பரவலாக்கப்பட்ட முறையிலும் கொண்டு செல்லப்படுகிறது. அதிகார வர்க்கத்திற்கு எதிரான இளைஞர்களின் இந்த ஆன்லைன் நையாண்டிப் போராட்டம், தற்போது இருநாட்டு இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' தொடக்கம் குறித்து அதன் நிறுவனர் அபிஜித் தீப்கே பிரபல தனியார் செய்தி நிறுவனத்திற்கு விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
"இத்தகைய சமூக ஊடக பிரசாரம் ஒன்றை முன்னெடுப்பதற்கான யோசனை உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?" என்ற கேள்விக்கு பதிலளித்த அபிஜித் தீப்கே, "எக்ஸ் வலைதளத்தில் இந்திய தலைமை நீதிபதி சொன்னதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் அவர், நாட்டின் இளைஞர்களை, குறிப்பாக அமைப்பை விமர்சிப்பவர்களையும் தங்கள் கருத்துகளைத் துணிச்சலாக வெளிப்படுத்துபவர்களையும் கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்டார்" என்று கூறினார்.
"ஒவ்வொருவருக்கும் பேச்சுரிமையையும், கருத்து சுதந்திரத்தையும் வழங்கும் அரசியலமைப்பை பாதுகாப்பதையே கடமையாகக் கொண்ட தலைமை நீதிபதியே இப்படிப் பேசியது மிகவும் அபத்தமான ஒன்றாகத் தோன்றியது. கரப்பான் பூச்சிகளுடனும் ஒட்டுண்ணிகளுடனும் அவர் இளைஞர்களை எப்படி ஒப்பிட முடியும்?" என்று காட்டமாக வினவியுள்ளார்.
இதற்கிடையே "Cockroach Janta Party" சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆவதைக்கண்டு அஞ்சிய அரசு உடனடிய அதன் எக்ஸ் வலைதளப்பக்கத்தை முடக்கியது.எனினும் கணக்கு முடக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, "Cockroach is Back" என்ற பெயரில் புதிய மாற்று கணக்கை எக்ஸ் (X) தளத்தில் தொடங்கியது.
ஆரம்பத்தில் இது ஒரு வேடிக்கையான மீம் பக்கமாகத் தொடங்கினாலும், தற்போது இவர்கள் முன்வைக்கும் தேர்தல் அறிக்கை மிகவும் தீவிரமானது. அதில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் கொள்கைகளாகக் கூறுவது யாதெனில்,
"உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ராஜ்யசபா எம்பி போன்ற பதவிகளை வழங்கக் கூடாது".
"நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வேண்டும்."
" கட்சி தாவும் எம்.எல்.ஏ-க்களுக்கு 20 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்."
"நீட் தேர்வு சர்ச்சை மற்றும் கல்வித்துறை அமைச்சரின் பொறுப்புக்கூறல்."
இப்பொழுது இந்தக் கோரிக்கைகள் மட்டுமே முன்னிறுத்தப்படுகின்றன. மேலும் இவர்கள் நிஜ உலகிலும் இறங்கி சில வேலைகளைச் செய்தனர். டெல்லியில் யமுனை நதியைச் சுத்தம் செய்யும் பணிகளில் கரப்பான்பூச்சி உடைகளை அணிந்து கொண்டு தன்னார்வலர்களாகப் பணியாற்றினர்.
இவர்கள் தங்களை "சோம்பேறிகள் மற்றும் வேலையில்லாதவர்களின் கட்சி" என்று தாழ்த்தியே பேசிக்கொள்கிறார்கள்.
கரப்பான்பூச்சிகள் எவ்வளவு அடித்தாலும் அழியாதவை" என்ற உயிரியல் உண்மையை தங்களின் அடையாளமாக மாற்றிய" CJP போன்ற அமைப்புகள் "டிஜிட்டல் கொரில்லா"போன்றது." ஒரு கணக்கை முடக்கினால் அடுத்த நிமிடமே 'Cockroach is Back' எனப் புதிய கணக்குகள் தொடங்குவது, விபிஎன் (VPN) மூலம் மக்கள் பக்கங்களை அணுகுவது எனத் தொழில்நுட்ப ரீதியாக இவர்களை முழுமையாக முடக்குவது அரசுக்குத் தொழில்நுட்ப ரீதியான சவாலாகும்.
இந்தியாவில் ஒரு எக்ஸ் (X) கணக்கோ அல்லது இன்ஸ்டாகிராம் பக்கமோ முடக்கப்பட்டால், அது இந்திய எல்லைக்குள் மட்டும்தான் செல்லாது. இவர்கள் மிக மிக தந்திரம் & மூளைக்காரர்கள். மிக எளிதாக "VPN (Virtual Private Network)" தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தங்களின் இருப்பிடத்தை அமெரிக்கா என்றோ அல்லது சிங்கப்பூர் என்றோ மாற்றி, அதே முடக்கப்பட்ட பக்கங்களை இந்தியாவில் இருந்துகொண்டே தடையின்றிப் பார்ப்பார்கள்.
நிறுவனர் அபிஜீத் திப்கே தற்போது வெளிநாட்டில் இருப்பதால், இந்தியச் சட்டங்களால் அவரது தனிப்பட்ட செயல்பாடுகளை அங்கே முடக்க முடியாது. அவர் டெலிகிராம் (Telegram), ரெடிட் (Reddit) அல்லது டிஸ்கார்ட் (Discord) போன்ற அரசுகளால் எளிதில் கட்டுப்படுத்த முடியாத பரவலாக்கப்பட்ட தளங்களுக்கு இந்த இளைஞர் கூட்டத்தை மாற்றிவிடுவார்.
கிரேக்க புராணத்தில் 'ஹைட்ரா' என்றொரு பாம்பு உண்டு; அதன் ஒரு தலையை வெட்டினால் அங்கே இரண்டு தலைகள் முளைக்கும். இணைய உலகமும் அப்படித்தான். அதிகாரப்பூர்வமற்ற ரசிகர் பக்கங்கள் முதன்மைக் கணக்கு முடக்கப்பட்டால், 'CJP Tamil', 'CJP Mumbai', 'CJP Delhi' என நூற்றுக்கணக்கான கிளைக் கணக்குகளைப் பல்வேறு மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் தன்னிச்சையாகத் தொடங்க வாய்ப்புள்ளது.
கடுமையான அரசியல் அறிக்கைகளுக்குப் பதிலாக, எளிய நக்கல், கூர்மையான மீம்கள் மற்றும் நகைச்சுவையான குறுகிய வீடியோக்கள் (Reels) மூலம் அதிகார வர்க்கத்தின் தவறுகளைத் தட்டிக் கேட்கின்றனர்.
எங்களை ஒடுக்க நினைத்தாலும் "கரப்பான்பூச்சிகள் போல எங்கும் தப்பிப்பிழைப்போம்" என்ற தொனியில், கரப்பான்பூச்சியைத் தங்களின் அரசியல் சின்னமாக்கி ட்ரெண்ட் செய்கின்றனர்.

