🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விரும்பிய பாடப்பிரிவில், கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தவிப்பு! - கிடைக்குமா தடை உத்தரவு?

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு வழங்கப்பட்டு வந்த 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில், வன்னியர் சாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி கடந்த எடப்பாடி.க.பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு 08/2021 சட்டத்தை கொண்டு வந்தது. இதை எதிர்த்து 115 சமூகங்கள் குரல்கொடுத்து வருகின்றன. தற்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வன்னியருக்கு 10.5 விழுக்காடு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது. தங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதியளித்தார்.

ஆனால் ஆட்சிக்கு வந்தபின்னர் தங்கள் வாக்குறுதிக்கு மாறாக எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு கடைபிடித்த அதேவழியில் திமுக அரசும் செல்வது 115 சமுதாய மக்களுக்கும் அதிர்ச்சியளித்தது. சமூகநீதி பேசும் அரசுகள் கைவிட்டுவிட்ட நிலையில், இச்சட்டத்திற்கு எதிராக கடுமையாக தொடர்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதால், 115 சமுதாயங்களோடு 146 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களும் இணைந்து "சமூகநீதி கூட்டமைப்பு" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் சட்டப்போராட்டமும், களப்போராட்டமும் தினம்தோறும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இன்று நீதியரசர் எம்.எம்.சுந்தரேசன் மற்றும் நீதியரசர் எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு வழக்கறிஞர் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கக்கோரினர். அதை நிராகரித்த நீதிபதிகள் தடை உத்தரவு வழங்குவது பற்றி நாளை விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்றுவரும் நிலையில் கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் வன்னியர் உள் ஒதுக்கீடு காரணமாக காலியிடங்கள் அதிகரித்துள்ளதாகவும், வன்னியர் அல்லாத எம்பிசி சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கான கட் ஆப் மதிப்பெண் உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மாணவ-மாணவியருக்கு தாங்கள் விரும்பும் பாடப்பிரிவிலும், கல்லூரிகளிலும் சேரமுடியாமல் தவித்து வருகின்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved