🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திங்கள் வரும் தீர்ப்பு! வரமா? சாபமா?

கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 08/2021 வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டு சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை கடந்த வெள்ளியன்று (22.10.2021)  நிறைவுபெற்று, திங்களன்று (25.10.2021) இருதரப்பு வழக்கறிஞர்களின் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபொழுது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முறையான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரங்கள் இல்லாமல் இடஒதுக்கீடு வழங்கியிருப்பது, இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் அம்பாசங்கர் தாக்கல் செய்த அறிக்கை, அந்த ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களே நிராகரித்த நிலையில், தனிப்பட்ட அம்பாசங்கர் அறிக்கையை ஏற்றுக்கொண்டு இடஒதுக்கீடு வழங்கியது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல,  தமிழ்நாடு அரசின் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு சட்டம், ஜனாதிபதியின் ஒப்புதல்  பெற்று அரசிலமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டிருப்பதால்,  அந்த சட்டத்தில் திருத்தம் செய்யாமல் புதிய சட்டத்தை கொண்டுவரமுடியாது, அரசியலமைப்புச் சட்டப்படி தனி சாதிக்கு இடஒதுக்கீடு வழங்க சட்டத்தில் இடமில்லை போன்ற வாதங்களை பிரதானமாக முன்வைத்து வாதிட்டனர். 

சட்டச்சிக்கல்களும், முக்கியத்துவம் வாய்ந்த பல கேள்விகளும் எழுப்பப்படும் இந்த வழக்கின் தீர்ப்பு, இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டின் போக்கை மாற்றும் என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

30-க்கும் மேற்பட்ட வழக்குகள், ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், பல நீதிமன்ற தீர்ப்புகள் எல்லாம் அடிப்படையாக கொண்டுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு, விசாரணை முடிந்து ஒருவாரகால இடைவெளியில் வெளியாவது சமூகநீதி செயல்பாட்டாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி வந்தாலும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று நினைக்கும் தரப்பு மேல்முறையீட்டிற்கு உச்சநீதிமன்றம் செல்லும் வாய்ப்புள்ளது.  வன்னியர் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் மனுதாரர்கள் மட்டும் சட்டப்போராட்டத்தோடு, மக்கள் போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று சமூகநீதி செயல்பாட்டாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். மனுதாரர்களுக்கு தீர்ப்பு வரமா இல்லை சாபமா என்று திங்கள்கிழமை தெரிந்துவிடும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved