தாய் / தந்தை இல்லாமல் போனாலும் குழந்தைகளின் கல்வி பாதிக்கக்கூடாது - தமிழக அரசு
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவ, மாணவியர்களின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் ஏற்பட்டாலோ பாதிக்கப்படும் மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் அரசு சார்பில் ரூ.50000/- நிரந்தர வைப்புநிதியாக வழங்கும் திட்டம் 2005 இல் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத்தொகை 2014- இல் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது ரூ.75000/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.வைப்புநிதியின் மூலம் பெறப்படும் வட்டித்தொகை மற்றும் முதிர்வுத்தொகை பாதிக்கப்பட்ட மாணவ / மாணவியரின் கல்வி செலவுக்காகவும், பராமரிப்புக்காகவும் பயன்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்தத்திட்டம் குறித்த விழிப்புணர்வு படித்த அனுபவமிக்க பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றுபவர்களுக்கே தெரியாமல் இருந்து வந்ததால் தேவையான ஆவணங்களை திரட்டி விண்ணப்பித்து முழுமையான பலனைப்பெறுவதில் பெரும் நடைமுறைச்சிக்கல்கள் இருந்துவந்தது. ஒரு வழியாக ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் குழந்தைகள் நல இயக்ககத்தில் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். இச்சிரமங்களைப் புரிந்துகொண்டுள்ள தமிழக அரசு தொடர்ந்து பல அரசாணைகளை வெளியிட்டு பாதிக்கப்பட்ட மாணவ / மாணவியருக்கு உரிய நேரத்தில் நிதியுதவி சென்று சேர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது இத்திட்டத்தை எளிமைப்படுத்தி பள்ளி தலைமையாசிரியரே EMIS இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்ற அரசாணையை நேன்று (07.05.2024) தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மாணவ / மாணவியர் தங்கள் படிக்கும் பள்ளி மூலமாகவே விண்ணப்பிஹ்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் கால விரயம், பொருளாதார விரயம் தவிர்க்கப்படுவதோடு, ஏற்கனவே பெற்றோரை இழந்து அல்லல் படும் மாணவ / மாணவியர் அரசு அலுவலகங்களில் அலைக்கழிக்கப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோல் அரசால் மாணவர்களுக்கு என்னென்ன திட்டங்கள் வழங்கப்படுகிறது என்ற பட்டியலை ஒவ்வொரு பள்ளியிலும் வைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.