🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திமுக அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறோம்! - புலம்பும் சாதிகள்! -கண்டுகொள்ளுமா அரசு?

ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியாவில் மன்னர்களின் ஆளுகைகளுக்குட்பட்ட சுதேச சமஸ்தானங்கள் (உம்.திருவாங்கூர், ஹைதராபாத்,கஷ்மீர்) மற்றொன்று ஆங்கிலேயர்களின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள மாகாணங்கள் (உம்.சென்னை மாகாணம்) என இரண்டுவிதமான ஆட்சிமுறைகள் இருந்தது. ஆங்கிலேயர்களை எதிர்க்காத சமஸ்தானங்களில் மன்னர்களின் நேரடி ஆட்சி, ஆங்கில அரசுக்கு அவர்கள் வரி செலுத்திக்கொள்வர். ஆங்கிலேயர்களுக்கு வரிகொடுக்க மறுத்து எதிர்த்த சிறு,குறு மன்னர்களை அழித்து, ஒழித்து கைப்பற்றப்பட்ட இடங்களில் ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சிமுறை இருந்தது.

அந்த மாதிரியான மாகாணங்களில் இரட்டை ஆட்சிமுறை 1919-இல் நடைமுறைக்கு வந்தது. அதன்படி நடந்த முதல் தேர்தலில் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராக 1921 ஜனவரியில் முதலமைச்சர் கடலூர் ஏ.சுப்பராயலு தலைமையில் அமைச்சரவை அமைந்தது. அப்பொழுதுதான் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று நீதிக்கட்சி உறுப்பினர் ஏ.தணிகாசலம் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே உடல்நிலை குன்றியதால் முதலமைச்சர் ஏ.சுப்பராயலு ஜூலை 11-இல் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து பனகல் அரசர், முதலமைச்சராக ஆனார். அவரது ஆட்சி அமைந்ததும் ஆகஸ்ட் 5ஆம் நாள் சட்டமன்றத்தில் நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் நடேசனார் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். “பார்ப்பனரல்லாதாருக்கு நியாயமான விகிதாச்சார அளவில் வேலைவாய்ப்புகள் கிடைப்பது இல்லை. எனவே,அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் விகிதாச்சார அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும்” என்பதுதான் நடேசனாரின் தீர்மானம் ஆகும். அரசே இதனை ஆணையாக வெளியிட இருப்பதாக முதலமைச்சர் பனகல்அரசர் சொன்னதன் அடிப்படையில் நடேசனார் இந்த தீர்மானத்தை திரும்பப்பெற்றார். அதனடிப்படையில் நீதிக்கட்சி அமைச்சரவையின் முதல் வகுப்புரிமை அரசாணை (Communal G.O) 16.9.1921 அன்று போடப்பட்டது. M.R.O. Public ordinary service G.O.no 613, dated 16.9.1921- என்பது இந்த அரசாணைக்குப் பெயர். தற்பொழுது வகுப்புரிமை அரசாணை என்பது சமூகநீதி அரசாணை என்று அழைக்கப்படுகிறது.

சமூகநீதி அரசாணையின் நூறாண்டு நாளினையொட்டி, சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு அரசால் “சமூகநீதிக் கண்காணிப்பு குழு“ அமைக்கப்படும் எனவும், இக்கண்காணிப்புக் குழு கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும், வழிகாட்டும், செயல்படுத்தும். மேலும், இக்குழு இந்தப்பணிகளை மேற்கொள்வதோடு, இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும் எனவும், இக்குழுவில் அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம் பெறுவார்கள் எனவும் முதல்-அமைச்சர்  ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக சுப. வீரபாண்டியன் அவர்களை தலைவராகவும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தனவேல், முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஏ.ஜெய்சன், ஆர்.ராஜேந்திரன், கோ. கருணாநிதி உறுப்பினர்களளை நியமனம் செய்து “சமூகநீதிக் கண்காணிப்பு குழுவினை“ அமைத்து நேற்று முன்தினம் (23.10.2021) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் அறிவித்துள்ள இந்தக்குழுதான் தற்பொழுது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள வன்னியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள "சமூகநீதி கூட்டமைப்பினர்", திமுக அரசு பதவியேற்றுக்கொண்டதிலிருந்தே ஒருகுறிப்பிட்ட சமுதாயத்தை முன்னிறுத்தியே செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே கடுமையான எதிர்ப்பிற்குப்பின்னரும் ஒருசாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை வெளியிட்ட திமுக அரசு, தமிழகம் முழுவதும் பரந்து விரிந்துள்ள முத்தரையர், முக்குலத்தோர், வேட்டுவர், தொட்டியநாயக்கர், ஒட்டர், வண்ணார்,நாவிதர் உள்ளிட்ட சாதிகளை முற்றிலும் புறக்கணித்து வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மற்றும் ஆணையர்களாக ஒருகுறிப்பிட்ட சாதியினரையே நியமனம் செய்வதும், மக்கள்தொகை புள்ளிவிபரக்கணக்கெடுப்பு ஆணையராக நியமனம் செய்வது, அத்துறையின் அமைச்சராகக்கூட அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே நியமனம் செய்வது என சமூகநீதிக்கட்சியாக இல்லாமல் சாதிக்கட்சியாக திமுக அரசு செயல்படுவதாக சமூகநீதி கூட்டமைப்பினர் ஏற்கனவே குற்றஞ்சாட்டி வரும் நிலையில், சமூகநீதி கண்காணிப்புக்குழுவிலும் இதர பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு பிரதிநித்துவம் வழங்காமல் இக்குழுவிலும் அதே சாதிக்கு வாய்ப்பு வழங்குவது எந்தவகையான சமூகநீதி என்பதே அவர்களின் கேள்வியாக உள்ளது.

ஏற்கனவே 10.5 வ்ழுக்காடு இடஒதுக்கீட்டால் இந்த ஆண்டு மட்டும் கல்லூரி சேர்க்கையில் 10000 இடங்களை பறிகொடுத்துள்ளதாக கூறும் சமூகநீதிக்கூட்டமைப்பினர், இச்சட்டத்தால் அரசு வேலைவாய்ப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர். எல்லா அரசு வேலை வாய்ப்பிலும் நூற்றுக்கு பதினோரு பேர் ஒருகுறிப்பிட்ட சாதியினரே இருப்பது வருங்காலத்தில் அச்சாதியின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும், சமூகநீதி அரசாணையின் நூறாவது ஆண்டு நாளைக்கொண்டாடும் அரசு இதனை கவனிக்காமல், வாக்கு அரசியலுக்காக கடந்து செல்வது தமிழகத்தில் மற்றொரு சமூகநீதி புரட்சிக்கு வித்திடும் என்றும் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக புரட்சி செய்து வெற்றிகண்ட  திராவிட இயக்கங்கள், பார்ப்பனர் ஆதிக்கத்தை ஒழித்து வேறொரு சமூகத்தின் ஆதிக்கத்திற்கு வழிவகை செய்வது என்னவகையான சமூகநீதி? இது "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்பவர்களின் வாய்க்கு அவல் கிடைத்தது போல. இது வருங்காலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது பிற சமுதாயங்களின் முழுமையாக கவனத்திற்கு வரும்பொழுது வெளிப்படும். சமூகநீதியை அடிப்படையாகக்கொண்டு வளர்ந்த இயக்கம் சமூகநீதியை பங்கிடுவதில் செய்கின்ற பெரும் தவறால் வீழாமல் சுப.வீரபாண்டியன் தலைமையிலான குழு காப்பதே பெரும் சவாலாக இருக்கும் என்பதே கணிப்பு.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved