பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற கோபிகா வுக்கு பாராட்டுவிழா!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், அரசூர் கிராமத்தைச் சேர்ந்த திருவாளர்கள் இராஜேந்திரன் - ஸ்ரீதேவி ஆகியோருடைய இளைய மகள் கோபிகா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பகிர்ந்துகொண்டார். இதனையடுத்து அவர் படித்த பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோபிகாவுக்கு வாழ்த்துகள் குவிந்தது.
இதற்கிடையே தங்கள் கிராமத்தைச் சேர்ந்த கோபிகா மாநில அளவில் முதலிடம் பெற்று கிராமத்திற்கு பெருமைதேடித்தந்ததை கொண்டாடும் வகையில் கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில், சத்தியமங்கலம் மூலக்கிணறு KNR திருமண மண்டபத்தில் நேற்று (17.05.2024) காலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊட்டி சரண் பள்ளி தாளாளர் கே.என்.ஆர்.ரங்கராஜ் தலைமை தாங்கினார். இவ்விழாவில் த.வீ.க.பண்பாட்டுக்கழக முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் நீதிபதியுமான தங்கராஜ், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, மூத்த வழக்கறிஞர் பி.பழனிச்சாமி, விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், மு.சரவணன், தொழிலதிபர் கண்ணுச்சாமி, பிகே பழனிச்சாமி, முருகேசன், பட்டக்காரர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோபிகா வுக்கு பாராட்டுச்சான்று, தங்க நாணயம், கேடயம் வழங்கி வாழ்த்திப்பேசினர்.
விழா ஒருங்கிணைப்பை த.வீ.க.பண்பாட்டுக்கழக மாநில காப்பாளர் மோதூர் முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். இறுதியில் அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர் என்.பவுல்ராஜ் நன்றியுரை ஆற்றினார். கோபிகாவுக்கு நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து பாராட்டினர்