🔴 LIVE | முப்பெரும் விழா 2023


3 கோடி ஆண்டுகளாக வாழும் சாணம் உருட்டு வண்டுகள்!

சுமார் மூன்று கோடி ஆண்டுகளாக இந்த பூமியில் சாணி வண்டு வாழ்ந்து வருகிறது. இது பெரிய விலங்குகளின் சாணத்தையே உண்டு வாழ்வதாலே அதையே பெயராக கொண்டுள்ளது. பெரும்பாலும் இவை இலைதழைகளை உண்ணும் விலங்குகளின் சாணத்தையே விரும்பி உண்கின்றன. இவை 3 மிமி அளவிலிருந்து 3 செமி அளவு வரை காணப்படுகிறது. கோடி ஆண்டுகளுக்கு முன் வாழந்தவை இதைவிட பெரியதாக இருந்திருக்கலாம். இதுவரை சுமார் 5,000 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.

சாண வண்டு, அல்லது, சாணம் உருட்டு வண்டு (Dung Beetles or Dung Roller Beetles), கொலியாப்டெரா (coleoptera) என்ற வரிசைமுறைக்கு உரியதாய் உயிரியலாளர்களால் பகுக்கப்பட்டுள்ளது. இந்தச் சொல் கொலியோஸ் (Koleos), டெரா (Ptera) என்ற இரு லத்தின் மொழிச் சொற்களை இணைத்து உருவாக்கப்பட்டது. கொலியோஸ் என்றால் உறுதியான ஓடு, டெரா என்றால் சிறகுகள். கொலியாப்டெரா என்ற வரிசைமுறையில் ஸ்காராபீயடெய் (Scarabaediae) என்ற மாபெரும் குடும்பத்துக்கு உரியவை சாண வண்டுகள். உலகில் ஆர்க்டிக் பிரதேசம் தவிர்த்து உலகெங்கும் இக்குடும்பத்தில் 7000 வகையினங்கள் உள்ளன.

அனைத்து பூச்சிகளைப் போலவும் சாணம் உருட்டு வண்டின் உடலில் மூன்று பிரிவுகள் உண்டு – தலை, மார்புக்கூடு, வயிறு. தலைப்பகுதியில் கண்கள் மற்றும் உணர்கொம்புகள் உள்ளன. நடுவில் உள்ள மார்புக்கூடு சவ்வுத்தன்மை கொண்ட இரு இறகுகளும் ஆறு கால்களும் கொண்டது.  மூன்றாம் பகுதி வயிற்றால் மட்டும் ஆனது. மூட்டைப்பூச்சி, நாவாய்ப்பூச்சி போன்ற உறிஞ்சி உண்ணும் பூச்சிகளைப் போல் அல்லாது வண்டுகள் உறுதியானவை, கனமானவை, தடுமாறுபவை, மெல்லப் பறப்பவை. உறுதியான ஓடு போன்ற ஒன்று அவற்றின் மென்மையான உடல்களையும் நுண்மையான, சவ்வுத்தன்மை கொண்ட இறகுகளையும் மூடி மறைத்துப் பாதுகாக்கிறது. இப்படிப்பட்ட உடல் அமைப்பின் காரணமாய் இவை பறப்பதற்கு முன், தம் கெட்டித்த ஓடுகளை விரித்து தூக்கி நிறுத்திக் கொண்ட பின்னரே மெல்லிய இறகுகளை அசைத்துப் பறக்க முடியும். பாதுகாப்புக்கான சுமைகூலியாய் தம் வேகத்தைக் கொடுப்பதால்,  அவற்றின் கனமான ஓடுகள் காற்றில் மோதும்போது எழும் முரல் ஒலியுடன் வண்டுகள் மெல்லப் பறந்து செல்ல வேண்டியதாகிறது.

ஸ்காராபீயடெய்  குடும்பத்தில் உள்ள வண்டுகளில் பெரும்பான்மை சாணம் உருட்டு வண்டினங்கள். அவற்றின் நெற்றியை அலங்கரிக்கும் மண்வெட்டி போன்ற அமைப்பு சாணம் அள்ள மட்டுமல்ல, நிலத்தை அகழ்ந்து சுரங்கப் பாதை அமைக்கவும் பயன்படுகிறது. கிடையாட்டுக்கும் மரங்கொத்திக்கும் அடுத்தபடி சாணம் உருட்டு வண்டு மட்டுமே கடும் வேலை செய்வதற்கான, உறுதியான, அதிர்வுகளைத் தாங்கிக் கொள்ளும் வலிமையான மண்டை கொண்டிருக்க வேண்டும். ஐஸ் க்ரீமை அள்ளுவது போல் சாணத்தை அள்ளி ஒரு குப்பை வண்டியில் கொண்டு செல்வது போன்ற உடல் அமைப்பு இவற்றுக்கு இல்லை. இவ்வண்டுகள் ஆற்றலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றன. சுமையைத் தூக்கிச் செல்ல பல உறுப்புகளைப் பயன்படுத்துவதற்கு பதில் இவை மண் அள்ளும் இயந்திரம் ஒன்று பின்புறமாய் நகர்வது போல் சாணத்தை ஒரு பெரிய பந்தாய்த் திரட்டி உருட்டிச் செல்கின்றன.

மாடு மற்றும் யானையின் சாணம் இவற்றுக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால் அது கிடைக்காத போது வேறு எந்த சாணத்தையும் விட்டுவைப்பதில்லை. லட்சக்கணக்காக விலங்குகள் வாழும் காட்டில் அவை இடும் டன் கணக்கான சாணத்தை சாணி வண்டுகள்தான் தின்று காட்டை தூய்மைப் படுத்துகிறது என சொன்னால் அது மிகையில்லை.

சாணி வண்டுகள் கூட்டமாக வாழும். நல்ல மோப்ப சக்தி கொண்டவை. தூரத்தில் சாணம் இருப்பதையும் கண்டறிந்து வேகமாக இடத்தை சென்றடையும். எவ்வளவு உயரமாக, பெரிதாக சாணம் கொட்டிக்கிடந்தாலும் அவற்றை தன் தலையில் உள்ள மண்வெட்டி போன்ற அமைப்பால் வெட்டி சரித்து கூட்டமாக தின்று தீர்க்கும்.

மழை பொழிந்து மண் ஈரமாக உள்ள காலத்தில் சாணி வண்டுகள் தனது துணையை தேடும். தனக்கான பெண் துணையை ஈர்க்க ஆண் வண்டு சாணியை உருட்டி நகர்த்தி செல்லும். எவ்வளவு பெரியதாக உருட்டுகிறதோ அந்த அளவு பெண் வண்டு கவரப்படும். பழங்காலத்தில் வாழந்த வண்டுகள் ஒரு டென்னிஸ் பந்து அளவு கூட உருட்டியுள்ளதாக கண்டறிந்துள்ளனர். ஈர்க்கப்பட்ட பெண் வண்டு உல்லாசமாக சாணி உருண்டை மீது ஏறி அமர்ந்து கொள்ளும். பாதுகாப்பான இடம் ஒன்றை தேர்ந்தெடுத்து அங்கே இரு வண்டுகளும் சேர்ந்து ஆழமான பொந்து ஒன்றை தோண்டும். தான் உருட்டி வந்த சாணி உருண்டையை எளிதாக உள்ளே எடுத்துச்செல்லும் அளவிற்கு பொந்தின் விட்டம் இருக்கும்.

பொந்துக்குள் சாணி உருண்டையை கொண்டு சேர்ந்தபின் ஆணும் பெண்ணும் இணையும். அந்த மகிழ்ச்சியை கொண்டு வந்த சாணி உருண்டை தீரும் வரை அங்கேயே தங்கி கொண்டாடும். பின்னர் அந்த பொந்து இருக்கும் இடத்தை நன்கு மனதில் பதிய வைத்துக்கொண்டு மீண்டும் சாணம் தேடி போகும். முட்டை இடும் காலம் வந்தவுடன் மீண்டும் ஆணும் பெண்ணும் சேர்ந்து சாண உருண்டைகளை உருட்டி வரும். இம்முறை பெண் வண்டும் சேர்ந்து உருட்டும். பொதுவாக இவை தன் எடையை விட 50 மடங்கு அதிக எடையை தூக்க வல்லவை. தன் எடையை விட 250 மடங்கு அதிகமுள்ள எடையை உருட்டி செல்ல வல்லவை. ஆப்பிரிக்காவில் காணப்படும் சில வகையில் ஆண் வண்டுகள் தன் எடையை விட 1,141 மடங்கு அதிக எடையை உருட்டி செல்கிறதாம். இது 70 கிலோ எடையுள்ள மனிதன் 80 டன் எடையுள்ள பொருளை உருட்டுவதற்கு சமம்.

இவ்வளவு கனமான சாணி உருண்டையை எளிதாக உருட்டி தன் வளைக்கு கொண்டு செல்ல சில நுட்பங்களை கையாளுகிறது. தனது சிறிய முன் கால்களை மண்ணில் வைத்து, நீளமான பின் கால்களால் சாண உருண்டையை தள்ளுகிறது. நம் நான்கு சக்கர வாகனங்களில் முன்னோக்கு கியர்களை விட பின்னோக்கு கியருக்கு அதிக இழுத்திறன் உண்டு. அதை போலத்தான் இதுவும். ஒரு வண்டு பின்னிருந்து தள்ளவும், இன்னொரு வண்டு முன்னிருந்து இழுக்கவும் செய்யும். இந்த செயலும் நகர்த்துவதை பல மடங்கு எளிதாக்கும். வழியே வேறு வண்டுகள் இதனை திருட வரலாம். அவ்வாறு வந்தால் ஒரு மணி நேரம் கூட சளைக்காமல் சண்டை போடும். எனினும் யாரும் வரும் முன்னர் கொண்டு போய் சேர்க்க பதட்டமாகவே இடைவிடாமல் உருட்டி செல்லும்.

அட.. சாணிக்கு போய் ஒரு மணி நேரம் சண்டையா.. சீ.. என முகம் சுளிக்கிறீர்களா..?

அது அதனுடைய உணவு. அதுவே அதனுடைய சொத்து. அதனால் அது சளைக்காமல் சண்டை போடுகிறது.அது மட்டுமல்ல, சாணியை தின்னும் வண்டுதானே என அலட்சியமாக எண்ணி விட வேண்டாம். இந்த வண்டுகளுக்கு GPS தொழில்நுட்பம் தெரியும். பெரிய சாண உருண்டையை காட்டின் பல மேடு பள்ளங்களில் தனது இருப்பிடம் நோக்கி எடுத்துச்செல்லும்போது வழி மாறி வேறு எங்கும் சாண உருண்டை உருண்டு விழலாம். அப்போது சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை கொண்டு தன் இருப்பிடத்தை கணித்து சரியான திசையில் சாணி உருண்டையை எடுத்துச் செல்கின்றன. இவ்வுலகில் மனிதன் தோன்றுவதற்கு சில கோடி ஆண்டுகள் முன்னரிலிருந்தே GPS தொழில்நுட்பத்தை இந்த வண்டுகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. இன்னமும் கூட மனிதனிடம் உள்ள GPS இவ்வண்டுகள் அளவிற்கு துல்லியமானது கிடையாது.

வளைக்குள் சாண உருண்டையை கொண்டு வந்து சேர்த்த பின்னர் அதற்குள் பெண் வண்டு முட்டையை ஒளித்து வைக்கிறது. அதனை தன் எச்சில் கொண்டு மெழுகி மூடுகிறது. சில வகை வண்டுகள் வளையை மண்ணை தள்ளி மூடிவிட்டு சென்றுவிடும். சில வகை வண்டுகள் அங்கேயே தனது பிள்ளைகளுக்காக காத்திருக்கும். குட்டி வண்டு லார்வா பருவத்திலிருந்து தன்னை சுற்றியுள்ள சாணத்தை தின்று வளர்ந்து இரண்டிலிருந்து மூன்று வாரத்திற்குள் முழு வண்டாக மாறி வளையை விட்டு வெளியேறும். பெற்றோர் வண்டுகள் மேலும் சாணத்தை உருட்டி வந்து லார்வா வுக்கு உணவாக தரும். பெரும்பாலும் அதே மனைவியுடனே இறுதி காலம் வரை வாழும். இவற்றிற்கான ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள்.

சாணி வண்டுகள் விவசாயத்திற்கு மிகப்பெரிய உதவி செய்கிறது. இது சாணத்தை எளிய பொருளாக்கி மண்ணுக்கு அடியில் கொண்டுபோய் சேர்ப்பதால் மண்ணுக்கு சிறந்த உரமாக மாறுகிறது. இதனால் மற்ற தாவரங்களின் வேர் தனக்கு தேவையான சத்தினை எளிதாக பெற்று திடமாக வளருகிறது.

சாணத்தை உடனே சிதைக்க தொடங்குவதால் அதன் மீது ஈ, கொசு போன்றவை அமர்ந்து அதன் மூலம் விலங்குகளுக்கு நோய் எதுவும் பரவிவிடாமல் தடுக்கிறது. காடுகளில் வாழும் வண்டுகளுக்கும் மனிதர்கள் வாழும் பகுதியில் உள்ள வண்டுகளுக்கும் வேறுபாடு உண்டு. மனிதர்கள் வாழும் பகுதியில் உள்ள வண்டுகள் சாணம், மலம் எவற்றையும் உண்ணும். ஆனால் காடுகளில் வாழும் வண்டுகள் குறிப்பிட்ட விலங்குகளின் சாணத்தை மட்டுமே உண்ணும். அவற்றிற்கு விருப்பமான சாணம் கிடைக்காமல் தடுத்து பட்டினி போட்டு பின்னர் அதற்கு விருப்பமில்லாத வேறு விலங்கின் சாணத்தை கொடுத்தால்கூட தின்னாது.

இது மட்டுமல்லாமல் இந்த வண்டுகள் அதிகம் வாழும் பகுதியில் வளரும் வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி ஏதுமின்றி வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதை கண்டு பிடித்துள்ளார்கள். ஆனால் இது எப்படி சாத்தியமாயிற்று என இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் தானோ என்னவோ 5000 வருடங்கள் முன்பே பண்டைய எகிப்தியர் இதனை வணங்கியுள்ளனர்.மானுட வரலாற்றில் சாண வண்டு அளவு போற்றப்பட்ட பூச்சி எதுவும் இருந்திருக்காது என்று தோன்றுகிறது. 5200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பண்டைய எகிப்தியர்கள் ‘கெப்ரி’ என்ற தெய்வமாக சாண வண்டுக்களை வழிபட்டனர். சாண வண்டுக்களே உதிக்கும் சூரியனை தொடுவானுக்கு அப்பாலும் அதன் பின் அந்திப்பொழுதில் புத்துயிர் பெறும் வேறு உலகுக்கும் கொண்டு செல்கின்றன என்பது அவர்கள் நம்பிக்கை. இந்த நம்பிக்கையில் உள்ள சூழியல் மற்றும் ஆற்றல் சேமிப்பு குறித்து எகிப்தியர்கள் முழுமையாய் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் இந்த வண்டுகளை வழிபட்டார்கள் என்பது மட்டுமல்ல, பொன்னணி நகைகளாய் அணிந்தனர், இறந்தபின் மம்மிக்களுடன் இவையும் புதைக்கப்பட்டன.

நாம் தான் இதன் மேல் உரத்தையும், பூச்சி மருந்தையும், ஷாம்புவையும், பாத்திரம், தரை கழுவும் திரவங்களையும், தொழிற்சாலை கழிவுகளையும் தெளித்து, மழையும் இல்லாமல் ஆக்கி கொன்று வருகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved