🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஆந்திரா மாநிலம் நெல்லூரில் கம்பளத்தார்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் தமிழகத்தின் கமுதி,பெருநாழி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கம்பளத்தார்கள் கால்நூற்றாண்டிற்கும் மேலாக வசித்து வருகின்றனர். நெல்லூரிலுள்ள ஆடை அணிகலன், காலணிகள், பெண்கள் அணியும் ஆலங்காரப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு கூலி வேலைக்கு சென்ற பெரும்பாலான கம்பளத்தார்கள் படிப்படியாக சாலையோர வியாபாரிகளாக சுயதொழில் தொடங்கி இன்று நெல்லூரின் புகழ்பெற்ற வர்த்தகப்பகுதியாக அடையாளப்படுத்தப்படும்  "சண்டே மார்க்கெட்" பகுதியிலுள்ள 80 சதவிதமான கடைகளின் உரிமையாளர்களாக இருந்து வருகின்றனர். இவர்களுடன் பெருநாழி, குமராபுரம் சுற்றுவட்டாரப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக கடைகளை நடத்தி வருகின்றனர்.


அமைதியாகச் சென்றுகொண்டிருந்த இவர்களின் தொழிலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அங்குளள வழக்கறிஞர் ஒருவர் 2011-இல் சண்டே மார்க்கெட் பகுதியில் உள்ள கடை ஒன்றை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றுள்ளார். அதை நம்மவர்களும், இஸ்லாமிய சகோதர்களும் இணைந்து முறியடித்தனர். ஆனால் ஒவ்வொருமுறை கடைகள் கைமாறும்பொழுதும் அதைக்கைப்பற்றத்துடிக்கும் வழக்கறிஞரின் செயல் தொடர்ந்து சவாலாக இருந்தபோதிலும் முறியடித்து வந்தனர். இதனால் சலிப்புற்ற நபர் அரசியல்கட்சியின் பின்புலத்தோடு இரவோடு இரவாக கண்காணிப்புக்கேமராக்களை துண்டித்துவிட்டு, காவலாளிகளை மிரட்டி செல்போன்களை பறித்துக்கொண்டு தகவல் வெளியே செல்லாமல் தடுத்து, அங்குள்ள 99-ஆம் நெம்பர் கடையை அகற்றிவிட்டு ஆக்கிரமித்துக்கொண்டார்.


தாமதமாக தகவல் அறிந்து அங்கு சென்ற கடை உரிமையாளர்கள் அருகில் உள்ள கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமேராவின் பதிவுகளை கைப்பற்றி போலீசாரிடம் ஒப்படைத்து, ஆக்கிரமிப்பாளரை கைது செய்து இடத்தை மீட்டுக்கொடுக்க கோரிக்கை வைத்தனர். முதலில் உரிமையாளருக்கு ஆதரவாக இருப்பதுபோல் காட்டிக்கொண்ட போலீசார், வழக்கறிஞரின் அரசியல் பின்புலம் காரணமாக இந்தத்துறை, அந்தத்துறை என காலதாமதம் செய்யத் தொடங்கினர். 


விவகாரம் திசைமாறிச்செல்வதை உணர்ந்த கம்பளத்தார்களும், இஸ்லாமியர்களும் இணைந்து அறவழியில் கடைகளை மூடி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் இறங்கினர். இச்சம்பவம் நெல்லூர் பகுதியில் பரபரப்பைக் கிளப்பியதால் காவல்துறையினர் தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்பிரச்சினை காரணமாக சண்டே மார்க்கெட் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு போர்க்கோலமாக காட்சியளிக்கிறது. நெல்லூர் கம்பளத்தாரின் போராட்டம் வெல்லட்டும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved