🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மேற்கு மண்டலத்தில் புதிய கூட்டணி! - ஊராட்சி மன்றத் தலைவர் வெற்றி!

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் ஒன்றியம், கூடச்சேரி ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஊராட்சியில் கொங்கு வேளாளர்கள்அதிகமாக உள்ள இக்கிராமத்தில், அதற்கு அடுத்தபடியாக தாழ்த்தப்பட்டோர்களும்,அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் வேட்டுவக்கவுண்டர், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். 2019-இல் நடைபெற்ற தேர்தலில் ஊராட்சி மன்றத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கொங்குவேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் காலமாகி விட்டதால் தற்பொழுது இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில் கொங்குவேளாளர்கள் ஆதரவுடன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரும், அவரை எதிர்த்து வேட்டுவக்கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த M.C.சுப்பிரமணி என்பவர் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினரின் ஆதரவுடன் சுயோட்சையாக போட்டியிட்டார். இந்த இருபிரிவு மக்களும் நீண்ட நாட்களாக நல்லுறவுடன் இருந்தாலும், DNT பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு சமுதாயங்களும் DNT ஒற்றைச்சான்றிதழ், வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு ஆகியவற்றிற்கு எதிராக இணைந்து போராடி வருவது மேலும் இவ்விரு சமுதாயங்களை நெருக்கமாக்கியுள்ளது. இந்த நெருக்கம் தற்பொழுது நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத்தேர்தலிலும் எதிரொலித்தாக தெரிகிறது.

தேர்தல் முடிவுகளின்படி மொத்தமுள்ள 1611 வாக்குகளில் 1236 வாக்குகள் பதிவாகியது. இதில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினரின் ஆதரவுடன் போட்டியிட்ட M.C.சுப்பிரமணி அவர்கள் 775 வாக்குகள் பெற்று எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரைவிட  409 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். இங்கு தொட்டிய நாயக்கர் சமுதாய வாக்குகள் 130 உள்ளது. இதனை சிந்தாமல் சிதறாமல் சுப்பிரமணி அவர்களுக்கு நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி மற்றும் நடராஜன் ஆகியோர் பெற்றுக்கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாமக்கல் தவிர கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு கிராம ஊராட்சிகளில் இவ்விரு சமுதாயத்தினரும் இணைந்து நல்ல நட்புடன் வாழ்ந்து வருகின்றனர். தற்பொழுது இது அரசியல் கூட்டணியாக மாறியுள்ளதும், இக்கூட்டணியில் இன்னபிற DNT சமூகங்களும் இணையும்பட்சத்தில் எதிர்காலத்தில் மேற்கு மண்டல அரசியல் போக்கை மாற்றும் என்று கூறுகிறார் பத்திரிக்கையாளர் அன்பரசன்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved