பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை - மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள்!
மாநிலப் பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தே.திவாகர் 500 க்கு 498 மதிப்பெண்கள் பெற்று சாதனை பெற்றுள்ளார். அதேபோல் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கே.கோபிகா 492 மதிப்பெண்களும், திருச்செங்கோட்டைச் சேர்ந்த கே.பவிஸ்ரீ 491 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதுபற்றி விவரம் வருமாறு,
நாமக்கல் மாவட்டம் நருவலூர் தொட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.தேவராஜன். இவரது மகன் தே.திவாகர் வேலகவுண்டன்பட்டியிலுள்ள கொங்குநாடு மெட்ரிக்குலேசன் பள்ளியில் பயின்று வந்தார். இவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து சாதனைபடைத்துள்ளார். இவர் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடியைச் சேர்ந்த திரு.குமரவேல் அவர்களின் மகள் கு. கோபிகா ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களுடன் மொத்தம் 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதலிடம் பெற்றுள்ளார். திருச்செங்கோடு ஸ்ரீ லக்ஷ்மி டெக்ஸ் உரிமையாளர் கதிர்வேல் அவர்களின் மகள் வித்யா விகாஸ் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 491 மதிப்பெண்கள் பெற்று அப்பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல் தமிழகம் முழுவதும் ஏராளமான இராஜகம்பள சமுதாய மாணவச் செல்வங்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற்றுள்ளனர்.
இதற்கிடையே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கும், அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தவர்களுக்கும் ,வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க தலைவர் செ.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

