வெப்ப அழுத்தம் காரணமாக பெண்கள் கருவுறுதல் பாதிக்கப்படுகிறதா?

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தாலும், பல பகுதிகளில் இன்னும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. அதிக வெப்பநிலை காரணமாக தொழிலாளர் உடல்நிலை பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு திறந்தவெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான பணிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ள கூடாது என்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அறிவுரை வழங்கி உள்ளார்.
இதற்கிடையே, வெப்ப அழுத்தம் காரணமாக கடந்த 1995 ஆம் ஆண்டில் இந்தியா 4.3% வேலை நேரத்தை இழந்ததாகவும், இது 2030 ஆம் ஆண்டில் 5.8% மாக உயரும் என சொல்லப்படுகிறது.
மேலும், வெப்ப அழுத்தம் காரணமாக பசுமாடுகளின் இனப்பெறுக்க விகிதத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதவிர பசுக்களின் தீவன நுகர்வு குறைந்து பால் உற்பத்தியும் பெருமளவு வீழ்ச்சியடைவதாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
வெப்ப அழுத்தம் குறித்து விஞ்ஞானி ஒருவர் கூறியிருப்பதாவது, கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பம் அதிகமாக இருக்கும். அந்தச் சமயத்தில், வெயிலில் நேரடியாகச் செல்பவர்களுக்கு உடலில் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வரும். வெப்பம் அதிகரிக்கும்போது நம் உடல், தானாக வியர்வையைச் சுரந்து, நம் உடலில் சேரும் வெப்பத்தை வியர்வையாக வெளியேற்றி விடும். ஆனால் அதுவும் ஓரளவுக்குத் தான் செயல்படும். அதிகமான வெப்பம் வியர்வையாக வெளியேறவில்லை எனில், அது உடலில் தங்கி வெப்ப அழுத்தத்தை உண்டாக்கும்.
நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள், வெயில் உச்சி நிலையில் இருக்கும்போது வெளியே அலைபவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் வெப்ப அழுத்த பாதிப்பு உண்டாகும் அபாயம் உள்ளது. வெப்ப அழுத்தத்தால் வெப்பத் தடிப்பு, தசைப்பிடிப்பு, அதிகமாக தண்ணீர் தாகம் எடுப்பது, பசியின்மை, சரும பாதிப்புகள் போன்ற பிரச்னைகள் உடலில் ஏற்படும்.
அடுத்தகட்டமாக வெப்பத் தளர்ச்சி (heat exhaustion) உண்டாகும். உடல் களைப்பு அதிகரித்து கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல், ரத்த அழுத்தம் குறைவது என உடலில் பல வகையான பிரச்னைகள் ஏற்படும்.
இதில் கடைசி கட்டமே, ஹீட் ஸ்ட்ரோக் (Heat Stroke). மூச்சுத் திணறல், பக்கவாதம், கை கால் இழுப்பு மற்றும் சுயநினைவு இழப்பது, மயங்கி விழுந்தபடியே உயிரிழக்கும் அளவிற்கு மிக மோசமான தாக்கத்தை இது உண்டாக்கும்.
இதற்கெல்லாம் மூலகாரணமாக இருக்கும் வெப்ப அழுத்தத்தில் இருந்து, நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நீங்கள் வெயிலில் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை, அதிகப்படியான வெப்பநிலை கொண்ட அனல் காற்றில் நின்றால்கூட வெப்ப அழுத்தம் உண்டாகும். முக்கியமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இதயம், சிறுநீரகம், கல்லீரல் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இதற்கிடையே அதிக வெப்ப அழுத்தம் காரணமாக பசுக்களின் கருத்தரிப்பு விகிதத்தை பாதிக்கிறது என்ற்போதும் மனிதர்களுக்கு அதேபாதிப்பை ஏற்படுத்துமா என்று இன்னும் முழுமையாக தெரியவில்லை, என்றபோதும் வெப்ப அழுத்தம் மனிதர்களுக்கும் பல்வேறு நோய்களை ஏற்படுத்துவதால் எச்சரிக்கையாக இருப்பதே சரி என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.