🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பறிக்கப்பட்ட உரிமையை மீட்போம் - வன்னியர் உள்ஒதுக்கீட்டிற்கு எதிராக திரளும் திருப்பூர் கம்பளத்தார்கள்!

எம்பிசி பிரிவில் வன்னியர் சாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு வழங்க வழிவகை செய்யும் தமிழ்நாடு சட்டம் 08/2021 -ஆல் தொட்டிய நாயக்கர் சமூகம் உள்ளிட்ட 115 சமுதாயங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவ-மாணவியர்களின் கல்வி உரிமையும், அரசு வேலையில் சேரவேண்டும் என்ற இளைஞர்களின் கனவும் பறிபோய் உள்ளது.


அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமான இந்த சட்டம் முந்தைய அதிமுக அரசால் முழுக்க முழுக்க வாக்கு அரசியலுக்காக நிறைவேற்றப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. முந்தைய அரசின் அதே நிலைப்பாட்டில் உள்ள திமுக அரசும் 115 சமுதாயங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், வன்னியர் உள்ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவே நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்து வருவது இச்சமுதாய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வன்னியர் சாதிபோல் 115 சமுதாயங்களுக்கு அரசியல் ரீதியான பின்புலமே, மக்களிடம் இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வோ இல்லை என்பதால் 115 சமுதாயங்களை திமுகவும், அதிமுகவும் கிள்ளுக்கீரையாக நினைத்து செயல்பட்டு வருவது அவர்களின் நடவடிக்கைகளில் இருந்து தெளிவாகிறது. இதனால் கொதித்தெழுந்துள்ள சமூகங்கள் நீதிமன்ற மூலமாகவும், அரசியல் தளங்களிலும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துவருகிறது. எல்லா மட்டங்களிலும் அரசியல் லாப-நஷ்ட கணக்குகளை பார்ப்பதால், மக்களை ஒன்றுதிரட்டுவதே தீர்வு என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஒவ்வொரு சமுதாயமும் ஊர்க்கூட்டம், திண்ணைப்பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகளும் மற்ற சமுதாயங்களுடன் இணைந்து தீவிரமாக பணியாற்றிவருவதுடன், மக்களை சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்து வருகின்றது. நாமக்கல், கரூர் மாவட்டங்களைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கம்பளத்து உறவுகளும் இடஒதுக்கீடு பிரச்சினையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், பாரப்பாளையத்தில் திரு.ராமசாமி, திரு.ரஞ்சித்குமார், திரு.ராஜன் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வழக்கறிஞர் மூர்த்தி, ஆடிட்டர்.செந்தில்குமார், நடராஜன், மயில்சாமி,தங்கவேல்,உதயகுமார் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் நடைபெற்று வரும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை முன்னெடுப்பதுடன், செப்டம்பர்-06ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள "இடஒதுக்கீடு உரிமைமீட்பு பேரணி"யில் கலந்துகொள்வதென முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளை தொடங்கவும் தீர்மானித்துள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved