🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசு பெருசா? இல்லை கம்பளத்தான் வாக்கு பெருசா? விடைகொடுத்த மக்கள்!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்பணி நேற்று (12.10.2021) காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக கூட்டணி கட்சிகளின் ஆதிக்கம் முழு அளவில் தெரிந்தது.

இத்தேர்தல் பெரும்பான்மையாக வடமாவட்டங்களில் நடைபெற்றதால், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் போட்டியிடும் வாய்ப்பு கிட்டவில்லை. இருந்த போதிலும் ஆங்காங்கே கிடைத்த ஒருசில வாய்ப்புகளில் போட்டியிட்ட கம்பளத்து வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது சமுதாயத்தினருக்கு புத்துணர்ச்சியும், நம்பிக்கையும் அளித்துள்ளது. 


அந்தவகையில் கம்பளத்தார் வாக்குகள் அறவே இல்லாத இராணிப்பேட்டை மாவட்டம் வாலஜாபேட்டை ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளராக போட்டியிட்ட புவனேஸ்வரி பாண்டியன் அமோக வெற்றிபெற்ற செய்தி முதலில் கிடைத்தது. 


இதனைத்தொடர்ந்து தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியம் சுப்பிரமணியபுரம் ஊராட்சி மீது கம்பளத்தார்களின் கவனம் திரும்பியது. இதற்கு காரணம் 4300 வாக்குகள் கொண்ட சுப்பிரமணியபுரம் ஊராட்சியில் கம்பளத்தார்களின் வாக்குகள் 200-க்கும் குறைவு என்பது தான். பொதுவாக கிராம ஊராட்சிகளில் வெற்றி தோல்வியை சமுதாய வாக்குகளே தீர்மானிக்கும் என்பது எழுதப்படாத விதி. குறிப்பாக சிறுபான்மை சமுதாய மக்கள் உள்ளாட்சி தேர்தலில் களமிறங்குவதற்கு கனவுகூட காணமாட்டார்கள். இப்படியான களச்சூழலில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் பெரும்பான்மையாகவுள்ள சுப்பிரமணியபுரம் ஊராட்சியில், அதற்கு அடுத்தபடியான பெரும்பான்மை பலத்துடன் நாடார் சமுதாயத்தினரும் அதற்கடுத்து முக்குலத்தோரும் உள்ளனர். தொட்டிய நாயக்கர், ஆசாரி, வண்ணார், நாவிதர் போன்ற சமூகத்தினர் மிக சொற்ப அளவிலேயே உள்ளனர். இதில் தொட்டிய நாயக்கர் சமுதாய வாக்குகள் வெறும் 4 விழுக்காடு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதனிடையே தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் ஊராட்சி மன்றத் தலைவர் கனவில் இருந்த பெரும்பான்மை சமுதாய வேட்பாளர்கள் களமிறங்க தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. மனு திரும்பப்பெரும் காலக்கெடுவிற்கு முன்பே பேரங்கள் ஆரம்பமாக தேர்தல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அப்பகுதியில் மிகவும் பிரபலமான தொழிலதிபரின் ஆதரவுடன் கள்மிறங்கிய வேட்பாளர் முதல் சுற்றுலேயே சில போட்டியாளரை வீழ்த்திவிட, இறுதிப்பட்டியலில் 8 நபர்களே மிஞ்சினர். இப்படி இறுதிப்பட்டியலில் இடம்பிடித்தவர்களும் அடுத்தடுத்த சுற்றுகளில் பணபலமிக்க சமுதாய பின்புலம்,  தொழிலதிபரின் நேரடி கவனிப்பில் விலைபோய்விட,  கோடிகளில் பேசப்பட்ட பேரத்தை இடது கையால் புறந்தள்ளிவிட்டு சொற்ப வாக்குகளைக் கொண்ட கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்.இராம் குமார் துணிச்சலுடன் களத்தில் நின்றார். தேர்தல் வாக்குப்பதிவு முன்தினம்வரை வீசிய வலையையும், பின்னப்பட்ட சதியையும் சுக்குநூறாக்கி இராம்குமார் தேர்தலை எதிர்கொண்டது சுப்பிரமணியபுரத்தை கொதிநிலைக்கு கொண்டு சென்றது. 


களத்தில் உறுதியுடன் நின்ற வழக்கறிஞர் இராம்குமாருக்கு சமூகநீதி ஆதரவு கூட்டமைப்பின் ஆதரவினை தெரிவித்து தேர்தல் பிரச்சாரத்திற்கு விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன்,  நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, போடி.சௌந்திரபாண்டியன் ஆகியோர் சென்றது  அங்குள்ள சமுதாய மக்களுக்கு உற்சாகத்தை அளித்தது.  பலதரப்பட்ட சமுதாயத்தினரும் இராம்குமாருக்கு மறைமுக ஆதரவு தெரிவித்து வருவதால், வெளியூரில் இருந்து சென்று தலைவர்கள் ஆதரவு திரட்டுவது எதிர்மறையாக சென்றுவிடும் என்பதால் சமுதாய முக்கியத் தலைவர்களை மட்டும் சந்தித்துவிட்டு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


தேர்தல் இறுதிநாளை எட்ட எட்ட பணம் ஆறாக பெருக்கெடுத்ததில் இராம்குமாருக்காக பிரச்சாரம் செய்தவர்களுக்கே சற்று அச்சத்தை ஏற்படுத்தியது. தேர்தல் நாளன்று வாக்காளர்களுக்கு இருந்தது இரண்டே வாய்ப்புதான் யாருக்கு வாக்களிப்பது? எதற்கு வாக்களிப்பது? காசுக்கு வாக்களிப்பதா...  இல்லை கம்பளத்தானுக்கு வாக்களிப்பதா என்பதே!...


இந்தக்குழப்பத்திற்கு இறுதி விடைகொடுத்துள்ள வாக்காளர்கள், மொத்தமுள்ள 4245 வாக்காளர்களில், 3030 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ததில், வழக்கறிஞர். இராம் குமாருக்கு அதிகபட்சமாக 1385 வாக்குகளும்,  எதிர் தர்ப்பு வேட்பாளருக்கு 1278 வாக்குகளும் அளித்து, வழக்கறிஞர். இராம்குமாரை சுமார் 110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிமகுடத்தை சூட்டியுள்ளனர்.  எஞ்சியுள்ள வாக்குகளை பிற ஆறுவேட்பாளர்களும் 38,20,4,9,7,16 வாக்குகளைப் பெற்று வைப்புத்தொகையை பறிகொடுத்தனர்.


இனமா? பணமா? வாங்கிய காசா? வாக்குத்தவறாத கம்பளத்தானா? என்ற பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், சிறுபான்மை சமூகமாக இருந்தாலும் வாக்குத்தவறாத, நாணயமான, நடுநிலை தவறாத நாயக்கருக்கு வாக்களித்தால் நாடு நலம்பெறும் என்ற நம்பிக்கையில் பலதரப்பட்ட சமுதாய மக்களும் மனமுவந்து வாக்களித்துள்ளது வழக்கறிஞர். இராம்குமாரின் பொறுப்பை அதிகப்படுத்தியுள்ளது எனலாம்.  மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் நல்ல திறமையான நிர்வாகத்தை வழங்கி சிறந்த ஊராட்சி மன்றத்தலைவராகவும், சிறந்த ஊராட்சியாகவும் விளங்கிட வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.  கம்பளத்தார்கள் மீது மாற்று சமுதாய உறவுகள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு தமிழகத்திலுள்ள கம்பளத்தார்களின் சிரந்தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்து, உங்கள் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் என்றென்றும் எங்கள் செயல்பாடுகள் தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved