🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விருதுநகர் மாவட்டம் செங்குளத்தில் போராட்டம்! போலீசார் குவிப்பு!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டத்திலுள்ள செங்குளம் கிராமத்தில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமுதாயத்தினர் 300-ஆண்டுகளாக வழிபட்டுவரும் காளியம்மன் கோவிலுக்கு பீடம் அமைப்பது தொடர்பாக பிரச்சினை இருந்துவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் அக்கிராம மக்கள் ஒன்றுகூடி தங்கள் வழிபட்டுவரும் காளியம்மன் கோவில் முன்பீடம் அமைப்பதற்கு தீர்மானித்துள்ளனர். இந்த முடிவிற்கு எதிராக அக்கிராமத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன் வசித்து தற்பொழுது வேறு இடத்திற்கு குடிபெயர்ந்த ஒருவர் உள்ளாட்சித்தேர்தல் முன்விரோதம் காரணமாக வழக்கு தொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கை காரணம் காட்டி மக்களின் பீடம் அமைக்கும் முயற்சிக்கு வாய்மொழியாக தடை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது. 


ஆனால் நீதிமன்றம் தடை உத்தரவு எதுவும் வழங்காத நிலையில் பீடம் அமைக்கும் பணியை தொடரவேண்டும் என்று மக்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இப்பிரச்சினையில் தீர்வு எட்டப்படாதநிலையில், விடுதலைக்களம் கட்சியினர் கிராம மக்களை ஒன்று திரட்டி கடந்த மாதம் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பிரச்சினைக்கு தீர்வுகாண அதிகாரிகள் முயற்சி எதுவும் செய்யாததால், இன்று விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக ஏற்கனவே அறிவித்து, நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டியிருந்தனர்.


அதன்படி இன்று முர்றுகைப்போராட்டம் நடைபெறவிருந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே செங்குளம் கிராமத்தில் டிஎஸ்பி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கிராம மக்கள் வெளியேறாதபடி கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து செங்குளம் விரைந்த விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் மற்றும் அக்கட்சியின் சட்ட ஆலோசகரும், பத்து ரூபாய் இயக்கத்தின் நிறுவனருமான நல்வினை விஸ்வராஜு ஆகியோரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அங்கேயே 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட செங்குளம் பரபரப்பானது.


இதனையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார், போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி அழைத்துச்சென்றனர். விடுதலைக்களம் கட்சியின் தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் சென்ற குழுவினர் மாவட்ட கண்காணிப்பாளரை நேரடியாக சந்தித்துப்பேசினர். அதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றவர்கள் ஆட்சியர் இல்லாத காரணத்தால் மக்கள் தொடர்பு அதிகாரியிடம் மனு அளித்தனர்.

போலீசாரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகண்டு பீடம் அமைக்க உதவவேண்டுமென்றும், இல்லையெனில் நவம்பர் 22-ஆம் தேதி தொடர் சாலை மறியலில் ஈடுபடப்போவதாக போலீசாரிடம் தெரிவித்ததாக அறிவித்துள்ளனர்.  


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved