🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கடைநிலை சாதிகளுக்கு தேவை அரசியல் மாற்றம்-தொல்.திருமாவிடம் வலியுறுத்தல்.

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டுள்ள 115 சாதிகள் இணைந்து உருவாக்கியுள்ள சமூகநீதி கூட்டமைப்பின் சார்பில் செப்டம் 6-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள சமூகநீதி பேரணிக்கு ஆதரவு கோரியும், சட்டமன்றத்தில் இச்சமூகங்களின் குரலை எதிரொலிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு சமூக நீதி கூட்டமைப்பினர் பல்வேறு கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். 

ஏற்கனவே தமிழக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கக்கோரி பலவகைகளில் பலமுறை முயற்சி செய்தும் பலனேதும் கிட்டவில்லை. அதேபோல் மதிமுக, காங்கிரஸ், இ.கம்யூ, ம.கம்யூ, பாஜக போன்ற பலகட்சிகளிடம் கோரிக்கை வைத்தும் யாரும் பொருட்படுத்தவில்லை. 

இதற்கிடையே இன்று சமூகநீதி கூட்டமைப்பின் சார்பில் அதன் நிர்வாகிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு கோரினர். சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் வன்னியர் உள்ஒதுக்கீட்டால் ஏற்படும் அனைத்து பிரச்சினை குறித்தும் பொறுமையாக கேட்டறிந்தார். பேரணி நடத்த காவல்துறை ஏற்கனவே எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே வழங்கியபின்,  திடீரென கிண்டியருகே புதிய இடத்தில் நடத்த காவல்துறை கேட்டுக்கொண்டதையும் சுட்டிக்காட்டப்பட்டது.  உடனடியாக காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு இராஜரத்தினம் ஸ்டேடியம் அருகிலேயே பேரணி நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். 

அச்சந்திப்பில் தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பில் கலந்துகொண்ட வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின்  பொதுச்சொயலாளர் செந்தில்குமார் இராமராஜ் பேசும்பொழுது மிகவும் பிற்படுத்தப்பட்டுள்ள இச்சமுதாய மக்கள் திராவிட இயக்க சித்தாந்தங்களையும், தலைவர்களையும் ஏற்றுக்கொண்டு, அக்கட்சிகளுக்கு ஆதரவாகவே இதுவரை பயணித்துள்ளதாகவும், ஆனால் நீதிக்கட்சியில் தொடங்கிய சமூகநீதி கடந்த நூறாண்டுகளாக பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை சாதிகளிடம் சிக்கிக்கொண்டு, அனைத்து சமூகத்திற்கும் சமூகநீதி வழங்காமல் தேக்கமடைந்துள்ளதாகவும்,  இதனால் இடைநிலை சாதிகளிலுள்ள சிறுபான்மை சாதிகளுக்கு உரிய பிரதிநிதித்துவமும், வாய்ப்புகளும் கிடைக்கவில்லையென்றும் எடுத்துரைத்தார். ஆகவே சமூகநீதியை கடைநிலை சாதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழகத்தில் அரசியல் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது. 

பலகட்சிகள் எங்களின் வலியையும், வேதனையையும் செவிமடுத்துவரும் நிலையில் சமூகநீதிக்காக தொடர்ந்து போராடிவரும் தாங்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இச்சந்திப்பின் முடிவில் செப்'06 ஆம் தேதி பேரணியில் விடுதலை சிறுத்தைகளின் சார்பில்  தொல்.திருமாவளவன் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்ததுடன், தொடர்ந்து சமூகநீதி கூட்டணியோடு இணைந்து பயணித்து அனைவருக்கும் சமூகநீதியை வென்றெடுக்க உறுதுணையாக விடுதலை சிறுத்தைகள் இருக்கும் என்றும் உறுதியளித்தார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved