🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒயிட்னர் ஏச்சரிக்கை - எழுத்தை மட்டுமல்ல குழந்தைகளையும் அழிக்கும் அபாயம்!

வொய்ட்னர்கள் எதற்கு பயன்படுகின்றன? என்ற கேள்விக்கு கிட்டத்தட்ட அனைவருமே நாம் மை கொண்டு எழுதும் போது ஏதும் பிழை செய்துவிட்டால் அதை சரிசெய்வதற்கு அதன் மேல் இந்த வொய்ட்னர் மையை சிறிது விட்டால் கொஞ்ச நேரத்தில் காய்ந்து விடும். மீண்டும் அதன் மேல் எழுதி சரி செய்யலாம் என்பது தானே?. 

நீங்கள் இதை மட்டும் பதிலாக கூறினால்....

உங்களுக்கு இன்னொரு முக்கியமான விசயத்தைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். 

நான் சமீபத்தில் வளர் இளம் பருவத்தினரிடையே உரையாடும் போது அவர்கள் கேள்விப்படும் போதை வஸ்துக்கள் குறித்து கேட்டறியும் போது மது, சிகரெட், கஞ்சா, கூல் லிப் பற்றி பலரும் கூறினர். சிலர் இந்த வொய்ட்னர்கள்  பற்றியும் கூறினர்.

ஆம்... 

டீன்ஏஜ் பருவத்தினரில் சிலர் இந்த வொய்ட்னர் தரும் போதைக்கு அடிமையாகி வருகின்றனர் என்பதை தொண்டு நிறுவனம் ஒன்று நடுநிலை மற்றும் உயர்நிலை மேனிலை படிக்கும் பள்ளி  சிறார்களிடம் செய்த ஆய்வில் 3021 பேரில் 256 பேர் ஏதோ ஒரு போதை வஸ்துவை பயன்படுத்துவது  தெரிந்தது. அதில் 13% பேர் இந்த வொய்ட்னர்களை போதைக்காக பயன்படுத்துவதையும் அறிய முடிந்தது.

வொய்ட்னர்களைப் பொருத்தவரை அதில் டோலுயீன் , ட்ரை க்ளோரோ எதிலின் போன்ற ஹைட்ரோ கார்பன்கள் உள்ளன. இவை சாதாரண அறை வெப்பத்திலேயே பெட்ரோல் டீசல் போல ஆவியாகும் தன்மை கொண்டவை. இவற்றை நுகரும் போது இந்த ரசாயனங்கள் நேரடியாக நுரையீரலுக்குச் சென்று ரத்தத்தில் கலந்து மூளையை அடைகின்றன. இதனை நுகர்ந்து அடுத்த சில மணிநேரங்களுக்கு "ஹை" எனும் மிதமிஞ்சிய போதை உணர்வு கிடைக்கிறது. 

வொய்ட்னர் போன்றே நக பாலீஷ்கள், நக பாலீஷ் ரிமூவர்கள், திண்ணர், கொசு மருந்து போன்றவற்றிலும் போதை தன்மை இருக்கிறது. இவற்றை டீன் ஏஜ் பிள்ளைகள் போதை வஸ்துவாக உபயோகிக்கும் தன்மையைக் காணும் போது பெற்றோர் இது குறித்து விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும் என்பது புரியும்.

இது போன்ற போதை வஸ்துகள் "GATE WAY DRUGS" என்று அழைக்கப்படுகின்றன. இவற்றுக்கு டீன் ஏஜ் காலங்களில் அறிமுகமாகும் பிள்ளைகள் எதிர்காலத்தில் வேறு பெரிய போதை வஸ்துகளுக்கு எளிதில் அடிமை ஆவார்கள். சிறு வயதில் புகையிலைக்கு அடிமையானவர்கள் எதிர்காலத்தில் எளிதாக மதுவுக்கு அடிமையாவார்கள். அது போன்றே இதுவும் அமையும்.

பிள்ளைகளுடன் எப்போதும் நல்ல தொடர்பில் தோழமையுடன் பழகி வந்தால் அவர்கள் இதுபோன்ற போதையை நாடுவது இல்லாமல் போய் விடும். பெற்றோருடன் ஒட்டுதல் இல்லாத பிள்ளைகள் தான் இது போன்று தடம் மாற வாய்ப்பு அதிகம். பிள்ளைகள் மீது கவனம் செலுத்தி அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதை அறிந்து அதை சீர் செய்ய வேண்டும். 

இன்னும் அவர்களின் பைகள், அவர்களின் நுகர்வு, அவர்களிடம் புழங்கும் பணம் போன்றவை குறித்து தனிக்கவனம் செலுத்த வேண்டும். அவ்வப்போது அவர்களின் பைகளை, அறைகளை சோதனை செய்யவும் தயங்கக்கூடாது.

வொய்ட்னர்களை பள்ளி சிறார்க்கு விற்பதை தடுப்பது குறித்தும் விற்பனையை ஒழுங்கு செய்வது அரசு  முடிவு செய்ய வேண்டும். பள்ளி சிறார்களின் வொய்ட்னர் பயன்பாடு குறித்து ஆசிரியர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களை கண்காணிக்க வேண்டும். 

எழுத்துப் பிழைகளுக்கு அவற்றை சிறிதாக ஸ்ட்ரைக் செய்து விட்டு அருகில் மீண்டும் சரியாக எழுதும் பழக்கமே போதும். வொய்ட்னர்களின் பயன்பாடு பள்ளிகளில் தேவையற்றது என்ற நிலை வர வேண்டும்.

வொய்ட்னர் அடிமைத்தனத்தில் இருக்கும் பிள்ளைகளை அரசு மருத்துவக்கல்லூரி மனநல மருத்துவ பிரிவிற்கு அழைத்துச் சென்று இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். தனியாரிலும் மனநல மருத்துவர்களிடம் காட்டி அடிமைத்தனத்தை சரி செய்ய முடியும். 

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே பதிவின் நோக்கம். 

நன்றி :Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved