🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சபாஷ்! சரியான திசையில் அரசியல் வழிகாட்டும் ஈரோடு மாவட்ட உடன்பிறப்புகள்!

மாவீரன் கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்பது தமிழகத்தில் வாழும் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கை. அரைநூற்றாண்டுகால மக்களின் கனவை நிறைவேற்றும் விதமாக, மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு முதல் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே சிலை அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

தமிழகத்தில் பெரும்பான்மை சமுதாயங்களாக கூறிக்கொள்ளும் சாதிகளெல்லாம், ஒருசில குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே அடர்த்தியாக உள்ளதால், தேர்தல் அரசியலின் மையங்களாக தங்களை முன்னிறுத்திக்கொள்கின்றனர். ஆனால் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைப் பொறுத்தவரை, கிருஷ்ணகிரியில் தொடங்கி தூத்துக்குடி வரை 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெரும்பான்மை அடிப்படையில் இல்லையென்றாலும் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற வகையில் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அரசியல் ரீதியாக ஒன்றுதிரளாத அல்லது ஒற்றுமைப்படுத்தாத காரணத்தால், கிராம அளவிலான கிளைக்கழக செயலாளர், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளைத்தாண்டி, பெரிய அளவில் கோலேச்சமுடியாத சூழல் இருந்துவருகிறது. மாநிலங்களவை, வாரியங்கள், அறநிலையக் குழுக்கள், நீதிமன்ற பணிகள் போன்ற எண்ணற்ற நியமன பதவிகள் அரசியலில் இருந்தாலும், எதிலும் கம்பளத்தாருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. கட்சிகளில் இருப்பவர்களும் தாழ்வுமனப்பான்மை, மக்கள்தொகை பெரும்பான்மை அல்லது பொருளதார சூழ்நிலைகளை காரணம் காட்டி தங்களை தாங்களே குறைத்து மதிப்பிடும் போக்கு மேலோங்கி வளர்ந்துள்ளது.

அரசியல் களத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள அல்லது தலைமையின் கவனத்தைப் பெறுவதற்கு எளியவழி விளம்பரம். அதை உணர்ந்தவர்கள் பிறரைப்பாராட்டி சுரொட்டி ஒட்டியாவது சுயவிளம்பரம் தேடிக்கொள்வர். அந்தவகையிலும் கம்பளத்தார்கள் பின்தங்கியே இருக்கின்றனர். அதற்கு மாற்றாக கம்பளத்தார் வரலாற்றில் முதல்முறையாக, ஒரு மாவட்டத்தில் ஒரு குறுப்பிட்ட இயக்கத்தில் உள்ள கம்பளத்தார்கள் ஒன்றிணைந்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து முரசொலி நாளிதழில் விளம்பரம் செய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

சட்டமன்றத்தில் நடைபெற்ற மானியக்கோரிக்கையின்பொழுது கடந்த 7-ஆம்தேதி அறிவிப்பு வெளியானவுடன்,  நமது தொடர்பு வட்டத்தில் ஆளும்கட்சியில் உள்ள அனைத்து மாவட்ட உறவுகளுக்கும் தனிசெய்தி மூலம் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாயநலச்சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை செயல்படுத்தியுள்ள ஈரோடு மாவட்ட உறவுகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். ஈரோடு மாவட்டம் காட்டிய வழியில் பிற மாவட்ட உறவுகளும் பயணிப்பார்கள் என்று நம்புகிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved