🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதியைத்தேடி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நோக்கி பயணம்! - மயிலாப்பூருக்கு திரண்டு வாரீர்!

கடந்த 21.1.2021ல்  தற்போதைய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொடுப்பதற்கான ஆலோசனை நடைபெற உள்ளதாக அறிந்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலுள்ள 115 சமூகத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆணையத்தின் கூட்டத்திற்கு உள்ளாகவே பிரதிநிதிகளை அழைத்துச் சென்று தங்கள் கோரிக்கைகளை ஆணையத்தின்முன் வைக்க அனுமதித்தனர். அப்பொழுது 115 சமூகத்தின் சார்பில் முறையான வெளிப்படையான சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் எம்பிசி/டிஎன்சி 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்றும், எல்லா சமூகங்களையும் அழைத்துப் பேசி விட்டுத்தான் இடஒதுக்கீடு சம்பந்தமாக எந்த பரிந்துரையும் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தனர். அப்பொழுது போராட்டக்காரர்களிடம் பேசிய ஆணையத்தின் தலைவராகிய ஓய்வுபெற்ற நீதியரசர்.தணிக்காசலம் அவர்கள், வன்னியர் உள்இடஒதுக்கீடு சம்பந்தமாக எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று சமுதாயப் பிரதிநிதிகளுக்கு உத்தரவாதம் அளித்ததன் பெயரில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட 115 சமுதாய பிரதிநிகள் கலைந்து சென்றனர்.

ஆனால் 26.2.2021ல் கொண்டுவரப்பட்ட வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டம் 8/2021 நிறைவேற்றப்பட்டு அதன் முகவுரையில் தற்போதைய ஆணையத்தின் தலைவர் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில்தான் அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால் 115 சமூகத்தினர் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டதும், அதுவும் ஒரு நீதியரசரால் ஏமாற்றப்பட்டது என்பது, தமிழகத்தில் நீதி இறந்து போய்விட்டது என்ற உணர்வை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையே தற்போதைய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின்  3-வது கூட்டம் நாளை (23.08.2021) திங்கள்கிழமை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து நாளை சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் சென்னை,மயிலாப்பூரிலுள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையரை சந்தித்து ஏமாற்று வேலைகளை மீண்டும் செய்ய வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்வதற்காகவும், இனிமேலாவது எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட சமுதாயங்களை அழைத்துப் பேசாமல் வெளிப்படைத் தன்மை இல்லாமல், அனைத்து உறுப்பினர்களையும் அழைத்துப் பேசாமல்,  முறையான ஆய்வு இல்லாமல் அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்வதற்காகவும், 23.8.2021ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆணையத்தின் கூட்டத்தில் 115 எம்பிசி/டிஎன்டி, 146 பிசி சமூக பிரதிநிதிகள் கொண்ட சமூகநீதிக் கூட்டமைப்பின் குழு ஆணையத்திடம் தங்கள் தரப்பு நியாயங்களை விளக்க நேரம் ஒதுக்கித்தரக்கோரி ஆணையத்திடம் மனு அளிக்க உள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved