🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இளைஞர்களின் உயிரை உறிஞ்சும் வெப்பம்! பாதுகாத்துக்கொள்வது எப்படி?

வழக்கமாக மே மாதம் தான் கோடை வெப்பம் உச்சம் தொடும். வழக்கத்திற்குமாறாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே வெயில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. மதிய நேரங்களில் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத சூழலே நிலவுகிறது.

இந்த அதீத வெப்பத்தால் சில மோசமான சம்பவங்களும் கூட நடந்துவிடுகிறது. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உச்சி வெயிலில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்சுருண்டு விழுந்து மரணமடைந்தார். தற்போது மீண்டும் அதேபாணியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சம்பவம் நடைபெறுள்ளது.  

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரி பகுதியில் உள்ள டி.சி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (43).. முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு வெண்ணிலா (40) என்ற மனைவியும் அர்ஷன் (14), பரத் (12) என இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்களின் குலதெய்வ கோயில் பக்கத்துக் கிராமமான நத்தம் பகுதியில் உள்ள மலை மீது அமைந்துள்ளது. அங்குள்ள மூங்கில் வாழி அம்மன் கோவில் தான் இவர்களின் குல தெய்வ கோயிலாகும். இந்தச் சூழலில் நேர்த்திக்கடன் செலுத்த சத்யா தனது குடும்பத்தினரைக் குலதெய்வ கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மலை அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு இவர்கள் குடும்பத்துடன் நடந்தே சென்றுள்ளனர்.

அப்போது அதீத வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென நடந்து சென்று கொண்டிருந்த சத்யாவின் மூத்த மகன் அர்ஷன் மயங்கி விழுந்து உள்ளார். இதையடுத்து பதறிய சத்யா குடும்பத்தினர் அர்ஷனை எழுப்ப முயன்றுள்ளனர். இருப்பினும், எவ்வளவு முயன்றும் அர்ஷனை எழுப்ப முடியவில்லை. இதையடுத்து அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அர்ஷனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அர்ஷன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.. வெயிலின் தாக்கத்தால் அந்த சிறுவன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுநல மருத்துவர் அப்துல்லா, கிருஷ்ணகிரி மற்றும் ராணிப்பேட்டையில் நடைபெற்றுள்ள சம்பவங்கள் மூலம் இது "வெப்ப வாதம்" எனும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டதால் நிகழ்ந்த மரணம் என்பது புலனாகிறது. 

தமிழ்நாட்டில் கோடை காலங்களில் வெப்ப அளவுகள் 40 டிகிரிக்கு மேல் நிலவுவது வழக்கமாக இருக்கிறது. வெளிப்புற சூழ்நிலையில் பணி புரிபவர்கள் மற்றும் கோடை கால விடுமுறையில் வெளிப்புறங்களில் உச்சி வெயிலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விளையாடுவதையும் காண முடிகிறது. 

இந்த சூழ்நிலையில் அதீத வெப்பத்தின் விளைவாக வெளிப்புற சூழ்நிலையில் உடல் சூடு அதிகமாகி வெப்ப வாதம் ஏற்பட்டு மருத்துவ ரீதியான அவசர சூழ்நிலை ஏற்பட்டு முறையான கவனிப்பற்ற நிலையில் மரணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 

அதீத வெயிலில் வெளிப்புறங்களில் பணிபுரிபவர்கள் கட்டாயமாக இருசக்கர வாகனங்களில் வெயிலில் பணிநிமித்தம் பயணம் செய்ய வேண்டியிருப்பவர்கள் என பலரும் இந்த வெயிலோடு போராடி வருகின்றனர்.

இந்த வெயிலை சமாளிப்பதற்கு, பாதிப்பில்லாமல் வெயிலில் பணிபுரிவதற்கு ஏற்றாற் போல உடற் தகுதியை நம்மால் அடைய முடியும்.

இதற்கு "வெப்பத்தை தாங்கும் பயிற்சி" ( ஹீட் அக்ளமடைசேசன்) அவசியம். உதாரணத்திற்கு ஒருவர் நல்ல வெயிலில் தினமும் நான்கு மணிநேரம் விளையாடவோ பணிபுரியவோ, பயணம் செய்யவோ, வேண்டுமென்றால், அவர் நேரடியாக எந்த முன்பயிற்சியும் இல்லாமல் நான்கு மணிநேரம் விளையாடுவாரானால் வெப்ப அயர்ச்சி மற்றும் வெப்ப வாதத்திற்கு உள்ளாகி பாதிப்புக்குள்ளாகுவார். 

அவர் எவ்வாறு வெப்பத்திற்கு தனது உடலைப் பழக்குவது? 

இதற்கு அவர் குறைந்தபட்சம் ஒரு வாரம் முதல் இரண்டு வாரம் வரை நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் கடும் வெயில் சூழ்நிலையில்  மொத்தம் பணிபுரிய வேண்டியது ஐந்து மணிநேரம். இதை 100% என்று கொள்ளவும்.

முதல் நாள், 20% நேரம் மட்டும் அதாவது ஒரு மணிநேரம் மட்டும்  தனது பணியை கடும் வெயில் சூழலில் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு நீர் மற்றும் உப்புச் சத்து நிரம்பிய ஓ ஆர் எஸ் ( உப்புக் கரைசல்) பருக வேண்டும். உணவை முறையாக உண்ண வேண்டும். 

இரண்டாம் நாள், 40% -இரண்டு மணிநேரம் என்ற அளவில் வெயிலில் பணிநேரத்தை உயர்த்த வேண்டும். 

அதற்குப் பிறகு ப்ரேக் எடுக்க வேண்டும். மூன்றாவது நாள், 60% நேரம் அதாவது மூன்று மணிநேரம் என்ற அளவில் வெயிலில் வேலை செய்ய வேண்டும். நான்காவது நாள், 80% நேரம் அதாவது நான்கு மணிநேரம் என்ற அளவில் வெயிலில் வேலை செய்ய வேண்டும். ஐந்தாவது நாள், தான் பணிபுரிய வேண்டிய ஐந்து மணிநேரமும் 100% வேலை செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது நமது உடல் முறையாக சிறுகச் சிறுக அதீத  வெப்பத்திற்கு பழக ஆரம்பித்து விடும்.  இவ்வாறு பழக்கம் ஏற்பட்ட பின் வெப்பத்தால் அயர்ச்சி ஏற்படுவதும் வாதம் ஏற்படும் வாய்ப்பும் குறையும்.  இவ்வாறு வெப்பம் தாங்குவதற்கு பழகிய பின் தொடர்ந்து இதே போன்று வெயிலில் பணிபுரியலாம். 

எனினும் இடையே ஒரு வாரத்திற்கு மேல் வெயிலில் பணிபுரியாமல் இருந்தால் இந்த வெயில் தாங்கும் நிலை கைவிட்டுப் போய் விடும். ஒரு மாத காலம் வெயிலற்ற நிலையில் பணிபுரிந்தால் இத்தகைய பயிற்சியினால் கிடைத்த வெப்பம் தாங்கும் சக்தி சுத்தமாக இல்லாமல் போய்விடும். மீண்டும் இதே போன்று சிறுகச் சிறுக பயிற்சி எடுத்து வெப்பம் தாங்கும் சக்தியை வளர்த்துக் கொண்டு பிறகு கடினமான சூழ்நிலையில் வெப்பத்தில் பணிபுரிய வேண்டும். 

இதன் மூலம் அறிந்துகொள்வது யாதெனில், அதீத வெப்பமான சூழ்நிலையில் அதைத் தாங்கும் பயிற்சியை சிறுகச் சிறுகப் பெறாமல் நேரடியாக அதீத வெப்பத்தில் நீண்ட நேரம் பணிபுரிவது / பயணம் செய்வது / விளையாடுவது உயிருக்கு ஆபத்து விளைவிக்கலாம். நீர் அருந்துவது, ஓ ஆர் எஸ் திரவம் அருந்துவது, நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை சேர்த்துக் கொள்வது முக்கியம். 

விழிப்புணர்வு பெறுவோம்! அதீத வெப்பத்தினால் ஏற்படும் மரணங்களைத் தவிர்ப்போம்!

நன்றி.
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்,
சிவகங்கை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved