🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அதிகாரத்தை பயன்படுத்தி அநியாயத்தை தொடராதீர்| பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையரிடம் வலியுறுத்தல்|

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில், வன்னியர் சாதிக்கு மட்டும் தனி உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை அறிந்து பிற 115 சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் 21.01.2021 அன்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது போலீஸ் தரப்பில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ஆணையரை சந்திக்க ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர்.தணிக்காசலம் அவர்களிடம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் ஒரு சாதிக்கு மட்டும் உள் ஒதுக்கீடு வழங்க ஆணையம் பரிந்துரை செய்யக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.


அப்பொழுது 115 சமூகபிரதிநிகளிடம் பேசிய நீதியரசர் இன்றைய கூட்டத்தில் அந்தமாதிரியான தீர்மானம் எதுவும் நிறைவேற்றும் திட்டமில்லை என்று கூறினார். நீதியரசரின் வாக்குறுதியை நம்பிய சமுதாய தலைவர்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பினர். ஆனால் நீதியரசரின் வாக்குறுதிக்கு மாறாக வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டம் 02/2021-ன் அறிமுக உரையில் தமிழநாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் வன்னியர் உள் ஒதுக்கீட்டிற்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டு ஆணையரின் பரிந்துரை குறித்து பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய வட்டாரங்களில் விசாரித்த வகையில், ஆணையத்தின் பிற உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமலே தலைவர் தன்னிச்சையாக செயல்பட்டது தெரியவந்தது. இதன் மூலம் முன்னாள் நீதியரசர் 115 சமூகங்களை மட்டுமல்லாமல், ஆணையத்தின் சக உறுப்பினர்களையே ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.


இதற்கிடையே இன்று (23.08.2021) தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூன்றாவது கூட்டம் மயிலாப்பூரிலுள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வந்தது. இச்சட்டத்திற்கு எதிரான உயர்நீதி மன்றத்தில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையில், இன்றைய கூட்டத்திலும் 115 சமூகங்களுக்கு எதிராக மோசடியான நடவடிக்கையில் ஆணையத்தின் தலைவர் ஈடுபடலாம் என்ற அச்சத்தில், ஆணையத்தின் தலைவர், உறுப்பினர் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் மின்னசல் மூலம் அனுப்பப்பட்டது. மேலும் 115 சமுதாயத்தின் சார்பில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டு, இன்று அதை நிறைவேற்றியது. இன்று காலை ஆணையத்தை முற்றுகையிட்டு ஆணையரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து மனு அளிக்கப்பட்டதோடு, ஆணையரிடமே 115 சமூகங்களுக்கு அநீதி இழைத்தது நியாயமா என்ற கேள்வி எழுப்பப்பட்ட்டது. அதற்கு பதிலளித்த ஆணையர் அரசின் வேண்டுகோளை தாம் நிறைவேற்றியதாகவும், நீங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். முன்னதாக ஆணையத்தின் கூட்டத்தில் கலந்துகொண்ட சில உறுப்பினர்கள் தங்களை கலந்தாலோசிக்காமல் உள்ஒதுக்கீட்டிற்கு பரிந்துரை செய்தது குறித்து கேள்வி எழுப்பியபொழுது, தான் அவ்வாறு எந்த பரிந்துரையும் வழங்கவில்லை என்று மறுத்ததாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்றைய கூட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் சிங்கராஜ் ராஜகம்பளம், செந்தில்குமார், முகப்பேர் இராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

  

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved