🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இடஒதுக்கீடு இறுதி விசாரணை? நடக்கும் ஆனா நடக்காது....

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டம் 08/2021-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளின் விசாரணை நேற்று மதியம் நீதியாசர்.M.M.சுந்தரேஷன் நீதியரசி.எஸ்.கண்ணம்மாள் அமர்வு முன்பு 30-வது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் துவக்கத்திலேயே அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இந்த வழக்கில் இதுவரை நடைபெற்ற வாதம், எந்தெந்த நீதிபதிகள் வழக்கை விசாரித்தார்கள், ஏன் இதுவரை நிலுவையில் வைத்தார்கள் என்பதையும், உச்சநீதி மன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளையும் குறிப்பிட்டு காலஅவகாசம் வேண்டுமென்று கேட்டார். அதனை தொடர்ந்து வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலு அவர்களின் வழக்கில் மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி ஆஜராகி, சட்டம்கொண்டுவரப்பட்டு இத்தனை மாதங்கள் ஆகியுள்ள நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்பொழுது தடைவிதித்தால் பெரிய சிக்கலை உருவாக்கும் எனவும், உச்சநீதிமன்றம் இச்சட்டத்திற்கு தடைவிதிக்க மறுத்துள்ளதாகக்கூறி, தற்போதைக்கு தடைவிதிக்க வேண்டாம் என்றும் வேண்டுமானால் இறுதி விசாரணை நடத்தட்டும் என்ற வாதத்தை முன்வைத்தார். 

அதனை தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்  கே.எம்.விஜயன் மற்றும் மூத்தவழக்கறிஞர் ராகவாச்சாரி ஆகியோர் வாதாடினர். மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் வாதத்தில் இடஒதுக்கீடு வழங்குவதற்கோ, உள்ஒதுக்கீடு வழங்குவதற்கோ அன்றைய தேதியில் உரிமை இல்லை தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை மூலமாக ஜனாதிபதிக்கே அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தீர்க்கமாக முன்வைத்தார். மேலும் தற்பொழுது பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை இச்சட்டப்படி சேர்ப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டுமென்றும், வேலைவாய்ப்பில் பின்பு வரக்கூடிய தீர்ப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கலாம் என்றும்  வலியுறுத்தி கூறினார்.  அதற்கு பிறகு வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த வழக்கில் இப்போது தடைவிதிக்கவில்லை என்றால் பாதிப்பின் தாக்கம் அதிகமாக இருக்கும், இன்னும் அதிகமாக வழக்குகள் தாக்கலாகக்கூடும் என்றும் வாதிட்டார். அவர் வாதத்தின் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டுவந்த தேதியன்று தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இல்லை என்பதை ஒரு ஆவணம் மூலமாகவும், சட்டத்தின் கீழும் விரிவாக படித்து காட்டினார். 

வாதங்களைக் கேட்டுக்கொண்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எல்லா வழக்குகளிலும் இச்சட்டத்திற்கு தடைவிதிக்க எல்லா முகாந்திரமும் இருப்பதை முன்பத்தியில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு,  இந்த வழக்கின் இறுதி விசாரணை உடனடியாக நடத்தப்படவேண்டும் எனவும் செப்'14 அன்று இறுதி விசாரணை நடக்கும் எனவும் உத்தரவு பிரப்பித்தார்கள்.

உடனடியாக தடைகொடுக்கவில்லை என்றாலும் இச்சட்டப்படி தற்பொழுது நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கை மற்றும் பணியிட நியமனங்கள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டதென்றும், இந்த நிபந்தனையை இடஒதுக்கீட்டால் பயனடைவோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்திரவிட்டார்கள். 

இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் உச்சநீதிமன்ற நீதிபதியாக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.  இதனால் இந்த வழக்கை விசாரிக்க மீண்டும் புதிய அமர்வு அறிவிக்கப்பட வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  எனவே செப்'14 இறுதி விசாரணை நடைபெறுவது சந்தேகமே. 

115 சமூகங்களுக்கெதிரான தொடர் சதிகள் அரசியல் மற்றும் நீதிமன்ற அரங்குகளில் தொடர்ந்து அரங்கேறி வருவதாக காணொளி கூட்டங்கள் மூலம் தொடர்ந்து விவாதித்து வரும் சமூகநீதி கூட்டமைப்பினர், இரு  திராவிட கட்சிகளின் அரசியல் விளையாட்டால் பல லட்சம் மாணவ-மாணவியரின் எதிர்காலம் பாழடிக்கப்பட்டுள்ளது என்று  குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved