🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டை தாக்கியுள்ள சமூகநீதி - இடஒதுக்கீடு புயல்!

இடஒதுக்கீடு என்றால் நம்மில் பலர், ஏன் படித்தவர்கள் கூட தங்கள் சமூகத்திற்கு எவ்வளவு சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்பதைக்கூட அறிந்துகொள்ளாமல் இடஒதுக்கீடு என்றாலே தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதுபோல், எல்லா இடங்களையும் பட்டியல் சாதியினரே அபகரித்துக்கொள்வதுபோல் பொதுவெளியில் பேசுவதை பார்க்கிறோம். ஆனால் இடஒதுக்கீடு என்பது உலகில் பலநாடுகளில் பல்வேறு துறைகளில், பல்வேறு வடிவங்களில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது என்பதே உண்மை.

நம் நாட்டில் அரசு சம்மந்தப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கருப்பின மக்கள் அதிகமாக வாழும் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி காரணமாக கருப்பின வீரர்களுக்கு கிரிக்கெட் அணியில் இடம் பெற பல தடைகள் இருந்தது. இந்த நிலையில் நெல்சன் மண்டேலா போன்ற பல தலைவர்களின் எழுச்சியால் தென்னாப்பிரிக்காவில் பல சமூக மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டது.

இதில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் வெள்ளையர் அல்லாத ஆறு பேர் அணியில் இடம்பெற வேண்டும் என்ற இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதில் இரண்டு பேர் கருப்பின வீரர்களாக இருக்க வேண்டும் என்ற இட ஒதுக்கீடு கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆறு பேரில் இரு இடங்கள் கருப்பு நிறத்தவர்களுக்கு என்று பிரத்யேகமான இடங்களாகும். இதன் மூலம் நிறவெறிகாரணமாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து பலர் முன்னேற முடியும். மேலும் அடித்தட்டு மக்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போவது இட ஒதுக்கீடு கொள்கை மூலம் தடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவை, தவிர வேறு எந்த கருப்பின வீரரும் அணியில் இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இரண்டு பேர் கருப்பின வீரர்கள் இருக்க வேண்டும் என்ற விதியை மீறி ரபாடாவை மட்டும் சேர்த்து மற்ற ஐந்து பேர் வெள்ளையர்கள் இல்லாத வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். பயண மாற்றாக விளையாடும் இருவரில் லுங்கி இங்கிடி ( கருப்பர்) இருக்கிறார். 

இந்த நிலையில் அந்த நாட்டில் இதற்கு எதிராக  சமூக நீதிக்கான குரல்கள் ஓங்கியுள்ளன. பொதுவாக மேற்கூறிய செய்தியைப் படிக்கும் போது என்ன எண்ணம் தோன்றுகிறது?

என்னங்க இது விளையாட்டுல எதுக்குங்க இது மாதிரி கோட்டா / ரிசர்வேசன் சிஸ்டம்... நல்லா திறமையா விளையாடுறவங்கள வச்சு டீம் உருவாக்கி ஜெயிக்கிறது தானங்க முக்கியம்... 

இப்படித்தானே தோன்றுகிறது நண்பர்களே... 

தங்களுக்கு தோன்றும் எண்ணம் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்கிருந்த எண்ணமும்... அப்போது நான் மூன்று  பதங்கள் குறித்து அறிந்திராத வெகுளியாக இருந்தேன்.

முதல் பதம் - சமூக நீதி (SOCIAL EQUITY).

இரண்டாவது பதம் - உள்ளடக்கிய தன்மை ( INCLUSIVENESS). 

மூன்றாவது பதம் - முறையான பிரதிநிதித்துவம் (EQUAL REPRESENTATION). 

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியில் ஏன் கோட்டா சிஸ்டம் இருக்கிறது? என்பதை அறிய அந்த நாட்டில் நிலவிய கருப்பர்களுக்கும், கலப்பினத்தவருக்கும் எதிரான அடக்குமுறை ஒடுக்குமுறை நிறைந்த அபார்தைடு ( APARTHEID) முறை குறித்து அறிய வேண்டும். 

கல்வி, பொருளாதாரம், கலை / இலக்கியம் / விளையாட்டு ஆகிய அனைத்து துறைகளிலும் கருப்பு நிறத்தவர்கள் வெள்ளையர்களால் அடக்குமுறைக்கு உள்ளாகி நெடுங்காலம் அவதிக்குள்ளாகினர். இதனால் அவர்களுக்கு முறையான வாய்ப்பு வழங்கப்படவில்லை.. பயிற்சி கிடைக்கவில்லை.. பொருளாதார பின்புலம் இல்லை. கல்வி இல்லை. இதையும் மீறியும் அதீத திறமை கொண்டு வெளியே வந்தாலும் அணியில் இடம்பெற்றாலும் அங்கும் தீண்டாமை / இன வெறுப்பு / வாய்ப்பு வழங்காமை / இருட்டடிப்பு ஆகியவற்றை சந்தித்தனர்.

இதற்கு மகாயா நிட்டினியின் பேட்டியே சாட்சியங்கள். மேற்கூறிய நிறவெறிக் கொள்கைகளை தென் ஆப்ரிக்க வெள்ளையரால் நிர்வகிக்கப்பட்ட அரசாங்கம் தனது அங்கீகரிக்கப்பட்ட சட்டமாக நிறைவேற்றி அபார்த்தைடு என்று கடைபிடித்து வந்தது. இதற்கு ஐ.நா கண்டனம் தெரிவித்தது. ஐநாவில் இருந்து தென் ஆப்பிரிக்கா 1974 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டது. 

மீண்டும் தென் ஆப்ரிக்காவில் திரு நெல்சன் மண்டேலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக ஜனநாயகம் மலர்ந்ததும் 1994 ஆம் ஆண்டு மீண்டும் ஐநாவில் இணைக்கப்பட்டது. 

இத்தகைய வரலாற்றை அறிந்தால், தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் ஏன் ரிசர்வேசன் இருக்கிறது என்பதும் புலப்படும், அதன் நியாயங்களும் விளங்கும். அந்த அணியின் கோச் ராபர்ட் அவர்களிடம் இந்த நிற பேதம் குறித்துப் பேட்டி காண்கையில் "வெற்றி தான் முக்கியம்... பல்வேறு இனங்களில் திறமையான வீரர்களுக்கு பற்றாக்குறை இருக்கிறது" என்கிறார்.

என்னைப் பொருத்தவரை, மனிதன் ஒரு சமூக விலங்கு சமூகத்துடன் இணைந்து பழகி அதன் மூலம் இன்பத்தைத் துய்க்கப் பழகி அதன் மூலம் நாகரீகம் அடைந்தவன். இதில் சாதி,மத,இன மொழி நிற ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதையும், தீண்டாமை எண்ணங்கள் இருப்பதையும் நாம் ஏற்கிறோம். 

மேற்கூறிய விசயங்களால் வாய்ப்புகள் கிடைப்பதிலும், வாய்ப்புகளை ஒடுக்குவதிலும், பன்னெடுங்காலம் கழிந்திருப்பதையும் அறிய முடிகிறது. சமூகத்தில் நிலவும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை இயன்ற அளவு செப்பனிட்டு அவரவர்க்குரிய வாய்ப்புகளையும் பிரிதிநிதித்துவத்தையும் வழங்கும் முயற்சியே "ரிசர்வேசன்".

இங்கு நம் ஒவ்வொருவரின் மனங்களிலும் மிருகங்களின் எச்சங்கள் ஒழிந்து கொண்டு தான் இருக்கின்றன. இதை வெளியில் மறைத்தாலும் உள்ளே இருப்பது அவ்வப்போது வெளி வரத்தான் செய்யும். இது இயற்கை.

உலகின் பெரும் புரட்சிகளும், போர்களும் அடுத்தவனுடைய வாய்ப்பையும், பிரிதிநிதித்துவத்தையும் நீண்ட காலம் தொடர்ந்து பறித்து வந்ததாலேயே நடந்திருக்கிறது. எனவே என்னைப் பொருத்தவரை சமூகமாக அதில் பங்கு வகிக்கும் அனைத்து மக்களின் பிரிதிநிதிகள், அனைத்து துறைகளிலும் இருப்பதே வெற்றி. மாறாக வெறுமனே வெற்றி பெறுவதில் எனக்கு தற்போது அதிக நாட்டம்  இருப்பதில்லை. 

தென் ஆப்ரிக்காவில் பெரும்பான்மை கருப்பு நிறத்தவரும் கலப்பு நிறத்தவரும் என்றால் அவர்களின் பிரதிநிதிகள் அந்த அணியில் இருந்தால் தான் அது என்னைப் பொருத்தவரை சரியான அணி. 

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த ரிசர்வேசன் முறை தென் ஆப்ரிக்காவில் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த பல்லாண்டுகளாக தென் ஆப்ரிக்காவால் ஒரு உலகக்கோப்பை கூட பெற இயலவில்லை. அதற்குக் காரணம், கருப்பு நிற வீரர்கள் அல்லர், அவர்களை வெளிக்கொணராத அல்லது அவர்களிடம் தீண்டாமை செய்து சகிப்புத்தன்மையின்றி பேதம் பார்க்கும் வெள்ளையர்களின் குணமே ஆகும். 

இதை உணர்ந்தால் நமக்கு நம் நாட்டில் கடைபிடிக்கப்படும் ரிசர்வேசன் முறை குறித்தும் அறிவு தெளிவு ஞானம் கிடைக்கும் . சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் அவரவர்க்குரிய வாய்ப்பும் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட்டு அனைவரின் உழைப்பும் சேர்ந்து கிடைப்பதே மெய்யான வெற்றி. மெய்யான வெற்றியே தூய்மையான மகிழ்ச்சி.

நன்றி : Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா. 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved