🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பிற்படுத்தப்பட்டோர் ஆணையமா? பித்தலாட்ட ஆணையமா? - சமூகநீதி கூட்டமைப்பு கொந்தளிப்பு.

ஓய்வு பெற்ற நீதியரசர் ஆணையத்தின் தலைவராக இருந்துகொண்டு தொடர்ந்து மோசடிகளை செய்வது மாண்பு அல்லவே! சமூகநீதி கூட்டமைப்பு கோரிக்கை.


பெறுநர்,

         தலைவர்,                                                                                                                               தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்,                                                                           மைலாப்பூர், சென்னை.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: சமூகநீதிக்கு  இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு உடனடி நிவாரணம் கோரி மனு

உச்சநீதிமன்றத்தின் இந்திரா சஹானி வழக்கின் உத்தரவுப்படி, தமிழகத்தில் நிரந்தர பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழகப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் சமூகநீதிக்குத் தொடர்ந்து ஆபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலங்களில் ஒரு சாதிக்கு மட்டும் தனி இடஒதுக்கீடு கொடுப்பதற்காக ஆணையத்தின் தலைவர்கள், ஆணையத்தின் நடைமுறையையும், விதிமுறைகளையும், காற்றில் பறக்க விட்டுவிட்டு, எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல், தர்ம சிந்தனையும் இல்லாமல், மனச்சாட்சியும் இல்லாமல், பொறுப்பு ஏதுமில்லாமல், பிற ஏழை எளிய சமூகங்களின் உரிமைகளைச் சூறையாடுவது, கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர். இந்த பிற்போக்கான, அநீதியான, அதிகாரத் துஷ்பிரயோகச் செயல்கள் தமிழகத்தின் சமூகநீதியை மிகவும் பலவீனமாக்கி உள்ளது. எனவே, தற்போதைய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த காலத்தில் நடந்த அநீதியான தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாமென்றும், 115 சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை உடனே சரி செய்ய தமிழக அரசுக்கு, ஒரு சாதிக்கு கொடுக்கப்பட்ட இடஒதுக்கீட்டை உடனடியாக நிறுத்தி வைக்கப் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்வது ஏன் அவசியம் என்று சில காரணங்களை மட்டும் உங்கள் கனிவான கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றோம்.

1. கடந்த 21.01.2021ல்  தற்போதைய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொடுப்பதற்கான ஆலோசனை நடைபெற உள்ளதாக அறிந்து, 115 சமூகத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்பாக, ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியதின் விளைவாக, காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி ஆணையத்தின் கூட்டத்திற்கு உள்ளாகவே பிரதிநிதிகளை அழைத்துவந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க அனுமதித்தனர். 115 சமூகத்தின் கோரிக்கையான முறையான வெளிப்படையான சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் எம்பிசி/டிஎன்சி 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்றும், எல்லா சமூகங்களையும் அழைத்துப் பேசி விட்டுத்தான் இடஒதுக்கீடு சம்பந்தமாக எந்த பரிந்துரையும் வழங்க வேண்டும் என்றும் சமர்ப்பித்தனர். ஆணையத்தின் தலைவராகிய தாங்கள், ஓய்வுபெற்ற நீதியரசர், உள் இடஒதுக்கீடு சம்பந்தமாக எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று சமுதாயப் பிரதிநிதிகளுக்கு உத்தரவாதம் அளித்ததன் பெயரில், நிம்மதிப் பெருமூச்சுவிட்டு விடைபெற்றுச் சென்றோம். ஆனால் 26.02.2021ல் சட்டம் 8/2021 நிறைவேற்றப்பட்டு, அதன் முகவுரையில் தற்போதைய ஆணையத்தின் தலைவர் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில்தான் அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்று சொல்லப்பட்டுள்ளதை அறிந்து, நாங்கள் மிகப்பெரிய ஏமாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டதும், அதுவும் ஒரு நீதியரசரால் ஏமாற்றப்பட்டது என்பது, தமிழகத்தில் நீதி இறந்து போய்விட்டது என்ற உணர்வை உருவாக்கியுள்ளது. தயவு கூர்ந்து இது போன்ற, ஏமாற்று வேலைகளை மீண்டும் செய்ய வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம். இப்படி மக்களைத் தவறாக வழிநடத்திய ஒரே காரணத்திற்காகத் தார்மீக அடிப்படையில் நீங்கள் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும். நீங்கள் மன்னிக்க முடியாத மகாபாதக  வரலாற்று அநீதியைச் செய்திருந்தாலும் நாங்கள் உங்களை மன்னிப்பதற்குத் தயாராக இருக்கின்றோம்.  எனவே இனிமேலாவது எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் சம்பந்தப்பட்டச் சமுதாயங்களை அழைத்துப் பேசாமல் வெளிப்படைத் தன்மை இல்லாமல், அனைத்து உறுப்பினர்களையும் அழைத்துப் பேசாமல்,  முறையான ஆய்வு இல்லாமல் அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டாம் என்று உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றோம்.


2. வன்னியர் ஒரு ஜாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபுப் பழங்குடியினருக்கு  வழங்கப்பட்டு வந்த 20 விழுக்காட்டிலிருந்து பிரித்து வழங்கலாம் என்று அறிவுரை வழங்கியதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பது உங்கள் மனசாட்சிக்கு நன்கு தெரியும். ஏனென்றால் 13.01 விழுக்காடு மக்கள் வன்னியர் சாதியினர் உள்ளனர் என்ற அம்பாசங்கர் ஆணையத்தின் மக்கள்தொகை முடிவை அந்த ஆணையத்தின் அறுதிப் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அரசு அந்தப் புள்ளி விவரங்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று தமிழகஅரசுக்கு அவர்கள் பரிந்துரை வழங்கியுள்ளார்கள் என்றும் தங்களுக்குத் தெரியும். எனவே சட்டப்படி ஏற்றுக்கொள்ளக்கூடிய புள்ளி விவரங்கள் எதுவும் இல்லை என்பதும் தங்களுக்குத் தெரியும். உங்களுக்கு முன்னாள் இருந்த நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களும் 2012-இல் இதேபோன்று ஒரு மோசடியான வேலைக்கு முயற்சி செய்து அப்போதிருந்த உறுப்பினர்கள் அனைவரும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள் என்பதையும் தாங்கள் அறிவீர்கள். அதனால்தான் மீண்டும் அரசு தற்போதைய ஆணையத்தின் கருத்தைக் கோரியது. ஆனால் அப்படி அரசு கருத்து கோரியதை நீங்கள் மற்ற சக உறுப்பினர்களுக்குக் கூடத் தெரிவிக்கவில்லை. இந்தச் செயல் பகல் கொள்ளைக்குச் சமமானது. 22.2.2021ல் எந்த முகாந்திரமும் இல்லாமல் எந்த உறுப்பினர்களுக்கும் தெரியாமல் இரகசியமாக 115 சமுதாயங்களின் உரிமைகளைக் திட்டமிட்டுக் கொள்ளையடித்துச் சூறையாடிவிட்டீர்கள். இதற்கு 115 சமூகத்திடமும் தார்மீக பொது மன்னிப்பு கேட்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.


3. ஒரு சாதியை எப்படி ஒரு வகுப்பாகக் கருதினீர்கள் என்பதைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. பல நீதிமன்றத் தீர்ப்புகளில் சாதி வகுப்பாக இருக்கலாம், அந்த வகுப்பு சமூக வகுப்பு மட்டும்தான். 2018-ல் 102 ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தத்திற்குப் பிறகு பிற்படுத்தப்பட்டோர் என்றால் சமூக ரீதியாக கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் என்று தெளிவான வரையறை கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சாதி என்பது ஒரு சமூக வகுப்பை மட்டும்தான் குறிக்க முடியும். அதுவே சமூக,  கல்வி நிலைகளில் பின்தங்கிய வகுப்பாக மாறிவிடாது. எனவே அரசமைப்புச் சட்டப்படி ஒரு சாதிக்கு மட்டும் தனியாக இடஒதுக்கீடு வழங்க முடியாது. அதுவும் சமூக கல்வி நிலைகளில் ஒத்த நிலையில் இருக்கின்ற சமூகங்களை வேறு வேறு பிரிவுகளாகப் பிரித்து வைப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தில் இடமே இல்லை என்பதை நீதியரசரான நீங்கள் அறியவில்லை என்பது 115 சமுதாயங்களுக்கு மிகப்பெரிய வேதனையாக இருக்கிறது.


4. 2010ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தமிழக அரசாங்கத்திற்கு 69% இடஒதுக்கீட்டை நியாயப்படுத்துவதற்கு உரிய புள்ளிவிவரங்கள் இருக்கின்றதா என்பதை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலமாக ஆய்வுசெய்து, அதனடிப்படையில் தமிழக அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் தமிழக அரசு முறையான வெளிப்படையானக் கணக்கெடுப்பை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாத, ஒரு நபர் அம்பாசங்கர் ஆணையத்தின் அறிக்கையையே மீண்டும் தமிழகப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கணக்கில் எடுத்துக்கொண்டு போதுமான புள்ளிவிவரங்கள் இருக்கிறது என்று ஒரு மோசடியானப் பொய்யான அறிக்கையை அரசுக்கு வழங்கி, அதையும் 2011ஆம் ஆண்டு அமைச்சரவை ஏற்றுக்கொண்டு 69% தமிழகத்தில் வழங்குவது நியாயம்தான் என்று முடிவு செய்துவிட்டது. அதன் விளைவாக அந்த முடிவை எதிர்த்து 2012ஆம் ஆண்டு முதல் 69% இடஒதுக்கிட்டிற்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டு அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இப்படி 69 % இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற உரிய முறையில் கணக்கெடுப்பு நடத்தி நீதிமன்றங்களில் சட்டப்படிதான் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று நிரூபிப்பதை விட்டுவிட்டு,  மூடி மறைக்கின்ற, பூசி மொழுகுகின்ற வேலையை எத்தனை காலம் தான் தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் செய்யப் போகின்றது


5. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கணக்கெடுப்பு நடத்துவதற்கு அரசுக்கு பரிந்துரைக்கவில்லை என்றாலும்,  அல்லது அரசிடமிருந்து சமீப கால சமூக, கல்வி நிலை குறித்த மற்றும்  சமூகங்கள் அரசு கல்வி வேலை வாய்ப்பில் பெற்று இருக்கின்ற பிரதிநிதித்துவம் குறித்தும் புள்ளிவிவரங்களைக் கோரவில்லை என்றாலும்,  மத்திய அரசு 18.8.2020ல் இந்தியா முழுவதும் புள்ளிவிபரச் சட்டம் 2008ன்   டி.என்.டி,  எஸ்.என்.டி மக்களின் சமூக கல்வி நிலை குறித்த மதிப்பீடு செய்வதற்குக் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்து எல்லா மாநில அரசாங்கங்களும் அந்த பணிக்குரிய தொடர்பு அதிகாரியை நியமிக்கக் கோரிய பொழுது,  தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அதனுடைய முதல் கூட்டமான 7.10.2020ல்  தமிழகத்தில் இருக்கின்ற 68 சீர்மரபு பழங்குடி மக்கள் மற்றும் இதுவரை எந்த சாதிப்பட்டியலிலும் இல்லாத 24 நாடோடிப் பழங்குடி மக்களின் கணக்கெடுப்பு நடத்தக் கூடாது என்ற தீர்மானத்திற்கு மற்ற உறுப்பினர்களைக் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளீர்கள். இப்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அநீதிகள் அடுக்கடுக்காகத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது.

6. தற்போது வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு சம்மந்தமாக உயர்நீதிமன்றத்தில் 31 நீதிப் பேராணை வழக்குகளும், உச்சநீதிமன்றத்தில் 4 வழக்குகளும், தாக்கல் செய்யப்பட்டு, அரசு அதற்குப் பதிலளித்து, விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது. நிலைமை அவ்வாறு இருக்க, அவசர அவசரமாக வருகின்ற 23.8.2021ல் தற்போதைய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூன்றாவது கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதை அறிந்து நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். மேலும் இன்னும் என்ன அநீதி  அரங்கேற்றப்பட உள்ளதோ? என்ற அச்சம் எங்களை எல்லாம் மிகப்பெரிய வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

7. மேலும் சமீபகால அரமைப்புச் சட்ட திருத்தத்தின்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எந்தெந்த சாதிகளைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் நீக்கவேண்டும் என்று பரிந்துரை செய்வதைத்தவிர மற்ற அதிகாரங்கள் அனைத்தும் அரசமைப்புச்சட்டம் 338Bயின்படி தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு மட்டும்தான் உள்ளது என்பதைப் பணிந்து சமர்ப்பித்துக் கொள்கின்றோம். நீங்கள் 22.2.2021ல் வழங்கிய பரிந்துரை அநீதியானது மட்டுமல்லாமல் அதிகாரமற்றது என்பதைக் கருத்தில்கொண்டு இனிமேலாவது சட்டவிரோத செயல்களைச் செய்ய வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.


எனவே தயவு கூர்ந்து தாங்கள் 22.2.2021 அன்று நிகழ்த்திய வரலாற்று அநீதியை சரி செய்யும் நோக்கத்தோடு உடனடியாகச் சட்டம் 8/2021யை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், புள்ளிவிபரச் சட்டப்படி முறையானக் கணக்கெடுப்பு நடத்திய பின்பு,  வெளிப்படையான விவாதங்களுக்குப் பிறகு, எல்லாச் சமூகங்களையும் கலந்தாலோசித்து விட்டு,  சட்டப்படியான வகுப்புவாரி இடஒதுக்கீட்டு முறையை, கர்நாடக மாநிலத்தில் இருக்கின்ற முறையின் அடிப்படையில்  செயல்படுத்தப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று பணிந்து கேட்டுக்கொள்கின்றோம்’

மேலும் 23.8.2021ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆணையத்திந் கூட்டத்தில் 115 எம்பிசி/டிஎன்டி, 146 பிசி சமூக பிரதிநிதிகள் கொண்ட சமூகநீதிக் கூட்டமைப்பின் குழு ஆணையத்திடம் தங்கள் தரப்பு நியாயங்களை விளக்க நேரம் ஒதுக்கித்தர வேண்டும் என்றும் பணிந்து கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன்

சமூகநீதிக் கூட்டமைப்பு

நகல்

1. உறுப்பினர்கள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மைலாப்பூர், சென்னை.

2. உறுப்பினர் செயலர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மைலாப்பூர்,சென்னை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved