🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திமுக,அதிமுக விற்கு நேர்ந்துவிடப்பட்ட அடிமை விலங்குகளா நாம்?

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட /சீர்மரபுப் பழங்குடிகள், 146 பிற்படுத்தப்பட்ட சமுதாய உறவுகளிடத்தில் எழுகின்ற மிகப்பெரிய சந்தேகம், ஏன் சமூகநீதிக்  கூட்டமைப்பு 9 மாவட்டங்களில் நடைபெறுகின்ற கிராம உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறது?

அரசியல் நோக்கம் காரணமா? அல்லது அரசியல் தூண்டுதல் காரணமா? அல்லது அவசரத்தில், ஆத்திரத்தில் செய்வதறியாது இப்படி செய்கிறதா? என்று பலவிதமான கேள்விகள் உங்களுக்குள் எழலாம்.  திமுக, அதிமுக கட்சிகளின் கூட்டணியில் பல கட்சிகள் இருக்கின்றது. அவர்களெல்லாம் ஏழை எளிய மக்களின் நலன் காப்பவர்கள் தானே? எப்படி அவர்களுக்கு எதிராக வாக்களிக்க முடியும்? என்ற கேள்வியும் உங்களுக்குள் எழலாம். ஆனால் நீங்கள் பொறுமையாக சற்று கவனித்து பாருங்கள் உங்களுக்கு தெளிவாக புரிந்துவிடும்.

சாதிவாரி புள்ளி விபரங்களை மோசடி செய்து 115 ஏழை எளிய சாதிகளின் அடிப்படை உரிமைகளைப் பறித்து ஒரு சாதிக்கு மட்டும் இடஒதுக்கீடு கொடுத்த மிக பிற்போக்கான செயலை கண்டித்து ஒரு கட்சி கூட வாய்திறக்கவில்லை. இருந்தும் நாம் நேரடியாக அவர்களின் கட்சித்தலைமையிடங்களுக்கு சென்று நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நேரடியாகவும், கடிதங்கள் மூலமும் விளக்கினோம். ஒருவர் கூட திரும்பிப்பார்க்க வில்லை.  இருக்கின்ற எல்லா கட்சியின் இன்றைய அரசியல் சித்தாந்தமும் கூட்டணி தர்மம், கத்தரிக்கா தர்மம் என்றெல்லாம் வறட்டுக் கொள்கைகளை வடிவமைத்துக் கொண்டு, ஜனநாயக நாட்டின் அடிப்படையையே அடித்து நொறுக்கிய பொழுதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்ற கட்சிகள்தான் கூட்டணிக் கட்சிகள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தனி ஒரு ஜாதிக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது என்பது சாத்தியமே இல்லாதது. இந்திய தேசம் முழுவதும் 4 லட்சத்து 76 ஆயிரம் ஜாதிகள் இருப்பதாக 2011ல் நடந்த ஜாதிவாரி சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியலிட்டுள்ளது. இத்தனை ஜாதிகளுக்கும் எப்படி தனித்தனியாக இடஒதுக்கீடு கொடுக்க முடியும்? பெரிய ஜாதி, சிறிய ஜாதி என்ற அடிப்படையில் பெரிய ஜாதிகளுக்கு மட்டும் தனி இட ஒதுக்கீடு, சிறிய ஜாதிகளுக்கு எல்லாம் இட ஒதுக்கீடு இல்லை என்பது மூடத்தனத்தின் உச்சம் அல்லவா? அதை எதிர்கிறோம், இதை எதிர்கிறோம் என்பவர்கள், இந்த ஜாதிவாரி இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதை நாம் வேதனையோடு பார்க்கவேண்டும், பதிவு செய்ய வேண்டும்.  அடிப்படையில் எல்லா அரசியல் கட்சியின் நோக்கமும் மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, உண்மை சர்வநாசம் ஆனாலும் பரவாயில்லை, அவர்கள் ஆட்சி,அதிகாரத்தில் பங்குபெற வேண்டும். அப்போதுதான் வெற்றியாளர்களாக காட்டிக்கொள்ள முடியும். ஆயிரம் வெற்றிபெற்று இருந்தாலும் அநீதியை வேடிக்கை பார்ப்பது மனிதத்தன்மையற்ற செயல்.   எனவேதான் இந்த முறை உரிமைகளைப் பறிகொடுத்த 115 சமூகங்களும்  சமூகநீதிக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தைப் புரிந்துகொண்ட 146 சமூக்ங்களும்  கீழ்க்கண்ட சமூகநீதி  அநீதிகளை அரங்கேற்றி வரும் இந்த திமுக,அதிமுகவை வீழ்த்தினால் மட்டும்தான், அவர்கள் செய்கின்ற தவறுகளைத் திருத்தி,  உண்மையான சமூகநீதியை இந்த மண்ணில் மீட்டெடுக்க முடியும்.

தனி ஜாதி இட ஒதுக்கீடு என்பது சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல, தர்மத்துக்கு எதிரானது, சமத்துவத்திற்கு எதிரானது, பகுத்தறிவுக்கு எதிரானது, பெரியாரின் கோட்பாட்டுக்கு எதிரானது, மற்ற ஜாதிகளை இழிவுபடுத்துவது. எனவே இதுபோன்ற ஒரு பிற்போக்கான நிலைப்பாட்டை வாக்கிற்காக செய்த அரசியல் கட்சிகளை வாக்குச்சாவடியில் வைத்துத்தான் பாடம் புகட்ட வேண்டும்.

தனிப்பட்ட முறையில் அந்த கட்சிகளை எதிர்ப்பது நமது நோக்கமல்ல. ஆனால் மக்கள் உரிமைகளைச் சூரையாடுவதை, இது போன்ற அதிகார ஆசை பிடித்த கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதற்காக தான் இந்த தேர்தல் எதிர்ப்பு பிரச்சாரம் என்பதை உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உங்களுக்கு எந்தவிதமான தயக்கமும் அச்சமும் இருக்கக்கூடாது. அப்படி இருக்குமேயானால் எதிர்காலங்களில் பல சமூகங்கள் தங்கள் அடையாளங்களையும், வேர்களையும் இழந்து, உரிமைகளையும் பறிகொடுத்து, வாழ்வதற்கே வழியில்லாமல் மிகப்பெரிய சிரமங்களுக்கு ஆளாக நேரிடும். அந்த பாதிப்பு பல தலைமுறைகளைச் சென்றடையும் என்பதை புரிந்து கொண்டு, உடனடியாக 9 மாவட்டங்களில் இருக்கின்ற தங்கள்  சமூக அமைப்புகளை தொடர்பு கொண்டு அதிமுக திமுக கூட்டணிக்குக் கடுகளவும் வாக்களிக்க கூடாது என்ற பிரச்சாரத்தை மிகத்தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.

இது நமது பிள்ளைகளுடைய கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள். அவர்களுக்கு உரிய, சட்டம் வழங்கிய, நியாயமான உரிமையை நாம் மீட்டெடுக்க வில்லை என்றால் நாம் ஒரு பெற்றோர்களாக, ஒரு உறவினர்களாக நமது பிள்ளைகளுக்கு நாமே துரோகம் செய்கிறோம் என்று அர்த்தம். பணம், காசு, அரசியல் பதவிகளுக்காகவும், தயவுசெய்து பிள்ளைகளுக்கு துரோகம் செய்ய வேண்டாம்.அது மகாபாவம் ஆகிவிடும். அந்த பாவம் பல தலைமுறைகளை சூனியமாகிவிடும் என்பதை புரிந்துகொண்டு, ஒரு தேர்தல் போனால் போகட்டும் அடுத்த தேர்தலில் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். மக்கள் நலன் காக்கவே கட்சிகள். கட்சிகளுக்காக மக்கள் அல்ல. திமுக, அதிமுக விற்கு மாறி மாறி வாக்களிக்க நாம் ஒன்றும் அக்கட்சிகளுக்கு நேர்ந்துவிடப்பட்டவர்கள் அல்ல என்பதை உணர்ந்து உணர்த்துவோம். எனவே இந்த தேர்தலில் மக்கள் விரோத, சமூகநீதியைப் படுகொலை செய்த இரண்டு கூட்டாளிகளையும், உண்மையைப் பேச மறுத்த அரசியல் கட்சிகளையும் எதிர்த்து வாக்களிப்பது நமது அடிப்படைக் கடமை, காலத்தின் அறைகூவல். 

கலைஞர், MGR, அம்மா மறுத்த, ஒரு சாதி வன்னியர் இடஒதுக்கீட்டை, 261 சமூகங்களைத் துச்சமாக நினைத்து நாட்டையும் சட்டத்தையும் துரும்பாக நினைத்து 30 நிமிடங்களில் மோசடி சட்டம் & 30 வினாடிகளில் செயல்படுத்த அரசு ஆணை, அக்கிரம அரசுகள்

மருத்துவ படிப்பு சேர்க்கையில் 69% இடஒதுக்கீடு வழங்க சட்டமிருந்தும் 34.5% மட்டுமே வழங்கும் மோசடி அரசு

வெளிமாநில மாணவர்களுக்கு தமிழக வேலையைத் தாரைவார்த்த அரசு

சாதிவாரி சென்செஸ் கோராத அரசு

நீட் மூலம் கல்வி உரிமை பறிப்பு

DNT/DNC இரட்டைச் சான்றிதழ் இழிவு

விவசாயிகள் உயிரை எடுக்க ஆதரவு

டாஸ்மாக் கடையை மூடாத மோசடி அரசு

தமிழனின் மானத்தை அடகுவைத்த அரசு

அதிகாரத்திற்காக எதையும் செய்யும் அரசு

துரோகத்தைத் துரத்துவோம் அதிமுக & திமுகவை வீத்துவோம்.

இவண்,
சமூகநீதிகூட்டமைப்பு.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved