🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விலகிநிற்கும் விருதுநகர்!- விதியை மாற்றும் நாமக்கல்!

பாளையங்களின் வீழ்ச்சி, ஆங்கிலேயர்களின் வெளியேற்றம், ஜனநாயகத்தின் துவக்கம் இக்காலகட்டங்களில் தொட்டிய நாயக்கர் இனத்தை கட்டமைத்து, மறுசீரமைத்து இனத்தை வளர்த்ததில் தென்மாவட்டங்களின் பங்களிப்பு குறிப்பாக விருதுநகரின் பங்களிப்பு வரலாற்றுப் பக்கங்களில் மாறா இடம் பெற்றது. கம்பளத்தாரின் வீரத்திற்கு எப்படி பாஞ்சாலங்குறிச்சி அடையாளமோ அதுபோலத்தான் வீழ்ந்துகிடந்த சமுதாயத்தை மறுகட்டமைப்பு செய்து,  எம்பிசி இடஒதுக்கீட்டு உரிமை பெற்றுக்கொடுத்ததில் விருதுநகர் சமுதாய தலைவர்கள், மக்களின் பங்கு மகத்தானது. 

கம்பளத்தார் இனத்திற்கு  முதல் சங்கம் கண்ட திரு P.S.M பெருமாள் நாயக்கரில் தொடங்கி,  அதனையடுத்து வந்த திரு.வையப்பநாயக்கர்,திரு.பா.ராமசாமி, திரு.கா.சுப்பு, திரு.சுந்தரராஜன், திரு.ஜெயராஜ்,  திரு.வரதராஜன், திரு.நல்லையா, திரு.சங்கரவேலு, திரு.மாரையா என எண்ணற்ற அரசியல் மற்றும் சமுதாய தலைவர்களை இச்சமுதாயத்திற்கு வழங்கியோ அல்லது அவர்கள் சமுதாயப்பணியாற்ற களம் அமைத்துக்கொடுத்து நூறாண்டுகாலம் இச்சமுதாயத்தை இயக்கும் மையப்புள்ளியாக விருதுநகர் விளங்கியுள்ளது என்றால் மிகையல்ல.  எண்ணற்ற ஆசிரியப் பெருமக்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்களை வழங்கி பெருமை கொள்ளச்செய்தது விருதுநகர் என்பது கம்பளத்தார் வரலாற்றில் மறுக்கமுடியாத உண்மை. 

கம்பளத்தாருக்கு விருதுநகர் பெற்றுக்கொடுத்த இடஒதுக்கீடு உரிமை, இன்று வன்னியர் உள்ஒதுக்கீட்டால் பறிபோய் உள்ளநிலையில் இச்சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியதாகியுள்ளது. மற்ற சமுதாயங்கள் எல்லாம் விழித்துக்கொண்டு வன்னியர் இடஒதுக்கீட்டிற்கெதிராக சங்கநாதம் முழங்கி வரும் நிலையில்,கம்பளத்தார்கள் வழக்கு தொடுக்கக்கூட வக்கற்று கையறு நிலையில் இருப்பது, மாற்றோர் எள்ளி நகையாடும் வகையில் இருந்தது. இடஒதுக்கீட்டால் பயன்பெற்ற பல லட்சம்பேர் உண்டு,  சமுதாய வாக்குகளைப் பெற்று தலைவர்கள் ஆனவர்கள் உண்டு, இருந்தும் என்ன பயன்? எது நமக்கான எதிர்காலம், எது நம் இனத்திற்கான சுவாசம் என்பது குறித்த தெளிவான பார்வை யாரிடம் உண்டு? ஜனநாயகம் செழித்து வளர, சமூகநீதியை நிலைநாட்ட சமுதாயங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை இடஒதுக்கீடு.  இதன் அருமையும், பெருமையும் முக்கியத்துவமும் நாடாண்ட பரம்பரையினருக்கு தான் அதிகம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் விசித்திர சமுதாயம் விலகி நின்று வேடிக்கை பார்க்கிறது. 

மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்ற இயக்கவியல் கோட்பாட்டின்படி, சூழல்கள் மாறியுள்ளது.  விருதுநகர் அமைத்துக்கொடுத்தபாதையில் பயணித்து, பெற்றுக்கொடுத்த இடஒதுக்கீட்டு உரிமையை பயன்படுத்தி, நாமக்கல் மாவட்ட கம்பளத்தார்கள் அரசியல், கல்வி, நிர்வாகம், தொழில் என அனைத்து துறைகளிலும் நாலுகால் பாய்ச்சலில் சென்றுகொண்டுள்ளனர். நாதியற்றுக்கிடந்த சமுதாயத்திற்கு நாங்கள் உண்டு என்று நாமக்கல் உறவுகள் சமுதாயப்பணிக்கு முன்களப்பணியாற்ற துணிந்துள்ளது நிம்மதியை தருகிறது.  

விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கே.நாகராஜனும், நாமக்கல் தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி அவர்களும் தங்கள் தளபதிகளோடு மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மக்களை தட்டியெழுப்பி செப்டம்பர்'06-இல் சென்னையில்  நடைபெற்வுள்ள இடஒதுக்கீடு உரிமை மீட்பு பேரணிக்கு  படை திரட்டி வருகின்றனர்.  இனத்திற்கு ஆபத்து வருகையில் முதலில் களமிறங்குபவனே இனமான போராளி. அந்த அடைமொழிக்கு இலக்கணமாக நாமக்கல் தாண்டி கரூர், ஈரோடு, திருப்பூர், சேலம் பகுதிகளில் படை திரட்டும் பணியை கூடுதலாக செய்கிறார் கொ.நாகராஜன்.

பிறந்த சமூகத்தின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் போராடவில்லை எனில் அந்த சமூகத்தின் முதல் சாபக்கேடு நீதான் என்றார் அண்ணல் அம்பேத்கார். அதை சமூகத்தின்பால், எதிகால சந்ததியியனரின்பால் அக்கறைகொண்டவர்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டு இடஒதுக்கீட்டு உரிமையை மீட்க கைகொடுக்க அழைக்கிறது சமூகம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved