🔴 LIVE | முப்பெரும் விழா 2023


முடிந்தது இறுதி விசாரணை! சமூகநீதி மண்ணில் சமூகநீதி நிலைநாட்டப்படுமா?

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கெதிராக தொடரப்பட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து பல்வேறு இடர்பாடுகளையும், தடைகளையும், சூழ்ச்சிகளையும் தாண்டி இறுதி விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேற்று நிறைவு பெற்றது. முன்னதாக பிப்ரவரி மாதம் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டவுடன் அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதி மன்றத்திலும் பல வழக்குகள் பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது, இந்த வழக்கை சம்மந்தப்பட்ட உயர்நீதிமன்றம் முதலில் விசாரணை செய்யட்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இதனால் அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது. இதற்கிடையே தமிழக சட்டமன்றத் தேர்தலும், அதனையடுத்து கொரோனா நோய் தொற்றும் பரவியதை அடுத்து வழக்கு விசாரணை தாமதமாகியது. கொரோனா நோய்த்தொற்று முடிந்து, வழக்கு விசாரணைகள் காணொளி மூலம் தொடங்கிய நிலையில், வழக்கு விசாரணையை  நிரந்தர அமர்விற்கு கொண்டு வருவதற்கே மனுதாரர்கள் போராட வேண்டியிருந்தது. முதலில் தலைமை நீதிபதி அமர்விற்கு மூன்றுமுறை விசாரணைக்கு வந்தபொழுது, அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த மற்றொரு நீதிபதி வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபடியால், வழக்கு விசாரணக்கு எடுத்துக் கொள்ளும்பொழுது, இரு நீதிபதிகள் வெவ்வேறு நாட்களில் விசாரணையிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தால் வழக்கின்நிலை கேள்விக்குறியானது.

அதனையடுத்து வந்த அமர்வில் ஒரே ஒருமுறை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொண்டபின் அந்த அமர்வில் இருந்த நீதிபதி உச்சநீதிமன்றத்திற்கு தேர்வு பெற்றதால் மீண்டும் வழக்கின் நிலை கேள்விக்குள்ளானது. இப்படி பல்வேறு தடைகளைத்தாண்டி நீதியரசர்கள் துரைசாமி மற்றும் முரளி சங்கர் அமர்விற்கு வந்தபொழுதுதான் மனுதாரர்களுக்கு நிம்மதி பிறந்தது. இறுதி வரை மனுதாரர்கள் தரப்பில் போராடிய சமூகநீதிக்கூட்டமைப்பினர், வழக்கை தொடர் விசாரணைக்கு கொண்டு வந்ததில் முதல் வெற்றி பெற்றனர்.

இதனையடுத்து தினசரி வாதங்கள் அடிப்படையில் நடைபெற்று வந்த விசாரணை, தசரா பண்டிகை விடுமுறைக்குப்பின், கடந்த  திங்கள்கிழமையிலிருந்து மீண்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் முடிந்து நேற்று மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வாதங்களை வைத்தார். இதனையடுத்து எழுத்துப்பூர்வமான வாதங்களை திங்கள்கிழமைக்குள் தாக்கல் செய்ய உத்திரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இதனால் கடந்த 8 மாதங்களாக தொடர்ந்துவந்த இடஒதுக்கீடு வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved